திருக்குறளும் திருமந்திரமும்-4
. திருக்குறளும் திருமந்திரமும்-4
நாம் நம்முடைய அறிவைப் பற்றி ஆராயும்போது, எந்த ஒரு பொருளை எடுத்து ஆராய்ந்தாலும் அப்பொருளைப் பற்றி நமக்கு அறிவு இருக்கிறது என்றும், சில நேரங்களில், இதே பொருள் குறித்து நேற்றைய பொழுதில் இத்தகைய ஞானம் நமக்கு இல்லை என்றும் உணர்கின்றோம். இந்த உணர்வினை,
‘அறிதோறும் அறியாமை கண்டற்றால்”
என்பார் திருவள்ளுவர். நாம் நமக்குள்ள அறிவையும் அறிகிறோம், அறியாமையையும் அறிகிறோம். முழுமையாக அறியாத ‘அரை வேக்காட்டு’ நிலையினையும், முழுமையாக அறிய வேண்டும் என்ற ஆவலையும், தேவையை உணர்ந்து தாழ்ச்சியை ஆடையாக போர்த்துகின்ற நேரத்திலும், ஆக இரு வேறு நிலைகளில் காலப்போக்கில் முழுமையான அறிவுடைப்பொருள் ஒன்று இருக்க வேண்டும் என்றும் உணர்கிறோம்.. இதுவே, நமது வழ்வில் நல்ல அனுபவம் ஆகிறது. அதாவது, ஆன்மாவாகிய நமது நிலை என்ன என்ற கேள்வியை நமக்கு நாமே எழுப்பிக் கொள்கிறோம். அப்பொழுதுதான் அது ஆன்மிக தேடல் ஆகிறது. இதன் விடையாக, ஆன்மிக விளக்க நூல்கள், முழுமையான அறிவுடையது சித்துப் பொருள் முழுமையாக அறியாமையை முழுவதுமாய் உடையது அசித்துப் பொருள் என்றும் இவ்விரண்டனுக்கும் தொடர்பு உடைய நம்முடைய ஆன்மா, ஒளி எது, இருள் எது என வேறுபடுத்திப் பார்க்கும் திறன்உடையது என விளக்குகின்றன... எனவே அறிவுடைப்பொருள் சித்து என்றால், அறிவற்றது அசித்து என்றும் கொண்டோமானால், உயிரானது அவ்விரண்டனுக்கும் இடைப்பட்ட சிதசித்து எனப்படும். இதனையே சைவ சித்தாந்த நூலாகிய திருமந்திரமும் திருக்குறளும் விளக்க முற்படுவதால், இவற்றின் கட்டமைப்பைப் பற்றி ஆய்தல் நமக்கு நலம் பயக்கும்
தெய்வத்தமிழ் எனப்போற்றப்படும் தமிழில் தோன்றிய நீதி நூல்களில் முன் மாதிரியான நீதி பயப்பதும், சிந்தனை ஊற்றாகவும் விளங்குவது திருக்குறள் ஆகும். இது 133 அதிகாரங்களையும் 1330 குறள் வெண்பா பாடல்களையும் கொண்டது. ஒவ்வொரு அதிகாரத்திற்கும் பத்துக் குறள்கள் என அமைந்து, ஒரு கருத்தை பல கோணத்தில் அலசி ஆராயும்படி அமைக்கப்பெற்றுள்ளன. அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்ப்பால் என மூன்று பால்களும் எட்டு இயல்களும் கொண்டது.
பாயிரம் தவிர்த்து அறத்துப்பால், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என்ற மூன்று இயல்களையும் 38 அதிகாரங்களும் கொண்டது.
அரசியல், அங்கவியல், குடியியல் என்ற மூன்று இயல்களை உடைய பொருட்பால். 70 அதிகாரங்கள் உடையது.
களவியல், கற்பியல் என இரு இயல்களைக் கொண்ட காமத்துப்பால், 25 அதிகாரங்களைக் கொண்டது.
சொல்வன்மை என்ற தலைப்பில் திருவள்ளுவர்,
பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றா தவர் (649)
எனத் தமிழ்ப் பாவினங்களிலேயே மிகச் சிறியதும் ஈற்றடியும் எழு சீருங்கொண்ட குறட்பாவினை தெரிவு செய்து எழுதியதே இதன் பொருத்தமும் சிறப்பும் ஆகும்.
