மகளதிகாரம்
வழியெலாம் மறுத்த நியாயங்களை
வார்த்தை களின்றியே கற்பிப்பாள்;
மொழியெலாம் மறைத்த கவிதைகளை
மழலை இசையில் ஒப்பிப்பாள்;
அழைத்த குரலுக்கு வரமாட்டாள்
அம்மாவை அதட்ட துணைக்கிழுப்பாள்
குழைந்து கேட்டால் தரமாட்டாள்-பின்
குறும்பாய் முத்தக் கனி கடிப்பாள்;
பிரிய தேவதை என்றாலும்
பேய்க்கதை கேட்டு அடம் பிடிப்பாள் ;
பாதிக் கதையில் நான் தூங்க
போர்வையைத் தாயென போர்த்திவைப்பாள்;
கண்ணா மூச்சி ஆடவைத்து
கவலைப் பூச்சிகளைத் துரத்திவைப்பாள் -தினம் தினம்
காணாமல் தொலையும் வாழ்க்கையைக்
கண்ணோரம் காட்டி ரசிக்கவைப்பாள்;
சித்திரக் கூடம் அவள்சுவர்கள்
சொர்க்கங்கள் நிறையும் அவள்தடங்கள்
எத்தனை நிறங்கள் மகள்சிரிப்பில்
எத்தனை வரங்கள் அவள் அணைப்பில் !