வேரறுந்த விருட்சம்

என் பள்ளி விடுதிக் காலத்தை
அசைபோடுகிறேன்...
கணத்த பல நினைவுத்துண்டுகள்
இடுக்குகளில் மாட்டிச்
சிக்கிச் சிதை(க்)கின்றன....

எப்போதாவது
வந்து வந்து போவாள்
சமையல்காரன்
தட்டில் உணவு கொட்டுகையில்
கனவுகளில் அம்மா !

தடித்த மீசையும்
கடிக்கும் பற்களுமாய்
மூக்குக் கண்ணாடிப் பார்வை கொண்ட
வார்டன் முகத்தில்
தந்தை சாயல் தேடிச்
சலித்த நாட்களும் உண்டு !

கூடப் படிக்கும்
சக தோழர்களுடன்
சகோதரச் சாயல் பழக
ஒத்திகை பார்த்த
தருணங்களும் உண்டு !

நிறைய பொழுதுகளில்
கண்ணின் ஈரத்தை
மடியணை இல்லாது
தலையணை உறிஞ்சிக் கொள்ளும்
வேளையெல்லாம்
எண்ணிப் பார்த்ததுண்டு,
விடுதி வாழ்க்கை
விடுதலை தேடுகையில்
அப்பா அம்மா அற்ற
வீடுகளில் நிலைமையை....!

தாய்தரும் தாலட்டை
தந்தையின் பாராட்டை
சேர்த்து எனக்கு வழங்கிய
அந்தப் பள்ளி விடுதியின்
ஆலமரம்
நேற்று
இடியிடித்து தாக்குண்டு
சாய்ந்து கிடக்கிறதாம்
வேரறுந்த விருட்சம் என்போல் !

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (15-Aug-16, 10:16 pm)
பார்வை : 140

மேலே