இதற்காகத்தானே இத்தனை நாளும் - சிறுகதை ஊதாமூங்கில்

இதற்காகத்தானே இத்தனை நாளும் - சிறுகதை


அற்புதமான காலை பொழுது ஓன்று, வீட்டின் ஹாலில் சிவகாமி மட்டும் வருத்தத்தின் துணையோடு அமர்ந்து இருப்பதை பார்த்த அவளின் கணவர் மாது, அவளுக்கு அருகில் வந்து அமர்ந்ததும் பேச தொடங்கினார்.

“என்னம்மா ஏன் காலைலயே ஒரு மாதிரி இருக்க ?”

“நமக்கு நம்ம பையனோட சந்தோசம் தானே முக்கியம் ?” என்று உடலையோ தலையையோ ஏன் விழியையோ கூட சிறிதளவு கூட அசைக்கமால் சிலை போல் இருந்தபடியே கேள்வி கேட்டாள்.

“அதுல என்னம்மா சந்தேகம்”

“அப்படினா இனிமே நாம ஜாதி மதம் குளம் கோத்திரம்ன்னு எதையும் பார்க்காம, நம்ம பையனோட ஆசைப்படி மட்டும் பொண்ணு தேடுவோமா ?” என்றவளின் விழிகள் மாது விழியோடு மோதிக் கொண்டு இருந்தது.

மாது சிறுது யோசித்துவிட்டு, “ஏன் திடீர்ன்னு இந்த முடிவுக்கு வந்துட்ட? இன்னும் ரெண்டு மூணு பொண்ணுங்கள நம்ம இனத்துலையே பார்த்துடலாமே !!”

“இல்லைங்க. எனக்கு 47 வயசாகுது. நம்ம பையனுக்கு 25 ஆகுது. சரி கல்யாண வயசு வந்துடிச்சே, அவன்கிட்ட கல்யாணம் பேச்சை எடுக்கலாமான்னு நான் யோசிச்சிட்டு இருக்கும் போதே, அவனே வந்து அம்மா எனக்கு பொண்ணு பாருங்க'ன்னு சொன்னான். ஒரு பக்கம் சந்தோசமா இருந்தாலும், ஒரு பக்கம் அவனே வந்து கேக்குற அளவுக்கு அவனோட மனச புரிஞ்சிக்காம இருந்து இருக்கேனே'ன்னு வருத்தமும் இருந்தது. அன்னையில இருந்து பொண்ணு தேட ஆரம்பிச்சோம். ஒவ்வொரு வீடா போயி பொண்ணும் பார்த்துட்டும் வந்தோம். ஆனா போயி பொண்ணை பார்த்துட்டு வந்த பிறகு அவன் சொல்லுரதுலாம்….” என்றபடி பெண் பார்க்கும் படலம் ஒவ்வொரு முறை முடிந்த பிறகும் கார்த்தி அவனது தாய் சிவகாமியுடன் கூறும் வார்த்தைகளை நினைவு கொண்டாள்.

*
“என்னம்மா இந்த பொண்ணு அப்படியே புடிச்சி வைச்ச பொம்மை மாதிரி அப்படியே நிக்குது ?”

“அடக்கமான பொண்ணு டா”

“அடக்கமான பொண்ணா ? இல்ல அடக்கம் பண்ணி வச்சி இருந்த பொண்ணா ? அப்படியே ஒரு சின்ன அசைவு கூட இல்லாம நிக்குது”

“டேய் இதுலாம் ஒரு காரணமா ?”

*

“முடி அலை அலையா இருக்கும்ன்னு சொன்ன, போயி பார்த்தா அளவே அறுத்து விட்ட மாதிரி தான் இருக்கு ?”

