அடுத்தவரின் தனிப்பட்ட உரிமையில் தலையிடுவது அவமானம்
திருமணத்துக்கு முன்பும் பின்பும் தமது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க, மாற்றிக்கொள்ள பெண்ணுக்கு உரிமை இருக்கவேண்டும் என்று பெரியார் ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டு இருக்கிறார். அப்போது பார்வையாளர் ஒருவரிடம் இருந்து அவருக்கு ஒரு துண்டு சீட்டு தரப்படுகிறது. மைக்கில் அதை வாய் விட்டுப் படிக்கிறார்: "அப்போது மணியம்மையை நான் கூட்டிக் கொண்டு போகலாமா?"
பெண்ணை தம் உடமையாகப் பாவிக்கும் "ஆண்மை" இந்தக் கேள்வியைக் கேட்டு கொதித்திருக்கும். பெரியார் சட்டென பதில் சொல்கிறார்: "மணியம்மையிடம்தான் நீங்கள் கேட்கவேண்டும்".
(குறிப்பு: இந்த உரையாடல் செவி வழிச் செய்தி. நானாக எந்தப் புத்தகத்திலும் படிக்காதது)
காதலிப்பதும், காதலிக்க மறுப்பதும், காதலித்து காதலில் இருந்து வெளியேறுவதும், திருமணம் செய்வதும், திருமண பந்தத்தில் இருந்து வெளியேறுவதும், வேறொருவரை காதலிப்பதும், மணப்பதும், திருமணமே செய்யாமல் சேர்ந்து வாழ்வதும் ஒரு பெண்ணின் உரிமை. ஓர் ஆணின் உரிமை. அடுத்தவரின் தனிப்பட்ட இந்த உரிமையில் தலையிடுவதுதான் அவமானம்.