வாடியப் பூக்கள்
![](https://eluthu.com/images/loading.gif)
கலைமகளின் அறிவைக் குடித்து வளர்ந்து
அலைமகளின் பொறுமைப் பிடித்து நடந்து
மலைமகளின் வீரம் வடித்து வாழ்ந்தவளின்
தலை எழுத்தின்று தலைகீழ் ஆனதே......
மூன்று முடிச்சுகள் போட்டக் கழுத்தில்
முத்தமிட்ட மஞ்சள் தாலிக் கயிறு
விதியின் சூழ்ச்சியால் அறுந்திட - இரதியின்
வாழ்வு ஒற்றைப் புள்ளி ஆனதே......
வட்ட நிலா பொட்டு வைத்த
வளைந்த அழகான நெற்றியின் மத்தியில்
வளரும் பிறை தேய்ந்து மறைந்ததும்
வானம் வரும் இருளும் வந்ததே......
காற்றில் பேசிடும் கார்மேகக் கூந்தலில்
கவலை மறந்த மல்லிகை பூக்களோ?...
குழல் சேர்ந்திட முடியா தென்று
குலப்பத்தில் மலர்ந்திட மறுக் கின்றதே......
கைகளில் குலுங்கும் கண்ணாடி வளையல்கள்
கைக்கு விலங்கென்று உடைத் தெறிந்தாரோ?...
கால்களில் சினுங்கும் கொலுசிற்கு - காலம்
முடிந்த தென்று ஓய்வு தந்தாரோ?......
வானவில் வழங்கிய வண்ணச் சேலை
வஞ்சியின் கண்ணீரில் சாயம் போனது...
கணவன் கரைந்து தூரம் சென்றதால்
கைம்பெண் கோலம் பூணுகிறாளே......
உதிர்த்தப் பூக்கள் மாலையில் சேரும்
உதிர்ந்தப் பூக்கள் குப்பையில் சேருமோ?...
சோடி மலரில் ஒன்றுப் பிரிந்ததால்
வாடிப் போனதே இந்த மலர்......
ஒருத்திப் புதைந்தால் ஒருத்தி முளைக்கிறாள்...
ஒருவன் புதைந்தால் ஒத்தையில் தவிக்கிறாளே...
ஒருமுறை மாலை விழுந்தக் கழுத்தில்
மறுமுறை விழுந்திடக் கூடாதோ?......
மங்களத் திருநாள் விழாக் காலத்தில்
மங்கையிவள் வந்தால் அமங்களம் ஆகுமோ?...
வீட்டின் உள்ளே பூட்டி வைத்து
வீண் பழி சுமத்து கின்றாரே......
செல்லும் வழியில் தனிமைப் பயணம்
சொல்லும் முள்ளாய் தைக்கும் தருணம்...
கல்லாய் நெஞ்சம் கொண்டு - காயம்
செய்தனர் இவள் மனதையே......
செந்தீக்குள் கருகிக் கொண்டே யிருக்கும்
செந்தாமரை மலர் இவளைப் பார்த்து
சொந்த உறவுகளும் வர்ணிக்கும் விதத்திலே
செத்துப் போகத்தான் துடிக் கின்றாளே......
இராமன் விழிகள் கண்டிராத சீதையிவள்
கண்ணன் கண்கள் காணாத இராதையிவள்
பாவையரும் சேர்ந்து ஒதுக்கிய கோதையிவள்
வலிகள் சுமந்து வாழும் பேதையிவளே......