யுகராத்திரியாய் ஒரு இரவு ஜூலை 26 இரவு

நிரம்பிவழிந்த கனவுகளால்
தூக்கத்தைத் தொலைத்த இரவு...

எதிர்காலத்தை நிகழ்காலமாக்கி
எண்ண மேடையில்
அரங்கேற்றிவிட்ட ஒரு நிகழ்வு

காலத்தின் பொறிக்குள்
சிக்காமல்
காலத்தை தன் பொறிக்குள்
சிக்க வைக்க
நடைபெற்ற ஒரு ஒத்திகை

கானல் நீரிலும்
உற்றுக் கண்ணுற்றால்
கணக்கிட ஆயிரம் உண்டு
அறிவியலின் பார்வையில்

காணும் யாவிலும்
கற்றுக்கொள்ள
நூறாயிரம் உண்டு
நுட்பமான பார்வையில்

கனவுக்கு உருவம் உண்டு
செயல்
கனவுக்கு கண்கள் உண்டு
பயணம்
கனவுக்குள் ஆன்மா உண்டு
நீ.....

பறவையின் இருத்தல்
பறத்தலில் இருக்கிறது

மாயப்பறவையாய்
நான் பறக்கிறேன்
நீ கொடுத்த
"அக்னிச் சிறகுகளால்"

கனவுகள் நனவுகளாக
உன் கனவின் வானம்
உன் கண்களிலிருந்து
என் கண்களுக்கு
தன்னை வியாபித்து நிற்கிறது...

நான் நம்புகிறேன்
தூங்கவிடாமல் செய்வதுதான்
கனவு

அதற்காகத்தான்
யுகராத்திரியாய் இந்த இரவு....
நீ விட்டுச்சென்ற இடத்திலிருந்து
நான் தொடங்குவதற்காக....

(குறிப்பு- இனி வரும் ஒவ்வொரு ஜூலை 26 ஆம் தேதி இரவையும் "யுகராத்திரியாய்" விழி திறந்து உயர்திரு அப்துல்கலாம் அவர்கள் நினைவாய் கனவிற்கு ஓர் அடையாள விழிப்பு நிலையாய் அனுசரிப்போம்)

எழுதியவர் : மலைமன்னன் (27-Jul-16, 9:28 am)
பார்வை : 126

மேலே