கண்ணன் வந்தான்
கார்வண்ண முகிலாய் கண்ணனவன்
வானில் வந்தான்
வானமவள் மாயனுக்கு சோறூட்ட
வெள்ளிதட்டு ஒன்றை ஏந்தி நின்றாள்
மணிவண்ணனவன் ஓடி ஓடி விளையாடுகின்றான்
வானமவள் தேடித் தேடி சோறூட்டுகின்றாள்
அவன் இதழ் சிந்தும் பால் சோறே
விண்மீனாய் ஆனதிங்கே
அவன் மோகனப் புன்னகையே
மின்னலாய் ஓடுதிங்கே
குறும்பு செய்ய கோபியரை
தேடியங்கு சென்றுவிட்டான்
மஞ்சள் வானம் கண்டு
நீராடுவதை கண்டுகொண்டான்
சேலைகளை எடுத்துக்கொண்டு
மறைந்துவிட்டான் மாயவனாய்
திருடிய சேலையெல்லாம்
தொங்குது பார் வானவில்லாய்
நில்லாமல் ஓடுகின்றான்
வானமெல்லாம் வாழுகின்றான்
அடியவர் மனதில் மட்டும்
அன்புடனே தேங்குகின்றான்