வியர்வையை வித்தாக்கி

ஏர் முனையின்
கூரிய நகங்களால்
நில அன்னையை கீறி

அவள் மேனிஎங்கும்
பத்திடுவது போல
விதை நெல்லை தூவி

மழையே ! நீ பொய்த்தால் என்னவென்று
தன் வியர்வையை வித்தாக்கி

நாற்று நட்டு களை பறித்து
கருவை காப்பது போல
கண் விழித்து காத்து

பருவமடைந்து தலை குனிந்து
நிற்கும் தன் நெல் மகளை
பார்த்து பூரித்து சொன்னான்

இது நெல்மணி அல்ல
என் கண்மணி என்று

மண நாளை எண்ணி
காத்திருக்கும் மங்கை போல
அறுவடை நாளை எண்ணி காத்திருக்கும்
நெல்மகளை எடுத்து நெல்மணியை உதிர்த்து

மலை போல் செறிந்திருக்கும்
நெல்லை அள்ளி அள்ளி
ஆனந்தமாய் தழுவி
ஆனந்த கண்ணீர் விட்டு

மூடை மூடையாய் நெல்லை
உரியவனிடம் சேர்த்துவிட்டு
வீடு திரும்பிய போது

அவன் கையில் மிஞ்சியது
ஒரு படி நெல்

இந்நிலை ஏன் ? என
தைரியமாக கேட்டது
அவன் வளைந்த
கூன் மட்டுமே.........

எழுதியவர் : (8-Aug-16, 8:22 pm)
பார்வை : 62

மேலே