காதலை தேடி-17

காதலை(லே) தேடி-17
உன் கூந்தலை சூடிக்கொள்ள
பூக்கள் கூட்டம் யாசிக்கும் வேளை
மௌனமாக என்னை பார்த்து
புன்னகைத்தபடியே சொல்கிறாய்
என்னவர்க்காகவே நானென்று......
எதை கேட்டாலும் நிலத்தை பார்த்து
வெட்கப்படும் நீ
என் மூச்சுக்காற்றை ஸ்பரிசித்தே
என் அருகாமையை உணர்ந்துகொள்கிறாய்......
எப்படி தான் இப்படி
பொய் சொல்ல கற்றுக்கொண்டாயோ
நான் திட்டி விட்டு உன்னை
சமாதானம் செய்யும்போதெல்லாம்
எனக்கு கஷ்டமாவே இல்லைங்க
என்று வெகுளியாக புன்னகைக்க......
தேவதைகள் மண்ணில் பிறப்பதில்லை
தேவதைகள் கண்ணுக்கு தெரிவதில்லை
இரண்டுமே பொய் தான்.......
என்னோடு ஒரு தேவதை
வாழ்ந்து கொண்டிருக்கிறதே!!!!!!......
சகி இன்னும் என்ன பண்ணிட்டு இருக்க, நேரம் ஆச்சு, அங்க பர்த்டே பார்ட்டியே முடிஞ்சிடும், ஆனா நீ ரெடி ஆகி வரமாதிரி தெரியல.......
எதுக்குங்க இப்படி டென்ஷன் ஆகறீங்க, நீங்க மட்டும் பாண்ட்,ஷர்ட் போட்டுட்டு இப்படி ஸ்மார்ட்டா எனக்கு முன்னாடி ரெடி ஆகி நிக்கறீங்க, ஆனா எனக்கு அப்படியா, இந்த ஆறு கஜம் புடவையை அழகா மடிப்பெடுத்து அதுக்குள்ள நான் பெர்பெக்டா செட் ஆக டைம் ஆக தான் செய்யும், இதுக்கே இப்படி குதிக்கிறிங்க, இதுல பட்டுப்புடவை கட்டிக்கோனு வேற, யாரோ சொன்னாங்க, அப்படி மட்டும் நான் செஞ்சுருந்தா இந்நேரம் என்ன விட்டுட்டே கிளம்பிருப்பிங்க போல.....
“சகி அப்படி மட்டும் சொல்லாத, எவ்ளோ நேரம் ஆனாலும் சரி உனக்காக காத்திருப்பேனே தவிர உன்ன விட்டுட்டு போக மாட்டேன்.......”
ஒரு நிமிடம் நேருக்கு நேராய் என் விழிகளை பார்த்து ஸ்தம்பித்து நின்றவள் சூழ்நிலையை சகஜமாக்க பேச்சை மாற்றினாள்.......
“இந்நேரம் அத்தை இருந்திருந்தா புடவை கட்ட எனக்கு ஹெல்ப் பண்ணிருப்பாங்க, இப்படி டிசைனரி புடவைலாம் கட்றது எனக்கு ரொம்ப கஷ்டமா “இருக்கு என்று புலம்பியபடியே மடிப்பு வரிகளை சரி செய்து கொண்டிருந்தாள்.......
நான் அவள் அருகில் நெருக்கமாய் சென்று காதோரமாய், "சகி....... சொல்லிருந்தா நானே கட்டிவிட்ருப்பேனே, நான் புடவை கட்றதுல பி.ஹெச்.டி முடிச்சிருக்கேன்" ஒரு கிறக்கத்தோடு சொல்ல அதே கிறக்கத்தோடு என்னை பார்த்தவள் "இப்போ உங்களுக்கு நேரம் ஆகிறதே தெரியாதே, நான் ரெடி போலாமா" என்று உதடுக்குள் புன்னகையை மறைத்தபடி என்னை விரட்ட ஆரம்பித்தாள்......
பார்ட்டி வெகு ஜோராய் போய்க்கொண்டிருக்க சகியோ என் நண்பர்களின் மனைவிகளோடு ஐக்கியமாகி அவர்கள் சொன்ன ஜோக்கிற்கு விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தாள்......
இது சரியில்லையே, இதுக்கா சகிய இங்க கூட்டிட்டு வந்தோம், நம்ப திட்டத்தை செயல்படுத்த ஆரம்பிச்சிட வேண்டியது தான்.......
