மழையை ரசிக்கிறேன்

குடையைப் பிடித்துக்
கொண்டு மழையில் நடக்கிறேன்!
மழை நீர் நிறைந்த குட்டைகளில்
சிறு கற்களை எறிந்து நீரைக் கால்களால்
இறைத்தபடி கும்மாளமிட்டு ஆடுகிறார்கள்,
பள்ளிக் குழந்தைகள்!

குடையைப் பிடித்துக்
கொண்டு மழையில் நடக்கிறேன்!
போக்குவரத்து நெரிசல்களும்,
குழப்பங்களும், சிலர் நகைத்துக் கொண்டும்
உரத்த குரலில் சிலர் வாயாடிக் கொண்டும்
கல்லூரித் தோழர்கள்!

குடையைப் பிடித்துக்
கொண்டு மழையில் நடக்கிறேன்!
போக்குவரத்தில் சாலை
பரபரப்புடன் மூழ்கியிருக்கிறது!
தங்களை மறந்து மலரும்
நினைவுகளுடன் காதலர்கள்!

நான் முழுதும் நனைந்து விட்டேன்,
முக்காடும் குடையும் எதற்கு இனி?
தூக்கி எறி! ஆட்டம் போடு!
மகிழ்ச்சிக் கூச்சலிடு! நானோர்
கல்லூரி செல்லும் கன்னிப் பெண்!
இந்த அனுபவம் எனக்குப் புதுமை!

இதுநாள் வரை எனக்கிருந்த கட்டுப்பாடு,
ஜலதோசம் பிடிக்கும்! குடை கொண்டு போ!
இன்று என்னைக் கட்டுப்படுத்த யாருமில்லை!
நான் மாணவியர் விடுதியில் இருக்கிறேன்,
வரும் இன்னலைச் சந்திக்கத் தயார்,
மழையில் குடையின்றி நனைகிறேன்!

குடையைத் தூக்கி எறிந்து விட்டேன்,
இப்பொழுது குடை எனக்குத் தேவையில்லை,
என் விருப்பம் போல மழையில் நனைவேன்,
குத்தாட்டம் போடுவேன், ஆடுவேன்,
வானத்தை நோக்கி அண்ணாந்து
மழையை ரசிக்கிறேன்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Jul-16, 11:50 am)
Tanglish : mazhaiyai rasikiren
பார்வை : 1512

மேலே