திருவள்ளுவர் வாழ்ந்த காலச் சூழலமைவில், ஒரு புரட்சி சிந்தனை வாதியாக கானப்படுகிறார். சங்க காலம், கள் குடித்தலையும், மது அருந்துதலையும் குற்றமாக பாவிக்காத ஒரு காலம். புலால் உணவு போற்றப்பட்டு வழக்கில் இருந்த காலம். பரத்தமை தூற்றப்பட வேண்டிய ஒரு குறைபாடே எனினும் குற்றமாக கருதப்படவில்லை. அக்காலத்தமிழர், சிறு தெய்வ வழிபாட்டிலும், மூடப் பழக்க வழக்கங்களிலும் மூழ்கி இருந்தனர். மன்னர்கள், வைதிக சடங்குகள் என வேள்விகள் செய்வதும் வருணாசிரம தர்மம் ஏற்கப்பட்டதும், அக்காலத்தில்தான் ஆகும். பொளத்த, சமண, வைணவ துறவிகள் தத்தம் மதம் பரப்பும் பணியில் தமிழகம் முழுவதும் வலம் வந்து, இயற்கைக்கு மாறான துறவினால் கூடா ஒழுக்கம் பரவிக்கிடந்ததும் அக்காலத்தில்தான். வடதேசத்தாரின், பிரம்மச்சரியம், கிருகஸ்தம், வானப்பிரஸ்தம், சன்னியாசம் ஆகிய நான்கு நிலைகள் பெருமையாகப் பேசப்பட்டு, கிருகஸ்தத்தைவிட பிற மூன்றும் மேலும் பெருமைக்கு உரியதாய் போற்றப்பட்ட காலம் அது. பொளத்த, சமண சமயங்களில், உயிர்கள் மீது பரிவிரக்கம், மனித நேயம் போன்ற புண்ணிய நெறிகள், நற்சிந்தனைகள் இருப்பினும், அவை கடுமையான துறவு மேற்கொள்பவரே வீடு பேறு அடையும் நிலையினை போதித்து, இவ்வுலக வாழ்வினை அறவே புறக்கணித்தன. அறம் புறம் என இவ்வுலக வாழ்வு பற்றிய சிந்தனை மிகுந்திருந்த தமிழர்க்கு, புதியது என்ற ஆர்வத்தில், வடவரின் இந்த கொள்கைகளும், பொளத்த சமண போதனைகள் மீது முதலில் ஈர்ப்பு வந்து இருப்பினும் அது வேர் விட்டு நிலைக்கவில்லை. வாழ்க்கையை நன்கு அனுபவித்து வாழ்ந்து, இயல்பாக அதிலிருந்து விடுபடுவதே துறவு என்பதை தொல்காப்பிய 1138 ஆம் பாடல் வலியுறுத்தி, இல்லறத்தின் தொடர்ச்சியே துறவறம் என்று ஏற்றுக் கொண்டனர். இந்த சூழலில், திருவள்ளுவர், தமிழரிடையே காணப்பட்ட் குற்றங்க் குறைகளை பெரிது படுத்தாமல் மறுத்து, நல்வழி காட்டுமுகத்தான் தமிழர் பண்பாட்டுக்கு முரணான அனைத்தையும் மறுத்தார்.
புற நானூற்றிலும், பதிற்றுப் பத்திலும் பெருமைபட பேசப்பட்ட வேள்வியை மறுத்து உரைத்த அவர் நூலை அரங்கேற விடாமல் சங்கப்புலவர்களும் தடுத்தனர் எனும் செவி வழிக் கதையும் இங்கு நிலவி வருகிறது.
தன் கருமம் செய்வதே தவமென்றும், அறனெனப்படுவதே இல்வாழ்க்கை என்றும், இல்லறத்தில் இருந்து சிறுகச் சிறுக பற்று விடுவதே துறவு என்றும், உயிர்கள் அனைத்திடமும் அன்பு காட்டுவதே உண்மையான அந்தணரின் குணம் என்றும் அவர் கூறும் புரட்சிக் கருத்துக்கள் திருக்குறள் முழுவதும் விரவிக் கிடக்கின்றன. எனவே, திருக்குறள், தமிழர் பண்பாட்டின் சாரம், வாழ்வியல் வழிகாட்டி, தமிழரின் தனித்த அடையாளமும் முகவரியும் என்பதில் மிகை ஏதுமில்லை.
