மல்லிகையே

மாற்றான் தோட்டத்தில் என் மல்லிகை..
**********************************
பிரபஞ்சத்தில் எங்கு தேடினாலும் என் மகள் போல் ஒருத்தி
இல்லை...
அன்பென்றால்
பனியின் முகமலர்ச்சியும்
தவறென்றால்
சூரியனின்
ரௌத்திரமும் கொண்டவள்...
தமயந்திக்கு
உகந்த நளனை
தேடும் வீமன் நான்
மாற்றான்
தோட்டத்தில்
என் மல்லிகை
மணப்பது உறுதி...
என் குலப்பெருமையை
என்னாளும் உயிர்
போல் காப்பவள்
மங்காத என் ஒளியே
மண்ணில் வாழும் மனிதரெல்லாம்
விண்ணையாளும் தேவரெல்லாம்
புகழட்டும்
உன் வாழ்க்கையை பார்த்தே...
மகளாய்
நான்
பெற்றெடுத்த
என் இன்னொரு தாயே
உனை பிரிந்து வாழ்வது கடிதென்றாலும்
நீ எங்கிருந்தாலும்
மகிழ்ச்சியாய்
வாழ்வாய்
என்ற நினைவோடே
வாழ்ந்திடுவேன்
கொற்றவனின்
உற்ற துணையே...
இப்படி ஒரு மகளை
பெற்றேன் என்று
ஊர் புகழ வைத்துவிட்டாய்
இதற்கு மேல் ஒரு தந்தைக்கு என்ன வேண்டும் தாயே...
~ பிரபாவதி வீரமுத்து