மழலையே மூலம் பெண்மையே ஞாலம்

நிறைமதியில் ஒரு சிறுமதி
உன் நெற்றியிலே திருஷ்டிப்பொட்டு..

தலையில் செயற்கைப் பூப்பூத்த
இயற்கைச் செடியே!
சுட்டும் விரல் ஒன்றில்
சுற்றும் பூமி தாங்கும்
சுத்த இறையே!
உனது இந்தப் பார்வைக்கான
புரிதல் தேடியலைந்து முட்டாளைப்போன
ஞானிதான் நான்....
இருந்தும், அர்த்தம் அறியாமல்
அவதிப்படும் இந்த அப்பாவிக்கு
ஆறுதல்கூற நீ எத்தனிக்கும்போது
அம்மா என்று சரியாய் சொல்கிறாய்!
அப்பாவை தப்பாய் உச்சரிக்கிறாய்!
அடுத்து நீ கூறும் சங்கீதங்கள்
ஒன்றுமே புரியாவிட்டாலும்
எனது காதுகள் தேனால்
கழுவிடப்பட்டது போல் பிரமிக்கிறேன்!

அழுகும் அழகே!
என்றும் அழுகா அதிசயமே!
முல்லைக்கு தேர்தந்த
பாரி என்ன வள்ளல்?
திருஷ்டிக்கு முகம் தந்த
நீதான் வள்ளல்!
உன்னை அழுக்குப்படுத்த
கருப்பு வைத்தால் - நீ
உன் அழகால் கருப்பை
அலங்கரித்து விட்டாய்!

உனது தரிசனத்தால்,
ஆசை அடியோடு ஒழிந்தது!
பொறாமை சிட்டாய்ப் பறந்தது!
மோகம் மொத்தமாய் குறைந்தது!
கோபம் குப்புறப் படுத்தது!
இன்பம் எப்புறமும் தெரியுது!
இங்கே நான்தான் மனிதன்!
எனக்கு நீயே தெய்வம்!

மழலைதான் மூலம்!
பெண்மையே ஞாலம்!

எழுதியவர் : தீனா (12-Aug-16, 8:51 pm)
பார்வை : 89

மேலே