சைவத் திருமுறைகள் பன்னிரண்டனுள், பத்தாம் திருமுறையாக வைத்துப் போற்றப் பெறும் திருமூல நாயனாரின் திருமந்திரமாலை, தமிழ் ஆகமம் ஆக விளங்குவதை அனைவரும் அறிவர்.
சைவ சமயத்தில் கூறப்படும் சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நால்வகை நன்னெறிகளையும் செந்தமிழ்ப்பாடல்களால் அறிவுறுத்த எண்ணிய திருமூலர், நாற்சீரடி நான்கு கொண்ட கலிவகை யாப்பினால் தம் திருமந்திர மாலையை அருளிச் செய்தார். சொற்களுக்கு இடையில் வரும் ஒற்று நீக்கி எழுத்துக்களை எண்ணினால், அடிதோறும் பன்னிரண்டெழுத்தும், ஈற்றடி நேரசையினைக் கொண்டும் தொடங்கியதாக பதினோறு எழுத்துக்களைப் பெற்று, வெண்டளை பிழையாமல் வருவது இத்திருமந்திர யாப்பாகும் என விபுலானந்தர் தமது யாழ்னூல் பக்கம் 231ல் விளக்கி உள்ளார்.
முத்தினின் முத்தை முகிழிள ஞாயிற்றை
எத்தனை வானோரும் ஏத்தும் இறைவனை
அத்தனைக் காணா தரற்றுகின் றேனையோர்
பித்தன் இவனென்று பேசுகின்றரே
போன்ற மனதை உருக்கும் தோத்திரப் பாடல்கள் பல இருப்பதாலும், செப்பலோசை தழுவிய இக்கலிப்பாவகை தமிழில் திருமூலரின் திருமந்திரத்தில்தான் முதன் முதலில் காணப்படுகிறது என்பதாலேயே இதனை திருமந்திர யாப்பு எனவும் கூறுவர்.
பதி பசு பாசம் அல்லது இறை, உயிர், தளை ஆகிய முப்பொருள் உண்மையைக் கூறுவதே சாத்திரம் ஆகும். இது ஒரு சிறந்த வாழ்வியல் நூல் என்பதற்கு வாழ்க்கைக்கான சீரிய அறங்கள்ஆஅகிய கொல்லாமை, புலால் மறுத்தல், பிறன் மனை நயவாமை கள்ளுண்ணாமை, அன்புடைமை போன்ற அறங்களைப் பற்றியும் திருமூல நாயரின் கருத்துக்கள் சிறப்புடையன.
சைவ சித்தாந்தம் பற்றிய விளக்கங்கள் அடங்கிய சிவாகமங்கள், தந்திரம், மந்திரம், உபதேசம் என மூவகை உரை அளவைகளையும் உறுப்பாகக் கொண்டவை. மேற்கண்டவற்றுள் முதலாவதாகிய தந்திரக்கலை என்பது வேத ஆகமங்களின் வகை ஆகிய கருமகாண்டம், ஞான காண்டம், உபாசனா காண்டம் என்னும் மூவகைகளும் கரும காண்டம் பற்றிப் பின்னொடுமுன் மாறுகோளின்று அனுட்டித்தலை அறிவுறுத்துவது ஆகும். மந்திர கலை என்பது, உபாசனா காண்டம் பற்றி மனம் முதலியன அடக்கித் தெய்வத்தை வழிபடும் முறையினை விரித்து உரைப்பது. உபதேசக் கலை என்பது ஞான காண்டம் பற்றித் தனக்கு முதலும் முடிவும் இலாத இறைவன் தன்னிலும் வேறு அல்லாத எண் குணம் உடையவன், தன்னின் வேறாகிய பசு பாசங்களை உடையவன் ஆதல் முதலிய தன்மைகளைத் தான் உணருமாறும் பிறர்க்கு உணர்த்துவதாகும் என சிவஞான சித்தியார், சுபக்கம், பிரமாண இயல் 13, சிவஞான முனிவர் உரை நமக்கு விளக்குகிறது.
