மூட நம்பிக்கையோ, மூடாத நம்பிக்கையோ
மூட நம்பிக்கையோ, மூடாத நம்பிக்கையோ... தமிழர்களின் வாழ்வில் ஒன்று கலந்து விட்டது, அநேக நம்பிக்கைகள் இதோ உங்களுக்காக .....
எண்ணெய் தேச்சு குளிச்சிட்டு கல்யாண வீட்டுக்குப் போகக் கூடாது...
சூரிய அஸ்தமனத்திற்கு பின், தலைமுடி வெட்டக் கூடாது, நகம் வெட்டக் கூடாது, சலவைக்கு அழுக்குத் துணிகளை போடக் கூடாது,
ஊசி, உப்பு, மோர், தீப்பெட்டி ஆகியவற்றை இரவல் கொடுக்கக் கூடாது.
விடிந்ததும், முகம் பார்க்கும் கண்ணாடி, நிறை குடம், கொடி, விளக்கு, மஞ்சள், தாமரை, தங்கம், சூரியன், கடல், கோபுரம், மழை, மலை, கன்றுடன் கூடிய பசு, மனைவியின் முகம், பைத்தியக்காரன், கருங்குரங்கு, யானை, மிருதங்கம் ஆகியவற்றை காண்பது நன்மை தரும்.
வீட்டுத் தரையை பெருக்கிச் சுத்தம் செய்யும் போது, குப்பைக் கூளத்தை சேகரித்து, வீட்டுக்கு வெளியே கொட்டி விட வேண்டுமென்று, தாய், தன் மகளுக்கு அறிவுறுத்துகிறாள். குப்பையை மூலையிலே குவித்து வைத்தால், அவள் ஒரு நல்ல நாளில் (திருவிழா, திருமணம் முதலிய நாட்களில்) வீட்டுக்கு விலக்காக இருக்க நேர்ந்து, மங்கல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பேற்றை இழப்பாள் என்பதும் ஒரு நம்பிக்கை.
வீட்டு மூலைகளில் தூசி சேர்வது கடனுக்கும், கவலைக்கும் அறிகுறி.
உடைந்த கண்ணாடியில் முகம் பார்க்கக் கூடாது.
அமாவாசைக்கு நான்காம் நாளில் சந்திரனைப் பார்த்தால், நினைவாற்றல் பாதிக்கப்படும்.
நகத்தை கடிப்பது, தண்ணீரை வீணாக்குவது, கால் ஆட்டுவது, வீட்டுக்குள் ஆமைகள் புகுவது ஆகியவை, வரப்போகும் வறுமைக்கு அறிகுறி.
கால்களை ஒன்றுக்கொன்று குறுக்காக வைத்துக் கொள்வதும், கைகளை முழங்கால் அருகே கட்டிக் கொள்வதும் பிணத்தின் அடையாளங்கள்.
கோடித் துணிகளை மூலையில் மஞ்சள் தடவிய பிறகே உடுத்த வேண்டும்.
இடது கையால் எதையும் கொடுப்பதும், வாங்கிக் கொள்வதும், மற்றொரு சாராரை அவமதிப்பதாகும்.
வடக்கே தலையும், தெற்கே காலும் வைத்துப் படுக்கக் கூடாது. இதுவே மரணத்திற்குரிய கடவுளின் திக்குகள்.
வடகிழக்கு, தென்மேற்கு மூலையில் தான் கிணறு வெட்ட வேண்டும்.
வெள்ளிக்கிழமைகளில் பயணம் மேற்கொள்ளக் கூடாது, வீட்டுச் செல்வத்தை பிறருக்குக் கொடுப்பது கூடாது. தானம் மட்டும் இந்த கிழமையில் கொடுக்கலாம்.
மூன்றாம் எண் குருவுக்கு உரியது. 3ந் தேதியில் பிறந்தவர்கள் குரு ஆதிக்கம் கொண்டவர்கள்.
இப்படி எவ்வளவோ நம்பிக்கைகளை கடைபிடித்து, வாழ்வை அர்த்தமுள்ளதாக்கிக் கொண்டனர் நம் மக்கள்..