“டேய் அது பேஷன் டா”

“எனக்கு இந்த பொண்ணை பிடிக்கல”

*

போன்ற நினைவுகள் சிவகாமியின் மனதை வலம் வந்தன. முடிவாக,

“இல்லைங்க. நம்ம ஆளுங்க வேணாம். வேற ஆளுங்கள பாப்போம்”

“மத்த இனத்துல அவனுக்கு பிடிச்ச பொண்ணு இருக்கும் ங்கிறதுக்கு என்ன உறுதி. நம்ம இனத்துலையும் பாப்போம், மத்த இனத்துலையும் பார்போம். ஆனா கண்டிப்பா நம்ம பையன் புடிச்ச மாதிரி இருக்குற பொண்ணோட தான் அவனுக்கு கல்யாணம். கவலைப்படாத”

“ம்ம்ம்… சரிங்க” என்றவளின் முகத்தில் வருத்தம் கொஞ்சம் விலகி இருந்தது.

இரண்டு நாட்களுக்கு பிறகு, சிவகாமி ஹாலில் அமர்ந்து இருந்த நேரம், அங்கே இருந்த கார்த்தியின் போன் அடிக்க தொடங்க, அதை பார்த்த சிவகாமி “எப்பவும் போனும் கையுமா ஒட்டியே சுத்துவான். இன்னைக்கு என்ன அதிசியமா விட்டு பிரிஞ்சி இருக்கான்” என்று சொன்ன படியே போனை எடுத்து ஆன் செய்து பேச தொடங்க,

“ஹல்லோ” என்றாள்

“ஹலோ” என்று மறுமுனையில் இருந்து எதிரொலிக்க,

“யாருங்க ?”

இரண்டு மூன்று வினாடி மௌனத்திற்கு பிறகு, “அம்மா நான் தான்மா கார்த்தி ப்ரண்டு மணி” மணியின் குரல் ஒலிக்க,

“சொல்லுப்பா எப்படி இருக்க ?”

“நான் நல்லா இருக்கேன்ம்மா. கார்த்தி இல்லை ?”

“என்னமோ அதிசியமா போனை ஹால்லையே வச்சிட்டு போய் இருக்கான். அவன் அவனோட ரூம்ல தான் இருப்பான். இரு கொடுக்குறேன்”

“அம்மா அம்மா, இல்லை நான் உங்க கிட்ட பேசத்தான் அவனுக்கே போனே போட்டேன்” என்று அவசர அவசரமாக கூறி முடித்தான்.

“என்கிட்டயா ? என்ன எதவாது அவன் காதல் கீதல்ன்னு சுத்திட்டு இருக்கானா ?” என்றவளின் குரலில் சிறுது கோவம் கலந்த வெறுப்பு இருந்தது.

“ச்சேச்சே… நம்ம கார்த்திக்கு அந்த மாதிரி எண்ணம்லாம் இல்லைம்மா. அதுவும் இல்லாம அப்படி எதாவது இருந்து இருந்தா அவனே வந்து உங்ககிட்ட பொண்ணு பார்க்க சொல்லுவானா ?”

“அப்புறம் வேற என்ன ?”

“நீங்க கார்த்திக்கு பொண்ணு தேடிட்டு இருக்குறதா அவன் சொன்னான். எதுவும் பொருந்தி வரலன்னும் சொன்னான். எனக்கு தெரிஞ்ச ஒரு தரகர் இருக்காரு...” என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே,

“தரகர் வச்சிலாம் பொண்ணு பார்க்க வேண்டாம்'ன்னு கார்த்தி சொல்லிட்டான்'ப்பா. அதனால தான் நாங்களே ஒவ்வொருத்தர் கிட்டயா கேட்டு கேட்டு போய் பார்த்துட்டு வரோம்”

“இல்லம்மா. இவர் மத்த தரகர் மாதிரிலாம் இல்லை. கார்த்திய பார்த்து இவர் பேசி, அவனுக்கு எப்படி இருந்தா பொண்ணு பிடிக்கும் ன்னு சின்ன சின்ன விஷயங்களை சொன்னாலே போதும், ஒரு வாரம் இல்லைன்னா ரெண்டே வாரத்துல அவனுக்கு பிடிச்ச மாதிரி பொண்ணை கண்டுபிடிச்சி கொண்டு வந்துடுவாரு”

“அப்படியா சொல்லுற ?”