’ஞானமுதல் நான்குமலர் நற்றிரு மந்திரமாலை’ எனச் சேக்கிழார் இன்னூற்பெயரைக் குறித்துள்ளார். சைவ சித்தாந்தம் பற்றிய விளக்க உரை எழுதிய உமாபதிசவம் இதனை ‘மூலர் திருமந்திரமாலை என்றார். “ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்’ (திருமந்திரம் -85) என்றும், ‘மறப்பிலர் நெஞ்சினுள் மந்திரமாலை, உறைப்பொடுங் கூடி நின்றோதலுமாமே’ (திருமந்த்-86 எனவும் இந்த நூலின் பாயிரம் கூறுவதால், இந்த நூலுக்கு ஆசிரியர் இட்ட பெயர் திருமந்திரமாலை என்பது நன்கு விளங்கும். இந்த நூலில் மூவாயிரம் தமிழ் பாடல் இருப்பதால், ‘தமிழ் மூவாயிரம்’ என வழங்குதலும் உண்டு. இதனையே, ‘முன்னிய அப்பொருண்மாலைத் தமிழ் மூவாயிரஞ் சாத்தி’ என்று பெருமைப்படுத்துவது பெரியபுராணம்.
சிவாகம உண்மைகளை உலகுக்கு உணர்த்த, தாம் கூறும் மந்திரப்பொருளை அனைவரும் விரும்பிக் கேட்டு அவ்வழியில் ஒழுகிப் பயன் பெற மன எழுச்சியும் உறுதிப்பாடும் உடையவர் ஆகும் பொருட்டு, வேத சிவாகமப் பொருள் தனக்கு கிடைத்த விதம் பற்றியும் அதனைத் தமிழில் சொல்ல வந்த காரணமும் இதனை படிப்போர் அறிந்து கொள்ள அமைத்த பகுதியே பாயிரப்பகுதி ஆகும்.
இந்த நூல் மொத்தம், ஒன்பது தந்திரங்களையும், 232 அதிகாரங்களையும், 3000 செய்யுள்களையும் கொண்டுள்ளது. இந்த நூலில் உள்ள ஒன்பது தந்திரங்களில் .முதல் நான்கும், சிவஞானத்தைப் பெற விரும்புபவர் தம்மை உள்ளும் புறமும் தகுதி உடையவர் ஆக்கிக் கொள்ளத் தேவையான சாதனங்களையும், நடுவணதாகிய ஐந்தாம் தந்திரம், சைவத்தில் முடிந்த முடிபாகிய சைவ சித்தாந்த உண்மைகளையும், ஆறு முதல் ஒன்பது முடிய உள்ள நான்கு தந்திரங்களும், ஞானம் பெறும் நிலையினை உணர்ந்து பெறத்தக்க நற்பயன்களை விரித்துக் கூறுபவை ஆகும்.
இன்னூலின் முதல் தந்திரம் 24 அதிகாரங்களாகப் பகுக்கப் பெற்றது. இதன் தொடக்கத்தில் உள்ள 30 பாடல்களும் உபதேசம் என்ற தலைப்பில் அமைந்துள்ளன. இந்த உபதேசம் ஞானம் கைவரப்பெற முய்லாவோர் அதற்குத் தேவையான தகுதி உடையவ்ராகத் தன்னை ஆக்கிக் கொள்ள நல்லொழுக்க நெறியில் நிலைக்கச் செய்தல் வேண்டும் என் வற்புறுத்திக் கூறுவன. உலக இன்பங்களை, நெறிப்பட்ட முறையில் துய்த்துக் கொண்டே பேரின்பம் பெற முடியும் என்பதே திருமூலதேவ நாயனாரின் உள்ளக் கிடக்கையாம்.
”பெற்றசிற் றின்பமே பேரின்ப மாயங்கே
முற்ற வரும்பரி சுந்தீபற
முளையாது மாயையென் றுந்தீபற”
என ஞான நூலாகிய திருவுந்தியாரும் இந்த உண்மையினை எடுத்துக் கூறுகிறது.
