வெளிச்சத்தைத் தேடி

அந்த அறை தேவைக்கு மீறியபடிக்கு இருளைத் தன்னுள்ளில் போர்த்தியிருந்தது. ஜன்னல் கதவுகளின் இடுக்குகளிலிருந்து சூரிய ஒளி மெல்லக் கசிந்து ஒரு முதிய பூனையின் சாயலில் துளியும் சலனமின்றி வலுவிழந்து வட்டமாகத் தரையில் தன்னைப் படர்த்திக் கிடந்தது. நேரம் கடந்து போன பரிதவிப்பில் கிடைத்த சிறு துளி வெளிச்சத்தில் முதல் இரையினைத் தேடும் பல்லியின் பலவீனமான நடமாட்டத்தில் மூன்று நாள் பட்டினி தெரிந்தது. அறையின் மூலையில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் தம்பூராவில் இருந்து பதற்றத்துடன் வெளியேறிய ஒரு சிறிய பல்லியால் கம்பிகள் ஒரு முறை அதிர்ந்து புழுதியைக் கிளப்பி மெதுவாக அடங்கியது.
“ஐயா, கதவைத் தொறங்க” என்ற வார்த்தைகள் அறையில் பட்டு எதிரொலித்தது போல இருந்தது. பொறுமையிழந்து அவள் மீண்டும தட்ட, கதவு மெதுவாகத் திறந்து கொண்டது. அழைத்தவளின் இடது கையில் பால் பாக்கெட்டும், வலது கையில் அன்றைய நாளிதழும் இருந்தது. உள்ளே நுழைந்தவள் “கதவை மூடவே இல்லையா தம்பி?” என்று கேட்டுக்கொண்டே அடுக்களைக்குள் நுழைந்தாள். “ஆபீஸ் இன்னைக்கு லீவா?” என்றாள். இந்த முறையும் அவளின் கேள்விக்கு அவன் பதிலே சொல்லவில்லை. கண்ணாடியில் அவன் முகத்தைப் பார்த்தான். கண்கள் சிவந்து உப்பிப் பருத்து வெளியே துருத்திக்கொண்டிருந்ததை அவளிடம் மறைக்க அவன் அதிகம் போராட வேண்டியிருந்தது.
“நேத்தோட ஒரு வருஷம் ஆயிடுச்சுன்னு சொன்னியே. அனுவை நேத்து பாத்தியா தம்பி?” மிகவும் ஆர்வத்துடன் அவள் கேட்டாள். ஆதரவான அவளின் விசாரிப்பில் தான் துளியும் உடைந்து போகக்கூடாது என்று தீர்மானித்தவன் குளியலறைக்குள் வேகமாக நுழைந்தான். ஷவரின் மெலிதான தொடர் இரைச்சலில் தன் விசும்பலின் ஒலி மீறாதபடிக்கு பார்த்துக்கொண்டான். தலையைத் துவட்டிக்கொண்டே வெளியே வந்தவன் “அன்னம்மா” என்று அழைத்தான்.
“நேத்தும் குடிச்சயா தம்பி? ஏதாவது சாப்பிட்டயா இல்லை வழக்கம் போல வெறும் வயத்துலேயே படுத்துட்டயா?” உரிமையுடன் அவன் தலையை விரல்களால் கோதிப் பார்த்து அவன் வைத்திருந்த துண்டை வாங்கி தலையை மீண்டும் நன்றாகத் துவட்டினாள்.
“நான் வேணும்னா ஒரு நடை அனுவைப் பாத்திட்டு வரவா தம்பி?”. அன்னம்மா தயங்கியபடியே அவனிடம் கேட்டாள். வழக்கம்போல அவன் அமைதியாக இருந்தான். டீப்பாயில் இருக்கும் மடிக் கணினியைத் திறந்து மின் அஞ்சலைப் பார்த்தான். அனுவிடம் இருந்து ஒரு அஞ்சல் வந்திருந்தது. “காஃபி ஷாப்பில் இன்று மாலை 6 மணிக்கு சந்திக்கலாம், அன்புடன் அனு”.
அவன் அனுவை முதன் முதலாக அந்த காஃபி ஷாப்பில்தான் சந்தித்தான். வாழ்க்கையின் பல தீர்மானங்களை அவர்கள் இருவரும் அங்குதான் எடுத்தார்கள். அவள் அம்மாவின் பிறந்த நாள் பரிசு, தம்பியின் மேற்படிப்பு, அவனின் முதல் கவிதைத் தொகுப்பு, முதல் மேடைப் பேச்சு, முதல் வெளிநாட்டுப் பயணம் இப்படி பல நிகழ்வுகள் அவனை நிழலாய் கடந்து போனது. அவர்கள் இருவரும் வாடிக்கையாக அமரும் இடத்தில் இருந்து பார்த்தால் சாலை ஓரத்தில் அவன் அப்பாவின் சாயலில் ஒரு முதியவர் இளநீர் விற்றுக்கொண்டிருப்பார். “என்ன பாலா?” என்று அனு அவர்களுக்கிடையே இருக்கும் மௌனத்தைக் கிழிக்கும் போதெல்லாம் “ஒன்னுமில்லை அனு” என்று விட்ட இடத்தில் இருந்து மீண்டும் பேச ஆரம்பிப்பான். அவனின் பார்வை மட்டும் அந்த முதியவர் மேல்தான் இருக்கும்.
