எங்களைச் சீண்டாதே

மானிடா!
வந்தாய்...
வசப்படுத்தினாய்.......
வம்சத்தை அழிக்க
வியூகம் வரைந்தாய் !

பச்சை மரத்தைக்
கொச்சைப் படுத்தினாய்..!
பாவமறியா பூமியைப்
பாதகம் செய்தாய்…!
பரவசம் அடைந்தாய்
பலசுகம் கண்டாய்..!

எங்களை அழித்தாய்
எட்டடுக்கு மாளிகை அமைத்தாய்.....
உன் இச்சைக்குப் பழியானது
எங்களின் பச்சை நிறம்..

உனது
நாகரிக வளர்ச்சிக்கு
நாடிப்பிடித்து பார்த்தது நாங்கள்.
மறந்து..
தீட்டிய மரத்திலே நீ
கூர் பார்த்து விட்டாய்!

இனியும் எங்களைச் சீண்டாதே!
நாங்கள் நினைத்தால்
உன் இனத்தின்
எண்ணிக்கையைக் குறைப்போம்..

காட்டுத் தீ உருவாக்கி
எங்களையும் அழித்து
உங்களையும் அழிப்போம்


காற்றுக்குத் தூது அனுப்பி
சூறாவளியாக்கி
உன் இனத்தைச் சூரையாடுவோம்....

மேகத்திற்கு மனு கொடுப்போம்
மழைவரச்சொல்லி....
வெள்ளம் ஏற்படுத்தி
உன்னினத்தின் உயிரையெடுப்போம்

நிலத்திற்குக் கட்டளையிடுவோம்
வேரை வெறுக்கச்சொல்லி...
மண்சரிவை ஏற்படுத்தி
உன் இனத்தை
மண்ணோடு
மண்ணாக்குவோம்

எங்களுக்கு நீதிமன்றம் கிடையாது
தீர்ப்பு சொல்ல...
நீதிபதியும் கிடையாது.....

எங்கள் இராஜியத்தில்
நாங்களே ராஜா...
எங்களைச் சீண்டாதே....

இப்படிக்கு
இயற்கை......

எழுதியவர் : எ.திருச்செல்வம் (11-Aug-16, 10:35 am)
பார்வை : 100

மேலே