தாய் தந்தை பிரிந்த பிள்ளை நிலை

உயிர் நிலா இன்றில்லை- எனக்கு
வான் நிலாவை காட்டி சோறூட்ட....
தாய்மடி வாசம் சுவாசிக்கும் -முன்னே
தனியே விட்டு சென்று விட்டாய்...
தோளில் தூக்கி கொஞ்சும் -அப்பா
தோளினி எனக்கு கனவு தானே...
என்னை தோளில் சுமக்கையிலெ
சுமையெனக்கேதும் இல்லையென்றாய்....
உன்னை நெஞ்சில் சுமக்கையிலே
வலிக்குது அப்பா நெஞ்சோரம்...
முதல் நாள் பள்ளி போகையிலே
வாசலில் வந்து கை அசைக்க
யாரினி இருக்கா எனக்கிங்கே
சொல்லடி அம்மா கனவினிலே....
பார்ப்பவர் எல்லாம் பரிதாபமாய்
ஏதோ ஆறுதல் சொல்கின்றார்...
விழிநீர் முழுதும் உன் நினைவு
முத்து முத்தாக என் விழியோரம்...
கரம் பிடித்து நடை பழக்கினாய்...
உன் கரம் பிடிக்க ஏன் மறுக்கிறாய்?
கண்டதெல்லாம ஆசைபட்டேன் - அப்பா
இப்போ ஆசையென்பதெல்லாம் இல்லையப்பா...
பட்டாம் பூச்சியாய் மாறினால்- நான்
உன் தோள் வந்து சேர்வேனோ...
கண்டம் விட்டு கண்டம் தாவும்
வித்தை தெரிந்தால் -நான்
உன் காலடியில் வந்து விழுவேனோ...
என்று சேர்வேனோ உனை நான்...

எழுதியவர் : திருமதி ஜெயசீலன் (17-Aug-16, 10:45 am)
பார்வை : 138

மேலே