ரயிலும் எனக்கொரு போதி மரம் – சந்தோஷ்
(அகல் இதழ்-க்கு எழுதிய பதிவு )
இரயில். இரயில் நிலையம் எனும் சொல் பல வரலாறுகளை தன்னுள் உள்ளடக்கிய ஒரு பொக்கிஷம். அற்புதமான சொல் என்றால் மிகையாகாது.
ஒவ்வொரு போராட்டங்களும், ஒவ்வொரு போரும் பெரும் மாற்றத்தை உண்டாக்கிய வரலாறு ஆகிறது எனில் இரயிலும்.. இரயில் நிலையங்களும் அதை சார்ந்து நடந்த போராட்டங்களும் வரலாறு ஆகியிருக்கிறது.
தென்னாப்பிரிக்காவில் புலம் பெயர்ந்து வாழும் பார்ஸிகள், முகமதியர்கள், தமிழர்கள், குஜராத்திகள், வங்காளிகள் போன்றோரின் பொது நலனைப் பாதுகாக்க "நேட்டால் காங்கிரஸ்' என்ற மக்கள் இயக்கத்தை மகாத்மா காந்தி ஏற்படுத்தினார். காலனி ஆதிக்கத்தை எதிர்த்து இந்திய தேச சுதந்திரத்திற்காவும் போராடினார். இதற்கு முக்கிய காரணியாக இருந்தது தென்னாப்பரிக்க நாட்டில் ஒரு இரயில் பயணத்தின் போது நிற வெறி மற்றும் இந்தியர் என்பதால் வெள்ளையரால் பீட்டர் மாரிட்ஸ்பர்க் எனும் இரயில் நிலையத்தில் காந்தியடிகள் வலுக்கட்டாயமாக இறக்கிவிடப்பட்டது. இந்நிகழ்வை முக்கிய வரலாறாக எடுத்துக்காட்டலாம்.
Picture
சென்னையின் கம்பீர அடையாளமாக இருக்கும் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் ஹென்ரி இர்வின் என்ற ஆங்கிலேயரால் வடிவமைக்கப்பட்டு 1853 ஆ ம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த இரயில் நிலையத்தில் தென்னாப்பரிக்காவில் குஜாராத்திகள், வங்காளிகள் மற்றும் தமிழர்கள் துன்புறுத்துபடுவதை எடுத்துரைக்க 1896 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி மெட்ராஸ் வந்தற்கான அடையாளமாக ஒரு கல்வெட்டு உள்ளது.
இமயம் முதல் குமரி வரை எங்கள் பாரத தேசம் என்பதற்கேற்ப கன்னியாகுமரிக்கு இரயில் பாதை கட்டாயம் அமைக்கபட வேண்டுமென தினமலர் நாளிதழ் நிறுவனர் மேற்கொண்ட அளப்பரிய போரட்டத்தின் பலனாக அன்றைய முதல்வர் கருணாநிதி தலைமையில் காங்கிரஸ் தலைவர் காமராஜர் முன்னிலையில் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் கன்னியாகுமரி வரையிலான இருப்பு பாதைக்கு அடிக்கல் நாட்டினார். திறப்பு விழா 1979 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் முன்னிலையில் பிரதமர் மொராஜி தேசாய் அவர்கள் இரயில் போக்குவரத்தைத் துவக்கி வைத்தார். இந்தியப் பெருங்கடலையும், இமயமலையையும் இரயில் பாதை மூலம் இணைத்ததில் பெரும் பங்கு தினமலர் நிறுவனர் டி.வி.ஆர் அவர்களையே சாரும்.
இரயில், இரயில் பயணங்கள் குறித்து ஏராளமான கவிஞர்கள் பாடியிருப்பார்கள். எழுத்தாளர்கள் எழுதியிருப்பார்கள், திரைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஏன்? ஏன் என்றால் மனிதர்களோடு எந்திரப் பாம்பாக உறவாடும் இரயிலானது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பலப்பல உணர்வு ராகங்களை பாடியிருக்கும். இரயில் வெறும் போக்குவரத்து தேவை மட்டுமல்ல, சிலருக்கு வாழ்க்கை. சிலருக்கு வேடிக்கை. சிலருக்கு ரசனை. அரிதாக ஒரு சிலருக்கு மட்டுமே இரயிலில் பயணிப்பது என்பது ஒரு கலை!
