சமயோசிதம்

வயதான ஒருவரின் வீட்டிற்கு முன்னால் தினசரி இரவு, சில இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அவருக்கு அது மிகத் தொல்லையாக இருந்தது. ஒரு நாள் இளைஞர்கள் அதிகமாகச் சப்தம் போட்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது பெரியவர் அவர்களிடம் சென்று, ”நான் ஓய்வு ஊதியம் வாங்குபவன். எனக்குப் பிடித்தமான கிரிக்கெட்டை நீங்கள் எல்லோரும் விளையாடுவது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. நீங்கள் தினசரி விளையாடினால் நான் உங்களுக்கு வாரம் ஐம்பது ரூபாய் கொடுக்கிறேன்” என்றார்.

இளைஞர்களுக்கு மிகவும் ஆச்சரியம்! தாங்கள் விருப்பத்துடன் விளையாடுவதற்குப் பணமா?

அவர்கள் தினசரி விளையாடினார்கள்.

ஒரு வாரம் முடிந்தவுடன் பெரியவர் அவர்களிடம் ஐம்பது ரூபாயைக் கொண்டு வந்து கொடுத்தார்.

இரண்டாவது வாரம் அவர்கள் பணம் கேட்ட போது, திடீரென செலவு வந்து விட்டதாகக் கூறி இருபது ரூபாயை மட்டும் கொடுத்தார்.

மூன்றாவது வாரம் ஓய்வு ஊதியம் இன்னும் வரவில்லை எனக் கூறிப் பத்து ரூபாய் கொடுத்தார்.
நான்காவது வாரம், தன்னால் இனி வாரம் ஐந்து ரூபாய் தான் கொடுக்க முடியும் என்றார்.

இளைஞர்களுக்குக் கோபம் வந்து விட்டது.

“வாரம் முழுவதும் விளையாடுவதற்கு வெறும் ஐந்து ரூபாயா? இனி நாங்கள் இங்கே விளையாடவே வரமாட்டோம்” என்று கூறி அங்கிருந்து சென்று விட்டனர்.

பெரியவருக்கு இப்போது முழு நிம்மதி. இனி அவர்கள் இங்கு வந்து விளையாட மாட்டார்கள்.

சமயோசிதமாக யோசித்தால்.. எதையும் செய்ய்யலாம்

எழுதியவர் : செல்வமணி (2-Aug-16, 11:40 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 271

மேலே