சேர்த்து வைக்கிறேன்
"சேர்த்து வைக்கிறேன்"
======================
எத்தனைக் காகிதத்துண்டுகள்
பூக்களாகிட கெஞ்சி
உங்கள் பிஞ்சுவிரல்களில் பட்டபோது
சேர்த்து வைக்கிறேன்
அண்நாக்கு தூக்கி அகலே சிரிக்கும்போது
சேர்த்து வைக்கிறேன்
அந்த கன்னக்குழிகளில்
அன்று விழுந்த என் கண்கள்
கட்டியவளிடம்
அவர்களுக்கு கொஞ்சம்
மைய்யிடேன் என்கின்ற போது
சேர்த்து வைக்கிறேன்
தண்டு கால்களால் சுமந்த
பித்து தந்தை தலைக்கு
அவளும் அவனும் ஆராரோ சொல்கிறபோது
சேர்த்து வைக்கிறேன்
குஞ்சு இதழ்களின் எச்சத்தில்
தாய்ப்பால் நெடி தருகிறபோது
சேர்த்து வைக்கிறேன்
வளர்ந்த பின்னால் கேலி மாளிகை அடுக்கி
மௌனம் தருகிறபோது
சேர்த்து வைக்கிறேன்
கழுத்தை இறுக்கி
மோவாய் முட்ட மடி மேலேறும்போது ,,,
சேர்த்து வைக்கிறேன்
ஆணியம் பேசிய அறுக்கும் நாவு
அப்பனாகியப் பின்னால் நாணி
தற்கொலை செய்துக்கொண்டபோது
சேர்த்து வைக்கிறேன்
அஞ்சு வயசு வரைக்கும்
அப்பாதான் குளிக்க வைக்கணும் என்று
பேபி சோப்பை சுமக்க
அள்ளாடி அள்ளி
இருவரும் மாறி மாறி
என் முகத்தில் தேய்க்கின்றபோது
சேர்த்து வைக்கிறேன்
நிலத்தில் சிந்திக் கிடக்கிற பருக்கைகளை
ஒவ்வொன்றாக பொறுக்கி எடுத்து
உறங்கி கொண்டிருக்கும் என் வாயில்
திணிக்கின்றபோது
சேர்த்து வைக்கிறேன்
அதிகாலை தவழ்ந்து
போர்வைக்குள் தலைப்புதைத்து
முகத்தோடு முகம் உரசும்போது
சேர்த்து வைக்கிறேன்
மொட்டை அடித்த தலைகளுக்கு
மல்லிகைப்பூ கேட்டு அடம் செய்கிற போது
சேர்த்து வைக்கிறேன்
அவன் தலைவாரி விட
அவள் என் கன்னங்களில் லிப்ஸ்டிக் அப்பிவிட
அடித்துப்பிடித்து
புரியாத வண்ணங்களால்
மூடித்திருக்கும் இமைகளும்
குருமயிரிழைகளும்
காடு கிறுக்கி அறை நிறைகிறபோது
சேர்த்து வைக்கிறேன்
வெளியிடையில்
விரல்களைப் பிடித்துக்கொண்டு
குதலையால்
பார்ப்பவைகளை எல்லாம்
அது என்ன இது என்ன
என்று கேட்டுக்கொண்டே
விரல்களைச் சப்பி கூச்சமூட்டுகிறபோது
சேர்த்து வைக்கிறேன்
கவிஞன் தாட்களின் இடை இடையே
இளைப்பாறிப்போகும் கவிதைகள்
ஏராளம் இருக்கலாம்
என் கடைசித் தாள்வரை
உதிரம் கொண்டு இவர்களை நிரப்புகிறபோது
சேர்த்து வைக்கிறேன்
"பூக்காரன் கவிதைகள்"