“ஃபைவ் ஸ்டார்” எனும் திரைப்படத்தில் பாடகர் உன்னி கிருஷ்ணன் பாடிய "ரயிலே ரயிலே ஒரு நிமிஷம் ரதியைப் பார்க்க நிற்பாயா" எனும் பாடலின் ஒரு வரியில் கவிஞர் பா. விஜய் "ரயிலே உன் மேலே நான் தோள் சாயும் தோழன்" என எழுதியிருப்பார். எத்தனை ஆத்மார்த்தமான வரி. ஆழமான அர்த்தம். உணர்வுகளை உரசும் வரி! என்பது ரயிலில் பயணித்து துக்கம் மறந்து சுகங்களை அனுபவித்தவர்களுக்குப் புரியும். ஆம் தானே! ரயில் பயணம் ஓர் உல்லாசம் தரும் தென்றல் சுகம். மழலையின் புன்னகையழகில் மயங்குவதைப் போல இனிமை தரும் சந்தோஷ அனுபவம்.
இருப்பு பாதைகளின் வழித்தடங்களை நம் தேச வரைப்படத்தில் பார்க்கும் போது இரயில் பாதை நம் தேசத்தின் நரம்புகளாக காட்சியளிக்கும். உலகத்திலுள்ள மிகப்பெரிய தொடர் வண்டி வலையமைப்புகளில் நம் இந்திய இரயில்வேயும் ஒன்று. அதிகளவு பணியாளர்கள் கொண்டதில் உலகளவில் ஏழாவது இடத்திலிருக்கும் சிறப்பு பெற்றது நம் இந்திய இரயில்வே துறை (கிட்டதட்ட 1.4 மில்லியன் ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள்)
நாம் 500 கிலோ மீட்டருக்கு ரயிலில் பாதுகாப்பாக சுகமாக பயணிக்கிறோம் என்றால் அதற்குப் பின்னணியில் தோரயமாக 250 க்கும் மேற்பட்ட இரயில்வே ஊழியர்களின் பங்களிப்பும் அர்ப்பணிப்பும் இருக்கிறது. மிகையாக கருத வேண்டாம். மிக குறைவாகவே சொல்லியிருக்கிறேன். ஆம் ஒரு ரயில் என்ஜினில் ஒரு ஓட்டுநர், ஒரு உதவி ஓட்டுநர், கார்டு பெட்டியில் ஒரு கார்டு என்று சொல்லப்படும் கண்காணிப்பாளர் மற்றும் ஒவ்வொரு இரயில் நிலையத்திலும் பல ஸ்டேஷன் மாஸ்டர்கள். அவர்களுக்கு உதவியாக உதவியாளர்கள்.. இரயில் பாதையை சீர் செய்பவர்கள். சிக்னல் சரியாக இயங்க தினந்தோறும் ஆய்வு செய்யும் தொழில் நுட்ப அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள். இரயில் பாதைகள் மற்றும் இரயில் நிலைய நடை மேடைகளை சுத்தம் செய்யும் துப்புரவாளர்கள். இரயில்வே போலீசார் என பல நிலைகளில் பல துறைகளாக ஒன்றிணைந்து நமது பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்கிறார்கள். இதற்குத் தான் பல சலுகைகளுடன் ஊதியம் பெறுகிறார்களே! என நாம் சிந்திக்கலாம். கடமை என்பது வேறு, அர்ப்பணிப்புடன் கூடிய கடமை என்பது வேறு.