“ஆமாம்மா. எனக்கு நல்ல தெரியும் அவரை”

“கார்த்தி ஏதாவது சொல்ல போறான்'ப்பா”

“நான் பேசிக்கிறேன்'ம்மா அவன்கிட்ட”

“சரி நீ அந்த தரகரை வர சொல்லு”

“சரிம்மா இன்னைக்கே கூட்டிட்டு வந்துடுறேன்” என கூறி முடிக்க இருபக்கமும் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

அன்றைய மாலைப் பொழுதே, மணி தரகருடன் கார்த்தியின் வீட்டுக்கு வர, தரகர் கார்த்தியை தனியே அழைத்து சென்று, அவனுடைய விருப்பங்களையும் ஆசைகளையும் தெரிந்து கொண்டார். பின் சிவகாமியிடம் வந்து,

“உங்க பையன் கிட்ட பொண்ணு எப்படி வேணும்'ங்கிறதை நல்லா கேட்டு தெரிஞ்சிக் கிட்டேன். இன்னும் ஒரு வாரத்துல உங்க பையனுக்கு பிடிச்ச மாதிரி பொண்ணோட வரேன்”

“தரகரே, எங்களுக்கு குலம் கோத்திரம்'லாம் முக்கியம் இல்லை. எங்க பையன் மனசுக்கு பிடிச்ச மாதிரி பொண்ணு கிடைக்கணும் அதான் முக்கியம்”

“அவ்ளோ தானே. கவலைய விடுங்க, உங்க பையனுக்கான பொண்ணை தேட வேண்டியது என் பொறுப்பு” என்று கூறிவிட்டு, தரகர் அங்கு இருந்து கிளம்பினார்.

ஒரு வாரத்தில் வருவதாக கூறிவிட்டு சென்ற தரகர், ஐந்தாவது நாளே வந்து இன்ப அதிர்ச்சி தந்தார். காரணம் அவர் கொண்டு வந்த பொண்ணுடைய போட்டோ, கிட்டத்தட்ட கார்த்தியின் விருப்பங்களோடு ஒத்து போய் இருந்தது. அதனை பார்த்த சிவகாமி எப்படியும் இந்த வரம் நல்லபடியாக அமையும் என்றே உறுதி கொண்டாள். கார்த்தி எப்பொழுதுமே பொண்ணை போட்டோவில் பார்ப்பது இல்லை, நேரில் தான். அதனால் அவன் மட்டும் அந்த போட்டோவை பார்க்கவே இல்லை.

இருவீட்டாரின் சம்மதத்தோடு பெண் பார்க்கும் படலத்திற்கு ஓர் நன்னாள் தேர்வு செய்யப்பட, அந்நாளும் அழகாகவே வந்தது. கார்த்தி மாப்பிளைக்கே உரிய கம்பீரத்தில் பெண் வீட்டுக்குள் நுழைய, அனைவரும் அவர் அவர்களுக்கான இடத்தில் அமர்ந்தனர். வந்து நீண்ட நேரமாக எதை எதையோ எல்லோரும் பேசிக்கொண்டு இருக்க, பெண் மட்டும் வரவில்லை.

கார்த்தி சிவகாமியின் காதில், “என்னம்மா பொண்ண இன்னும் காணோம்” ன்னு கேட்க,

சிவகாமி, பெண்ணின் தந்தையை பார்த்து, “பொண்ணை வர சொல்லுங்களேன்”

“பொண்ணு ரெடியாகிட்டு இருக்காங்க. கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க”

கார்த்தி “என்னமா பொண்ணு இவ்ளோ நேரம் ரெடியாகுது. ரொம்ப லேட் ஆகும் போலயே” என சிவகாமியின் காதில் கிசுகிசுக்க,

“டேய் பொண்ணு இப்ப வந்துடும் டா. இதுக்காகலாம் இந்த வரனை வேண்டாம்ன்னு சொல்லிடாதடா. நீ தான் அந்த பொண்ணை போட்டோல பார்க்கல, பார்த்து இருந்தா நீ இப்படி பேச மாட்ட, பொண்ணு அப்படியே நீ எப்படி ஆசைப்பட்டியோ, அப்படி இருக்காடா. ப்ளீஸ் டா கண்ணா. அம்மா பாவம் டா” என்று பதட்டத்துடனும் அதே சமயம் மெதுவாகவும் கூறி முடிக்க,