வேத சிவாகமங்களின் ஒன்றுபட்ட துணிபு, சிவனே பரம்பொருள் என்று முன்பு பாயிரத்தில் கூறிய பொருளை, ஆசிரியர் சிறப்பாக விரித்து உரைப்பது இரண்டாம் தந்திரம் ஆகும்.
நமது உடம்பில் ஆறு ஆதாரங்கள் உள்ளன என யோக நூல் கூறும். அவை மூலாதாரம், சுவாதிடானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்பனவாம். இவ்வாறு உடம்பை வளர்க்கும் உபாயமாக, அட்டாங்கயோகம் முதல் சந்திர யோகம் ஈறாக இருபத்தோறு தலைப்புகளை உடையது மூன்றாம் தந்திரம். இவற்றுள் எண் வகை யோக உறுப்புகளும், இவற்றை மேற்கொள்வோர் அடையும் பேறுகளும், எண்வகை சித்திகளின் இயல்பும் பயன்களும் விரித்து உரைக்கப்பட்டுள்ளன..
மேற்சொன்ன ஆதார இடங்கள் சக்கரங்கள் எனக் கொண்டால், திருவம்பலச் சக்கரம் முதலிய மந்திரச் சக்கரங்களின் உபாசனை முறைகள் நான்காம் தந்திரத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. இது அசபை என்பது முதல் நவாக்காசிசக்கரம் ஈறாகப் பதிமூன்று தலைப்புகளை உடையது.
ஐந்தாம் தந்திரம், சுத்த சைவம் முதலாக, உட்சமயம் ஈறாக, இருபது உட்பிரிவுகளை உடையது. இதில் நால்வகை சைவங்களும் நால்வகை நன்னெறிகளும், மார்க்க நெறி முறைகளும், நெறி நின்றோர் பெறும் பேறுகளும், நால்வகை சத்தினிபாதப் பக்குவ நிலைகளும் அறிவுறுத்தப் பெற்றுள்ளன.
சைவ சித்தாந்த முடிபுகளை உபதேச வாயிலாகக் கேட்டறிந்தோர் அவற்றைச் சிந்தித்துத் தெளிந்துணர்தற்குரிய பொருள்களாகிய ஞானம் பெறும் சாதனங்களை உணர்த்துவது ஆறாம் தந்திரம் ஆகும்.
ஆறாதாரம் முதல் இதோபதேசம் ஈறாக முப்பத்தெட்டு உட்பிரிவுகளைக் கொண்டது ஏழாம் தந்திரம்
உடலில் பஞ்ச பேதம் என்பது முதல் சோதனை என்பது ஈறாக நாற்பத்து மூன்று உட்பிரிவுகளைக் கொண்டது எட்டாம் தந்திரம்..
இந்த நூலில், முடிவில் உள்ள ஒன்பதாம் தந்திரம், தச காரியத்துள் ஒன்றாகிய சிவபோகம் என்னும் பேரின்ப நிலையை விளக்குவது. குருமடதரிசனம் முதலாக, சர்வ வியாபி என்பது ஈறாக, இருபத்திரண்டு உட்பிரிவுகளைக் கொண்டது இந்த தந்திரம். இவ்வாறு மறைபொருட் கிளவிகளாக வரும் திருமந்திர பாடல்களுக்கு அனுபவம் உடைய நல்லறிஞர்களைக் கொண்டு தெளிவான முறையில் பொருள் விளக்கங் காண்பது தமிழ் வளர்ச்சிக்கும் சமய வளர்ச்சிக்கும் ஆக்கம் தரும் நற்பணியாகும்..
திருமூல நாயனார் அருளிய திருமந்திர மாலையில், தெயவப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறளில் உள்ள சொற்றொடர்களும் கருத்துக்களும் ஆங்காங்கே இடம் பெற்று இருப்பதை, இவற்றைப் படிப்போர் காணலாம். அவற்றுள், முதல் முறை படிக்கும்போதே தெளிவாகத் தெரிந்தவற்றை இங்கு தொகுத்து ஆய்வு செய்தல் ஆன்மிகத் தேடலில் நலம் பயக்கும் என்பதாலேயே இந்த முயற்சியில் இறங்கி உள்ளேன்.