ஊழியர்களைப் பிரிவு / துறை வாரியாக எளிதாக குறிப்பிட வேண்டுமெனில் இரயில் இயக்கம், நிர்வாகம், பொறியியல், தொழில்நுட்பம், பராமரிப்பு, பாதுகாப்பு, துப்புரவு, வருவாய், பொதுப்பணி என்பன போல குறிப்பிடலாம். இத்தனை துறைகளிலுள்ள ஊழியர்களின் ஒத்துழைப்புடன் தான் நமது ரயில் பயணம் பாதுகாப்பாகவும், இனிமையாகவும் அமைகிறது. இதில் சில துறை ஊழியர்களின் பணி குறித்தும் அதிலுள்ள சிரமங்கள் பற்றியும் நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
நீராவி என்ஜின்கள் என்றிலிருந்து டீசல் என்ஜின் மற்றும் மின்சார என்ஜின் என இந்திய இரயில்வே வளர்ச்சி அடைந்தாலும், புதிய புதிய தானியங்கித் தொழில் நுட்பங்களுடன் கூடிய சிக்னல் சிஸ்டம் இருந்தாலும் ரயில்வேயிலுள்ள ஒரு சில துறைகளிலும் ஊழியர்களின் கடினமான உழைப்பு இன்றும் அதிகம் தேவையாக இருக்கிறது. அவர்களின் பணி நேர சிரமங்கள் இன்றளவும் குறைந்தபாடில்லை.
டிரெயின் பைலட் எனப்படும் இரயில் ஓட்டுநர் மற்றும் கார்டு எனப்படும் கண்காணிப்பாளர் பணியானது மிகுந்த நுட்பமாகவும், எந்நேரமும் புத்துணர்ச்சியுடன் அசதி ஏற்படாதவாறு உழைக்க வேண்டியதொன்று.
இரயில் ஓட்டுநருக்கு அதிக கவனிப்புத் திறன், துரிதமாக செயலாற்றும் திறன், நுட்பமான நுண்ணிய கண் பார்வை போன்றவை மிக முக்கியம் ஆனால் அவர்கள் பணியிலிருக்கும் போது சிறுநீர், மலம் கழிக்க இயலாது. இரயில் என்ஜினில் நாம் பயண செய்யும் இரயில் பெட்டியிலுள்ளது போல கழிப்பறை இல்லை. இரயில் குறித்த காலத்தில் சரியாக இயக்க வேண்டும். சிக்னல் கொடுக்கப்பட்டால் உடனடியாக இரயில் இயக்க வேண்டும் எனும் போது அவர்கள் தங்களது இயற்கை உபாதைகளை எப்படித் தீர்க்க முடியும்? இரயில் நிலையத்தில் இரயில் நிற்கும் சமயத்தில் அல்லது சிக்னலுக்காக நடு வழியில் காத்திருக்கும் போது கிடைக்கும் நேரத்தில் தான் முடியும் என்கிறார் ஒரு ஓட்டுனர். இதற்காக இரயில்வே துறையும் அரசும் என்ன செய்யப்போகிறது என்பது காலத்தின் விடையாக இருக்கும்.
கார்டு என்பவரின் பணி என்னவெனில் இரயில் புறப்படவும், நிறுத்தவும் அனுமதி தருவது. இரயில் நிலையங்களில் இரயில் கடந்த நேரம், நடு வழியில் இரயில் நின்றதற்கான காரணம் போன்றவற்றை குறிப்பெடுத்துக்கொள்வது, ரயில் பின்புறமாக செல்ல வேண்டியிருந்தால் அதற்கு சரியான சிக்னல் தருவது, பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், உதவவும் செய்வது. நடு வழியில் பயணிகள் அபாய சங்கலி இழுத்து இரயிலை நிற்க வைத்தாலும், வேறு ஏதேனும் காரணங்களால் இரயில் நின்றாலும் அதற்கான காரணங்களை கண்டறிந்து தீர்வு செய்வது உள்ளிட்ட வேலை. கார்டும் இரயில் ஓட்டுநர் போல அசதி இல்லாது விழிப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும். ஒவ்வொரு இரயில் நிலையத்திலும், இரயில் நின்றாலும், நிற்காமல் சென்றாலும் சிக்னல் கொடுத்தாக வேண்டும்.
இரயில்வே விதிப்படி இரயில் கார்டு இல்லாமல் எந்த ஒரு இரயிலும் இயக்கப்படாது (பயணிகள் மற்றும் சரக்கு). சிரமங்கள் என்று பார்த்தால் காட்டுப்பகுதியிலோ அல்லது இரவு நேரத்திலோ இரயில் நடு வழியில் நின்றால் விலங்குகளாலும் சில தீய மனிதர்களாலும் அச்சுறுத்தல் ஏற்படலாம்.. குறிப்பாக சரக்கு இரயிலில் கார்டுகளாக பணிபுரிவர்களுக்கு பாதுகாப்பும் குறைவே.