என் ஆஃபிஸில் யாரை பார்த்தாலும் வழியும் வழிசல் நவநாகரிக இளைஞி என் கண்ணில் பட அவளை அப்படியே என் பேச்சால் என் பக்கத்தில் ஒட்ட வைத்து கொண்டேன்......நான் வாயை திறந்தாலே எதோ பெரிய ஜோக்கை சொன்னதை போல என் தோளை இடித்துக்கொண்டு விழுந்து விழுந்து சிரித்து , ஏன்டா இந்த திட்டத்தில் இவளை இழுத்தோம் என்று மானசீகமாக என்னை தலையில் அடித்து கொள்ளவைத்தாள்.....
"மிஸ்ஸஸ் மாலினி நான் உங்களை அப்புறமா மீட் பண்ணறேன், அங்க என்னோட பிரண்ட்ஸ் சிலர் வந்துருக்காங்க, அவங்கள பாத்துட்டு வரேன்" என்று அவளிடம் இருந்து நழுவி செல்ல என் வாய்க்கு வந்ததை உளறினாலும் அவள் என்னை விடுவதை போலவே தெரியவில்லை.....
“என்ன சாரதி………, எனக்கு கம்பெனிக்கு யாருமே இல்ல, இப்போ நீங்களும் போனா நான் என்ன பண்றதாம் என்று சிணுங்கலோடு அவள் சொன்ன தோரணை பார்த்தால் எனக்கு அவள் கன்னத்தில் பளாரென்று ஒரு அறையை விடவேண்டும் போல் இருந்தது.......
இருந்தாலும் எல்லாம் என் முன்வினை தானே, "என்ன சொன்னாலும் இவள் விடற மாதிரி தெரியலையே" என்று மனதுக்குள் புலம்பியபடி அப்படியே என் சகியின் பக்கம் நோட்டம் விட்டேன்......
சகியோ, வாய்க்குள் சிரிப்பும் கண்ணில் அனல் பறக்கும் பார்வையும் பிரவேசிக்க அவள் தோழிகளோடு பேசியபடியே மாலினியையும், என்னையும் வெறித்து பார்த்தது அவளுக்கும் எனக்கும் இருந்த இடைவெளியிலும் நன்றாக எனக்கு தெரிந்தது.....
ஓகே, நம்ப பிளான் ஒர்கவுட் ஆகுது, இனி இந்த மாலினி தான் எனக்கு துருப்பு சீட்டு என்று மனதுக்குள் நினைத்து கொண்டேன்.....மாலினி எதையெதையோ பேசி கொண்டிருக்க நானும் சிரித்தபடியே ஓரக்கண்ணால் என் மணாளினியை ரசித்து கொண்டிருந்தேன்....
ஹப்பப்பா எத்தனை கோவம் அவள் கண்ணில், இத்தனை காதலை உள்ளுக்குள் வைத்துக்கொண்டு ஏதும் அறியா சிறு குழந்தை போல் என்னை விட்டு விலகி ஓடிக்கொண்டிருக்கிறாள்.
ராகவன் என்னை அழைக்க என் காதல் விளையாட்டை தற்போதைக்கு நிறுத்திவிட்டு மாலினியிடம் சீக்கிரத்தில் வருவதாக சொல்லியபடி அங்கிருந்து நகர்ந்தேன்.....
சிறிது நேரத்தில் நண்பர்களின் அரட்டையில் இருந்து தப்பி பிழைத்து சகியை என் பார்வையின் வட்டத்திற்குள் அலசி பார்த்தால் அவள் இங்கு இல்லை என்பது தெரிந்தது, அதற்குள் எங்கு சென்றிருப்பாள் சிறிது மன பதட்டத்தோடு தேடிக்கொண்டே விருந்து நடைபெறும் இடத்திற்கு வந்தால், அங்கே சகி யாரோடோ தீவிரமாக பேசிக்கொண்டிருந்தாள், அங்கு பிரகாசித்த நவநாகரீக விளக்கின் ஒளியில் அவளோடு பேசிக்கொண்டிருந்த அந்த நபர் யாரென்று சரிவர தெரியவில்லை.....
சரி அருகிலேயே போய் பார்த்துவிடலாம் என்று நான் பாதி தூரத்தை கடப்பதற்குள்ளேயே சகி அங்கிருந்து நகர்ந்துவிட்டாள்......அப்படி யாரோடு பேசிக்கொண்டிருந்தாள், தெரிந்து கொள்ள இன்னும் நெருங்கினால்அங்கு தனியாக சகி சென்ற திசையையே வெறித்தபடி நின்றுகொண்டிருந்தது வேறு யாருமில்லை மாலினியே தான்......
அப்படி மாலினியோடு என்ன பேசியிருப்பாள் அதுவும் அவ்வளவு தீவிரமாக, புரியாமல் குழப்பத்தோடு குழம்பியிருந்தேன்......