அம்மா
வருடங்கள்
பதினைந்து ஆன பிறகும்
வலித்துக்கொண்டிருக்கிறது மனசு
"அம்மா" என்று நாங்கள்
அழைத்தும் பிரக்ஞயை இன்றி
தோலுடல் போர்த்திய பொம்மையாய்
புழுதியில் புரளும் புழுவாய்
ஏதோ ஒரு இனம் தெரியாத பிரதேசத்தில்
தனித்துவிடப்பட்டவளாய்........
இன்னும்கூட
வலித்துக்கொண்டிருக்கிறது மனசு
இரவு பகல் நமக்கென்றால்
அப்படி ஏதும் நேர்ந்திருக்க வாய்ப்பில்லை
அவள் உலகில்
உணவும் நீரும் செல்லாத போது
ஈ எறும்புகளுக்கே ஆனது பிரசாதம் !
எங்களை சிறிதும் சிந்திக்காத
அவள் நினைவு தப்பிய நினைவுகள்
கடவுளிடமும்,பெயர் தெரிந்த கதாநாயகர்களிடமும் ,
பறவை,செடிகொடிகளிடமும்
ஓயாமல் வாய் பேசி சண்டை இட்டுக்கொண்டிருக்க
பார்த்து சகிக்கஇயலாத
எங்கள் கண்களுக்கு
பரிசாக கிடைத்ததென்னவோ
கண்ணீர்தான்!
எதிர் வீட்டு,பக்கத்துக்கு வீட்டு
அம்மாக்கள்
தன் பிள்ளைகளுக்கு
வகையாய் சமைத்து
பள்ளிக்கு அனுப்புகையில்,
அரைகுறை வயிறோடு
பாட புத்தகங்களுடன்
நைந்து போன மனதையும்
சுமந்து சென்று வந்த வகுப்பறை நாட்கள்
மிக அதிகமல்ல,
எனது பத்தாம் வகுப்பு தொடங்கி
கல்லூரி முடியும் வரை தான்....!
அடிக்கொரு அடி தொலைவுகளிலிருந்தும்
கடித்துவிடுவாள் என் அம்மா என்று
எட்டியே இருந்த உறவுகளால்
தனிமைப்படுத்தப்பட்டதாலோ என்னவோ
உறைந்துபோய்விட்டது
என் உதடுகளில்
சிரிப்பும், அளவோடு பேசும் வார்த்தைகளும்கூட ....!
செய்வினைக்கோளாறு என்று
யார் யாரோ சொல்லி
ஏதேதோ பரிகாரங்கள் செய்தும்
ஓயவில்லை
அவளின் முரண்டு பிடித்த "பித்து"
இப்பொழுதும்கூட
சுய நினைவுகளின்றி
படுக்கையிலே கிடக்கிறாள்
மாத்திரைகள் விழுங்கிய மயக்கத்தில் ...
நேற்று ...
"எப்போதும் ஜாலியா இருங்க சார் "
என்று அறிவுரை சொன்ன நபருக்கு
தெரிந்திருக்க வாய்ப்பில்லை
என் வலி !