இரயில்வே தொலை தொடர்பு மற்றும் சிக்னல் துறையிலிருக்கும் ஊழியர்களின் நிலையும் சில சமயம் அபாயகரமானதாக இருக்கும். இரயிலில் பயணிக்கும் போது பாதைகளின் ஓரத்தில் சில்வர் பெயிண்ட் அடிக்கப்பட்ட ஒரு ஜங்ஷன் பெட்டி ஆங்காங்கே இருக்கும். அதில் சிக்னலுக்கான ஒயர்கள், கட்டுப்பாட்டு கருவிகள், , இணைப்புக் கருவிகள் போன்றவை இருக்கும். இரயில் பாதையிலுள்ள சிக்னலில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் அதை உடனடியாக சிக்னல் ஊழியர் சரி செய்தாக வேண்டும். எட்டு மணி நேரப் பணி என்பதெல்லாம் இவர்களுக்கு கிடையாது. நள்ளிரவு நேரமென்றாலும் இரயில் பாதையோரமாக ஒவ்வொரு ஜங்ஷன் பெட்டியைத் திறந்து பார்த்து பரிசோதித்தாக வேண்டும். காட்டுப்பகுதிகளில் அமைந்திருக்கும் இதுபோன்ற பெட்டிகளை பரிசோதிக்கும் போது கொடிய விஷமுள்ள பாம்புகளும் இருக்குமாம். இரயில் பாதையில் நடக்கும் போது யாரேனும் ஒருவர் அடிபட்டு இறந்து இரத்த வெள்ளத்தில் துண்டு துண்டாக இருப்பார். அதை, உடனடியாக இரயில்வே காவல் அதிகாரிகளுக்கு தெரிவித்து எந்தவித பயமும் இல்லாமல் பணியாற்ற வேண்டும்.
இரயில் பாதை பராமரிப்பு பணிகளில் ஈடுபடும் ஊழியர்களின் நிலை :
இரயில் தண்டவாளங்கள்.. அடியிலிருக்கும் வலுவான சிமெண்ட் கட்டைகளில் (sleepers) இணைக்கப்பட்டிருக்கும். தோரயமாக ஒவ்வொரு அடிக்கு ஒரு சிமெண்ட் காங்கீரிட் கட்டை (இரும்பு மற்றும் மரத்திலும் இருக்கிறது. அதிவேக இரயில் பாதைகளில் சிமெண்ட் காங்ரீட் கட்டைகளே பயன்படுத்தப்படுகிறது) இருக்கும். தண்டவாளத்தையும் சிமெண்ட் கட்டைகளையும் இணைத்து பூட்டுவது பிஷ் பிளேட் எனப்படும் இரும்புத்துண்டுகள் தான். இரயில்கள் அதிவேகமாக செல்லும் போது இத்தகைய ஃபிஷ் பிளேட்டுகள் அதிர்வினால் நழுவி விடும். இதை தினந்தோறும் ஊழியர்கள் கிட்டதட்ட 50 மைல்கள் நடந்தே சென்று பரிசோதித்து சரி செய்ய வேண்டியிருக்கிறது. தண்டவாளங்களை பேக்கிங் செய்ய கருவியுடன் கூடிய இரயில் பெட்டியிருக்கிறது என்றாலும் தினந்தோறும் ஆய்வு செய்வதற்கு ஊழியர்களே அதிகம் பயன்படுத்தப்படுகிறார்கள்.
பாரமரிப்பு பணிகளிலுள்ள ஊழியர்கள் இரயில் விபத்திற்குள்ளாகும் போது தண்டவாளங்களை சீரமைக்க வழக்கத்திற்கு மாறாக அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். சில இடங்களில் இரயில் பாதை பராமரிப்பு பணிகள் டெண்டர் மூலம் ஒப்பந்தம் முறையில் நடக்கிறது. ஒப்பந்தக்காரர்கள் அதிக லாபம் பார்க்க குறைவான பணியாளர்களை அமர்த்தி அவர்களின் உழைப்பை உறிஞ்சுவர். பெரும்பாலும் தென் இந்தியாவில் வட நாட்டு கூலித் தொழிலாளர்கள் குறைவான கூலிக்கு அதிகளவில் ஈடுப்படுத்தபடுகிறார்கள்.
