முயலுக்கு மூன்று கால்

========================
(1)
பண்டைய இராஜ அலங்கார கோலத்தில்
=பார்ப்பவர் விழியுள் பரவசத்தை பிரசவிக்கும்
தொண்டினை செய்யும் தூயகலை நாடகத்தை
=தெருவினில் நடத்தும் தொழிலாக்கி வாழ்க்கையின்
வண்டியை ஓட்டும் வாலிபனே உன்னுதட்டில்
=வந்துமே ஒட்டிய வெண்சுருட்டின் அவலட்சணம்
முண்டிய டித்து முன்பாயும் முயலுக்கு
=மூன்றுகால் எனுமோர் மூடத்தனம் காட்டிடுதே!
*
=======================
(2)
நான்பிடித்த முயலினையே நன்றாய் பாரீர்
=நான்காம்கால் அதற்கில்லை. நடக்கு மதற்கு
மூன்றுமட்டு முள்ளதென்று மூடத் தனமாய்
=முடிவாகத் தம்வாதம் முன்றில் வைத்து
ஊன்றுகோலைக் கொண்டதுதான் ஊன்றி ஊன்றி
=ஊருக்குள்ளே நடக்குதென்று உவமை சொல்லி
சான்றோனாய் தனைக்காட்ட சாகச நாடகம்
=சபையேற்ற வேசமிடும் சகுனிக் கூட்டம்
நிமிராத நாய்வாலை நிமிர்த்தி வைக்கும்
=நிபுணத்துவம் பெற்றவராய் நினைத்துக் கொண்டு
திமிரான வாய்வார்த்தைத் தினமும் பேசித்
=திரிகின்ற இவர்நாவால் தீண்டித் தீண்டி
உமிழ்கின்ற பொய்மட்டும் உயிராய் வாழ
=உணர்வுகளில் எப்போதும் உரச எரியும்
அமிலமெனும் சுயநலத்தை அடுக்கி வைத்து
=அடுத்தவரின் உயர்மனதை ஆட்டி வைப்பர்.
நிலவுமகள் கறுப்பென்று நம்மைக் கேட்டால்
=நிச்சயமாய் அதுதானே நிசமே என்றும்
உலவுதென்றல் காற்றதுவும் உலவும் நேரம்
=உச்சிவெயில் நெற்றிசுடும் கால மென்றும்
பலவகையில் அவர்வழியில் பதிலை செப்பப்
=பழகிக்கொளும் போதினிலே பயமே இல்லை
உலகத்தோ டொத்துவாழ வேண்டு மாயின்
=ஒருகாலை முயலுக்கு ஒடித்தல் நன்று .
*மெய்யன் நடராஜ்