கார்த்தியோ, “அம்மா” என்று அழுத்தி கூறிவிட்டு “நான் பொண்ணு வர லேட் ஆகுமோ ன்னு மட்டும் தான் கேட்டேன்” எனக்கூற,

“நீ பொண்ணு பார்க்க இடத்துலையோ, இல்ல பார்த்து முடிச்சிட்டு வீட்டுக்கு போன பிறகோ, நீ ஏதாவது பேச வாய் எடுத்தாலே பயமா தான்டா இருக்கு”

கார்த்தி சிரித்தபடியே “ஷோ” என்று கூற,

இதனை பார்த்து கொண்டு இருந்த, பெண்வீட்டார் “மாப்ள என்ன சொல்லுறார் ?”

“இல்லை பொண்ணு வர நேரமாகும் போல ன்னு கேட்கிறார் அவ்ளோ தான்” என சிவகாமி கூற,

“அது அலங்காரம் பண்ண கொஞ்சம் நேரமாயிடிச்சி, அதான். நீங்க வேணா அதுவரை வீட்டை சுத்தி பார்த்துட்டு வந்துடுங்களேன்” என பெண்ணின் தந்தை சொல்ல,

கார்த்தியும் சரி என்பது போல தலையசைத்தான். உடனே அவரோ அவருக்கு அருகில் இருந்த ஒரு சிறுவனை வீட்டை சுற்றிக்காட்ட அனுப்பி வைக்க, கார்த்தியும் மணியும் அந்த சிறுவனை பின் தொடர்ந்தனர்.

அந்த சிறுவன் ஒவ்வொரு அறையாக அது என்ன அறை என்ற விளக்கத்துடன் கூறி கொண்டு வர, ஒரு அளவுக்குமேல் கார்த்தி அந்த சிறுவனிடம்,

“போதும். நான் என்ன வாடகைக்கு வீடு பார்க்கவா வந்து இருக்கேன். பொண்ணு பார்க்க தானே”

“இல்லை அப்பா தான். உங்களுக்கு எல்லா இடத்தையும் சுத்தி காட்ட சொன்னாரு”

“இப்பவே எல்லா இடத்தையும் பார்த்துட்டா கல்யாணத்துக்கு அப்புறம் சுவாரஸ்யம் இருக்காது” என்று கார்த்தி கூறியதும், மணி கார்த்தியை பார்த்து முறைக்க,

கார்த்தியோ, “சீரியஸ் ஆகாத சிங்கிள் மீனிங் தான்”

“நான் ஒன்னும் சீரியஸ் ஆகல”

“அதான் உன் மூஞ்ச பார்த்தாலே தெரியுது. ஏன் இப்படி மூஞ்ச சீரியசாவே வச்சிட்டு இருக்க”

“இந்த நிச்சயம் நல்லபடியா முடியுற வரைக்கும் அப்படி தான்” என மணி சொல்லி கொண்டு இருக்கும் போதே, அவர்கள் இருந்த இடத்திற்கு பக்கத்தில் இருந்த அறையில் இருந்து ஒரு குரல் ஒலித்து கொண்டு இருந்தது.

“இதுவரைக்கும் வந்த எல்லா மாப்பிளையையும் ஒவ்வொரு காரணம் சொல்லி பிடிக்கலன்னு சொல்லிட்டா, இந்த மாப்பிளைக்கு என்ன சொல்ல போறாளோ” என்ற ஒரு முதிர்ச்சியான குரல் கேட்க,

அடுத்த நொடியே மாப்பிளையையும் அனைவரும் இருந்த இடத்திற்கு அழைத்தனர். கார்த்தி தான் அமர்ந்து இருந்த இடத்தில் போய் அமர்ந்து கொள்ள, அடுத்த வினாடியே பெண்ணும் அங்கே வந்தது.

