மண்ணில் ஒரு வெண்ணிலவு

அந்த வெண்ணிலவுக்குப் போட்டியாக
ஒரு பெண்ணிலவு மண்ணில் உலவுதம்மா...
கும்மிருட்டு தாண்டிய கருமை
அவள் கூந்தல் முடியோடு உதிருதம்மா..

வான் நோக்கி அவள் பார்வை திரும்ப
பாவம் அந்த வெண்ணிலவு தோற்றதம்மா...
பாவை வடிவில் ஓர் பால் நிலவு
பாதம் முளைத்துப் பாரில் பவனியம்மா...

சாலையெல்லாம் விடிந்தனவோ
ஊர்கோலம் அவள் போக...
பாலையெல்லாம் பூத்ததுவோ
இந்தப் பட்டாம் பூச்சி தேனருந்த...

மேகக் கூட்டம் போர்த் தொடுக்கும்
மழைத்துளியாகி இவள் மெய் அணைக்க..
பனித்துளி கூடி மாநாடமைக்கும்
அல்லி ராணி இவள் பாதம் நனைக்க...

வானவில்லும் முகம் காட்டுதோ
வன தேவதையைக் கட்டிக் கொள்ள...
நாதமெல்லாம் கொலுசானதோ
இவள் கால்களோடு சிணுங்கிக் கொள்ள...

தேன்மொழியாள் குரல் கேட்டு
குயில் கூட்டம் தலை குனிந்ததுவோ...
மயில் தோற்குமிவள் அழகைக் காண
மழை மேகங்கள் சூழ்ந்ததுவோ...

வீணைகள் இங்கே மௌனமம்மா
இவள் விரல் கொண்டு மீட்டும் வரை...
தேனீக்கள் எல்லாம் விரதமம்மா...
இவள் இதழ் அமுதை ருசிக்கும் வரை...

கயல்விழியாள் பார்வையில் விழ
மன்மதனும் வரிசையில் கால்கடுக்க...
மங்கை மலர் பாதம் பட
காதல் தேசமே கடும் காத்திருப்பில்!..

எழுதியவர் : கவிப் பிரியை - shah (16-Aug-16, 7:43 pm)
பார்வை : 1145

மேலே