மெய்பொருள் காண்பதறிவு

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

சொல்லுகின்ற சொல்லெல்லாம் உண்மை யில்லை
...சொல்லாத சொல்யாவும் பொய்யு மில்லை
சொல்லவந்த பொருளெல்லாம் தெளிவு மில்லை
...சொல்லுள்ளே பொருளொழிதல் புதிது மில்லை
சொல்லுபவர் சொல்லுவதால் சொல்லில் உண்மை
...சொலித்துவிடும் என்பதெல்லாம் நியாய மில்லை
சொல்லுபவர் சொல்லுபொருள், சொல்லின் தன்மை,
...சோதித்துக் கேட்டறிதல் அறிவு டைமை !!

சிலருண்மை சொல்லிடுவார் சிலரோ செய்திச்
...சிறப்பழியப் பொய்கலப்பார் ஊருக் குள்ளே
பலபேரோ நடக்காத செய்தி வொன்றைப்
...பார்த்ததுபோல் சொல்லிடுவார் சொல்லும் வாக்கில்
உலகியலின் பொதுக்கருத்தும் உண்மை யும்தான்
...உரைந்துளதா என்பதனைக் காண வேண்டும்
கலகமது நேர்வதுவு மொருசொல் லாலே
...கவலையெலாம் தீர்வதுவு மொற்றுசொல் லாலே !!

யார்சொன்னார் ? எப்போதோ? எதற்கு சொன்னார் ?
...யாதுபொருள் ? என்பதெல்லாம் அறிந்தி டாது
வேர்விட்ட செடியெல்லாம் நெல்லி யென்று
...வேண்டாத எண்ணங்கள் எண்ண வேண்டா !
கூர்கொண்ட மதியுடையோர் எந்த நாளும்
...கூறியதை ஆராயா தேற்ற தில்லை !
நேர்கொண்ட நெஞ்சத்தீர் சொல்லும் வாக்கின்
...நேர்த்திதனை அறிந்தாய்ந்தே யேற்றல் வேண்டும் !!

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (15-Aug-16, 8:49 pm)
பார்வை : 103

மேலே