சுத்த பொன்னால் ஆனா மேனி, அதை அழகாய் மெருகேற்றிய ஆடை என, அப்பெண் தேவதைக்கு இலக்கணமாய் திகழ்ந்தாள். பெண் வந்த சில நொடிகளுக்கு பிறகு, சிவகாமி கார்த்தியிடம், “பொண்ணை பிடிச்சி இருக்காடா”

“முதல பொண்ணுக்கு என்னை பிடிச்சி இருக்கான்னு கேளும்மா”

“பொண்ணோட விருப்பம் என்னன்னு பையன் கேக்குறான்” என்று சிவகாமி சபையையும் பெண்ணையும் பார்த்து கேட்க,

வந்து நின்ற பெண்ணோ மௌனமாகவே இருக்க,

அதை பார்த்த பெண் வீட்டார், “மௌனம் சம்மதத்துக்கு அறிகுறி” என சொல்ல,

கார்த்தியோ, “எனக்குலாம் பிடிச்சி இருந்தா மௌனமாலம் இருக்க மாட்டேன். நல்லாவே பேசுவேன்”

“ஆனா நீங்க இன்னும் உங்களுக்கு பிடிச்சி இருக்கான்னு சொல்லவே இல்லையே”

“பிடிச்சதால தான் அதை விட்டுட்டு மத்தத பேசிட்டு இருக்கேன்” என்றதும் சபையில் சில சந்தோஷ குரல்கள் ஒலித்து கொண்டு இருந்தன.

கார்த்தி சொன்னதை கேட்ட அந்த பெண் சிலையும், தனது சம்மதத்தை ‘சரி’ என்பது போல் மெல்ல தலையசைத்து உறுதி செய்ய, சபையில் இப்பொழுது அந்த சந்தோஷ குரல்கள் பெருகி இருந்தன. பெண்ணின் தாய் தந்தை முகத்திலும், கார்த்தியின் தாய் தந்தை முகத்திலும் சந்தோஷ வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி கொண்டு இருந்தது.

கார்த்தி பெண்ணின் தந்தையிடம், “உங்க பொண்ணு ரொம்ப கூச்ச சுவாபம் போல” என்றதும்,

அவரோ ஒருமுறை அவரது பெண்ணை பார்த்து விட்டு ஆமாம் என்பது போல தயங்கி தயங்கி தலையை அசைத்தார்.

அதன் அர்த்தத்தை புரிந்துக் கொண்ட கார்த்தி, சிரித்துக்கொண்டே “உங்க பொண்ணுக்கிட்ட கொஞ்சம் தனியா பேசணுமே” என்றதும் சபை சட்டென அமைதி கொண்டது.

அவரோ எதோ சொல்ல தயங்க, உடனே கார்த்தி, “உங்க பொண்ணை எனக்கு நிஜமா பிடிச்சி இருக்கு. கட்டினா உங்க பொண்ணை தான்” என சொன்னதும்,

அவர் சிரித்துக்கொண்டே ,”அதுக்கு இல்லை மாப்ள. நீங்க போய் தாராளமா பேசிட்டு வாங்க” என கூற,

அவர்கள் இருவரும் தனியாக பேச ஓர் இடம் அமைத்து தரப்பட்டது. அங்கே கார்த்தி சென்றதும், அங்கே இன்னொரு பெண் இருப்பதை பார்த்த கார்த்தி, அந்த பெண்ணிடம்,

“நீங்க யாரு ?”

“நான் இவங்களோட ரிலேட்டிவ்”

“எனக்கும் ரிலேட்டிவ்ஸ் இருக்காங்க. ஆனா ஹால்ல இருக்காங்க. நீங்களும் ஏன் அங்க இருக்க கூடாது” என்று கூறியதும், அந்த பெண் சரி என்பது போல் தலையசைத்தபடியே அங்கு இருந்து சென்றாள்.

அந்த பெண் மறைந்ததும், கார்த்தி அவனுக்கு அருகில் நின்று கொண்டு இருந்த அந்த உலக அதிசியத்தை பார்த்தான்.

