காதல் பிரிவில்

போகாதே போகாதே
தனிமையில் தள்ளிப் போகாதே......

உள் நெஞ்சம் கத்துகின்றதே
உன் செவிகளில் விழவில்லையா?......

இதழ் திறந்தும் அழைக்கின்றதே
என் மொழிக்கும் ஒலி இல்லையா?......

இதயம் இன்னும் சுருங்குதே
இதயத்திலே முட்கள் மலருதே......

உயிரே நீ பிரிகையில்
என் உயிர் மூச்சும் பிரிகின்றதே......
போகாதே போகாதே......


தாமரை மொட்டு தண்ணீரில்
கொடி இழந்து தவிக்கையில்
பகல் வந்திட மடல் மலர்ந்திடுமா?...
வேர் இல்லாது மிதந்துதான் அழுகிடுமா?......


தவறி விழுந்து வீணை
நரம்பு அறுந்துப் போகையில்
சுதிகள் சேர்ந்திட இசை பிறந்திடுமா?...
விரல் இல்லாது வீணைதான் இசைத்திடுமா?......


சோதனை என்பது வளர் பிறையாய்
வேதனை எனக்கது தொடர் கதையாய்
உடைந்தே நொருங்குது கொண்ட உணர்வுகளும்
கல் எறிந்தக் கண்ணாடியாய்......


ஒட்டித் தான் நானும் பார்க்கின்றேன்
நெருங்க மறுக்குதே விரிசலும்...
தவம் போல் கிடைத்த நேசமும்
தழுவிடும் போதே நழுவிப் போகுதே......


தன்னிலை மறந்து சில நொடிகள்
தலைச் சுற்றித் தான் சாய்கிறேனே......
போகாதே போகாதே......


காற்றில் கலைந்துச் செல்லும் மேகங்களாய்
கலைந்து நீதான் சென்றாலும்
மழைத் தூவும் கார்முகிலாய்
என்னோடு நீதான் இணைந்திடக் கூடாதா?......


துள்ளி விழும் மீன்களாய் கரையில்
நினைத்தே தேகம் துடிக்கிறேனே...
ஆசையாய் கொஞ்சும் அன்புக் கரங்கள்
கோபத்தில் கூட எனைத் தீண்டாதோ?......


பாதம் சுடும் பாறைக்கு தெரியும்
உள்ளுக்குள் ஈரம் உள்ளதென்று
கண்ணீர் விடும் கண்களுக்கு தெரியாதா?...
உன் நெஞ்சுக்குள் வசிப்பது நான் தானென்று......


பறந்து திரியும் பறவைகள் உணர்ந்திடும்
தனது இணை எதுவென்று
உதிரம் பாயும் இதயம் உணராதா?...
உன் நிழலில் விரிவதும் நான் தானென்று......


உதிரும் காய்ந்த சருகாய்
பிரிவெனும் தீ தான் எரித்திட உருகுகிறேனே......
போகாதே போகாதே......

எழுதியவர் : இதயம் விஜய் (28-Jun-16, 10:52 am)
Tanglish : kaadhal PIRIVIL
பார்வை : 813

சிறந்த கவிதைகள்

மேலே