எந்த அளவிற்கு அனுவிற்குகந்தவாறு அவன் மாறியிருக்கிறான் என்பதில் அவனுக்கே சிறிது குழப்பம் இருந்தது. நிழலைப் போல அவளுடனேயே இருக்க ஆசைப்பட்டான். அவனின் அதீத பாதுகாப்பு வளையத்திலிருந்த தனிமை அவளுக்கு அதிக எரிச்சலைக் கொடுத்திருக்கவேண்டும். ஆதலால்தான் இருவருக்குமிடையே இந்தத் தற்காலிக இடைவெளி.
மணி ஆறு. பதிவாக அவர்கள் இருவரும் அமரும் இருக்கையில் வந்தமர்ந்தான். அனு சாலையைக் கடந்து வந்து கொண்டிருந்தாள். பதற்றத்துடன் அவளையே பார்த்தான். துளியும் ஒப்பனை இல்லாத மெலிதான புருவம், கூறிய நாசி, பல வண்ணங்களில் பூப்போட்ட காட்டன் சுடிதார். இடது கையில் சில புத்தகங்கள். எதிலும் பதற்றமடையாத நிதானமான நடை. அவள் துளியும் மாறவே இல்லை. உள்ளே நுழைந்தவள் பாலாவின் எதிர் இருக்கையில் அமர்ந்தாள். கையிலிருக்கும் புத்தகங்களை மேஜையின் மேல் வைத்தாள். கண்ணாடியைத் துடைத்துக்கொண்டே “நீ வந்து ரொம்ப நேரம் ஆச்சா பாலா?” என்று கேட்டாள். வரண்ட சிரிப்புடன் அனு மீண்டும் தொடர்ந்தாள். “அதே மஸ்க் பிளேவர் டியோ. நாம சந்திச்சு ஒரு வருஷம் ஆயிருக்குமில்லே?” நீ எப்படி இருக்கே? பாலா எதுவும் கூறவில்லை. “உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் பாலா. ஆனா என் மேலே நீ காட்டும் அதிகப்படியான அக்கரை எங்கே என்னை ரொம்ப பலவீனப்படுத்திடுமோன்னுதான் நான் ரொம்ப பயப்பட ஆரம்பிச்சேன். நிறைய சண்டை பேட்டேன். அப்பவும் நீ மாறவே இல்லை. நீ மாறுவதற்கு இந்த ஒரு வருட இடைவேளி நமக்குத் தேவையாக இருந்தது. நானும் உன்னைப் போலத்தான்னு நீ எப்பவும் என்னை நடத்தவே இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு வாழ்க்கை இருக்கு பாலா. அதை நாம்தான் வாழனும். உன் வாழ்க்கையை நானோ அல்லது என் வாழ்க்கையை நீயோ நிச்சயம் வாழ்ந்திட முடியாது. நாம ஒன்னா இருந்தாலும் நமக்கு தனித்தனியா வாழ்க்கை இருக்கு. ஒருத்தர் கையைப் பிடிச்சிக்கிட்டு ஒருத்தர் தற்காலிகமா வேணும்னா வாழலாம். அது தப்பே இல்லை. ஆனா அதுவே நிரந்தரமான பிடிப்பா இருந்தா வாழ்க்கை சீக்கிரமே திகட்ட ஆரம்பிச்சிடும் பாலா”
“ஒன் கிரீன் டீ வித்தவுட் சுகர், ஒன் லெமனேட் வித் சோடா” என்றவள் “நீ ரொம்ப இயல்பா ரொம்ப மெட்சூர்டா இருக்கே. அக்கரையா நான் சொல்றதை ரொம்ப பொறுமையா கேக்கரே. ரொம்ப மாறிட்டே பாலா. சனிக் கிழமை நான் தனிப் பயிற்சிக்கு ஜெர்மன் போறேன். விசாகூட கிளியர் ஆயிடுச்சு. மூன்று மாத கோர்ஸ்” என்றவள் அவனின் பதிலிற்காகக் காத்திருந்தாள். அனுவின் கைகளை ஆதரவாகப் பற்றி “சரி அனு. போயிட்டு வா. உனக்காக நான் காத்திருப்பேன். உன் கூட துணைக்கு யார் வருகிறார்கள்?” என்று கேட்டவன் உடனே நாக்கை கடித்துக்கொண்டான்.
“கொஞ்சம் கொஞ்சமாத்தான் நாம மாறமுடியும் பாலா. நீ மாறுவதற்கான முயற்சி செய்கிறாய். அது போதும் எனக்கு. நான் உங்கிட்டே அதைத்தான் எதிர்பார்க்கிறேன்”. அனுவின் கை பேசி ஒலித்தது.
“சரி பாலா, நான் கிளம்பறேன். சனிக்கிழமை பிளைட்” என்று மீண்டும் கூறிய அனு தன் கைப்பையிலிருந்து மடித்து வைத்திருந்த அலுமினியக் குச்சியை நீட்டி தன் வெளிச்சமான எதிர்காலத்தை நோக்கி முதல் அடி எடுத்து வைத்தாள்.

எழுதியவர் : பிரேம பிரபா (29-Jul-16, 7:41 pm)
பார்வை : 390

சிறந்த கவிதைகள்

மேலே