“உங்க பேரு ?” என்றவன் குரலில் ஆசை இருந்தது

“ஷாலினி” என்று அந்த தேவதை தனது பூலோக பெயரை கூற,

கார்த்தி அதனை மனதிற்குள் ஒருமுறை சொல்லிக் கொண்டான்.

பின் ஷாலினியை பார்த்து, “என்னை உங்களுக்கு பிடிச்சி இருக்கா ?”

மெல்ல ஆம் என்பது போல தலையசைக்க,

கார்த்தி, “நீங்க சொன்னது எனக்கு கேட்கல”

“பிடிச்சி இருக்கு” என்ற வார்த்தை கார்த்திக்கு ஒருவித போதையை தந்தது.

“நிஜமாவா ?” என்றவன் நெருங்கி சென்றான்.

“ம்ம்”

“அதை நான் எப்படி நம்புறது ?” என்ற வினா எழுந்ததும்,

ஷாலினி கார்த்தியை இறுக அணைத்து, அவன் உதடோடு தன் இதழை சேர்த்து, முத்த மழையை பொழிய தொடங்கி, உலகில் இதுபோல் வேறு சந்தோசம் இல்லை என்பதை கார்த்தி உணர்த்தி கொண்டு இருந்தாள்.

இரண்டு நிமிட மழைக்கு பின் முத்தம் நிறுத்தப்பட, அணைப்பு மட்டும் விலகாமல், ஒட்டியே நின்று கொண்டு இருந்தனர்.

கார்த்தி,“இதுக்காக தானே இத்தனை நாளும் காத்து இருந்தோம்”

ஷாலினி, “அஞ்சு வருசமா உயிருக்கு உயிரா காதலிச்சும்”

“எங்க நம்ம அப்பா அம்மா நம்ம காதலை ஏத்துக்க மாட்டாங்களோ ன்ற பயத்துல”

“வெக்கம் விட்டு, நமக்கு நாமளே வரன் பார்க்க சொல்லி”

“வந்த வரனை எல்லாம் ஏதாவது ஒரு காரணம் சொல்லி”

“அதை வேண்டாம் ன்னு சொல்லி”

“நம்மோட பிரண்ட்ஸ் மூலமா”

“ஒரு தரகரை பிடிச்சி”

“அவரை வந்து நம்ம வீட்ல பேச சொல்லி”

“உங்க வீட்ல என் போட்டோவையும்”

“உங்க வீட்ல என் போட்டோவையும்”

“தர சொல்லி”

“ரெண்டு வீட்டாரையும் சம்மதிக்க வச்சி”

“பொண்ணு பார்க்க வச்சி”

“ரெண்டு வீட்டாரையும் ஒருத்தருக்கு இன்னொருத்தரை பிடிக்க வச்சி”

“இப்போ ஒன்னா இணைஞ்சி இருக்கோம்”

“இனி நம்மை யாராலும் பிரிக்க முடியாது”

“இந்த ஜென்மம் முழுக்க உன் மடியிலும் உன் மார்பிலும் என் வாழ்க்கையை கொண்டாடனும்” என்றவளின் விழிகள் நீரை வெளியேற்ற,

அதை தன் விரலால் துடைத்த கார்த்தி மீண்டும் அவள் இதழ் மேல் மழையை பெய்ய தொடங்கினான். திடீரென தோன்றிய ஒரு மூச்சு சத்தம் அவர்களது முத்த மழைக்கு முழுக்கு போட்டது.

சத்தம் வந்த திசையை இருவரும் பார்க்க, அங்கே ஒரு மூதாட்டி நின்று கொண்டு, ஷாலினியை பார்த்து, “பொண்ணு பார்க்க வந்த அன்னைக்கே இப்படியா?” என்று கேட்க,

இருவரும் வெட்கத்துடன் அசட்டு சிரிப்பு சிரித்தனர்.

- முற்றும் -

- ஊதா மூங்கில்

எழுதியவர் : ஊதா மூங்கில் (2-Sep-16, 9:05 am)
சேர்த்தது : ஊதா மூங்கில்
பார்வை : 588

மேலே