துப்புரவுப் பணியாளர்கள் இரயில் நிலையத்திலிருக்கும் இரயில் பாதைகளிலுள்ள குப்பைகள் மற்றும் மனித கழிவுகளை அகற்றும் போது நோய் தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது. என்னதான் பாதுகாப்பு உபகரணங்கள் கொடுக்கப்பட்டாலும் சக மனிதர்களின் அசுத்தத்தை சுத்தம் செய்யும் பணி கொடுமையானதே. துப்புரவு பணியாளர்களும் பெரும்பாலும் ஒப்பந்தம் முறையிலே பணியமர்த்தப்படுகிறார்கள். இரயில் பெட்டிகளிலுள்ள கழிப்பறைகளை சுத்தம் செய்ய கருவிகள் வழங்கப்பட்டாலும் சில சமயம் மெத்தனமாகவும், சில சிமயம் அர்ப்பணிப்புடனும் பணியாற்றுகிறார்கள். எது எப்படியோ பயணிகளாக பயணிக்கும் நாம் தான் இரயில் கழிப்பறைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளும் சுய ஒழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். சரிதானே?
மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் கொடூரத்தை ஒழிக்க இரயில்வே துறை பயோ டாய்லெட் முறை இரயில் பெட்டிகளை அமைத்து வருகிறது. 2019 ஆம் ஆண்டுக்குள் நாடெங்கும் ஓடும் இரயில்களில் பயோ டாய்லெட் அமைக்கப்படும் என உறுதியளித்திருக்கிறார்கள்.
இரயில் பெட்டிகள் ஒன்றோடொன்றாக இணைக்கும் பணியிலிருக்கும் ஊழியர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு பணியாற்ற வேண்டியிருக்கிறது. ஒரு இரயில் பெட்டியிலிருந்து அடுத்த பெட்டிக்கு கொக்கி போட்டு பிரேக் வால்வுகளை இணைக்க இரு இரயில் பெட்டிகளுக்கு நடுவே நின்றிருக்க வேண்டும். அஜாக்கிரையாக இருந்தால். ஒரு பெட்டியோடு மற்றொரு பெட்டி மோதும் போது இடையில் சிக்கிக்கொண்டு உடல் நசுங்கி இறக்க நேரிடும். இது போன்ற பணிகளில் ஈடுபடும் போது சிக்னல் செய்ய கூடுதலாக ஒரு ஊழியர் இருப்பார். சில இடங்களில் ஒருவரே இந்த பணியில் ஈடுபடும் போது உயிர் இழப்பு உண்டாகிறது.
இரயில்வே ஊழியர்களின் தியாகங்கள் இன்றி இந்திய இரயில்வே துறையை போற்றிப் பாராட்ட இயலாது
03/12/1984 - போபாலில் விஷவாயு பரவியதால் பலரும் பாதிப்புக்குள்ளாகி வாயில் ரத்தம் வழிந்தவாறு இறந்தது நமக்கு நினைவிருக்கும். போபால் ஸ்டேஷன் வழியாக லக்னோவில் இருந்து மும்பை செல்லும் ரயிலுக்கு சிக்னல் க்ளியரன்ஸ் கொடுத்துவிட்டு வெளியே வந்தார் ‘துருவே’ என்கிற ஸ்டேஷன் மாஸ்டர். காற்றில் ஏதோ வித்தியாசம் கண்டு, அபாயத்தை உணர்ந்து வருகிற இரயிலை தடுத்த நிறுத்த முயன்றும் முடியவில்லை. இப்போதுள்ள ஒயர்லெஸ் வசதிகள் அப்போது இல்லை. முந்தைய இரயில் நிலையத்திற்குத் தகவல் சொல்லி இரயிலை நிறுத்த இயலும். போபாலைக் கடந்த மும்பை இரயில் பயணிகள் செத்து மடிவதைக் கண்டு அஞ்சி அவர் அங்கிருந்து ஓடாமல் விஷவாயுவை சுவாசித்தவாறே வாயிலும் நாசியிலும் இரத்த வழிந்தவாறு இரவு முழுவதும் பணியாற்றி இருக்கிறார். எந்த இரயிலும் போபால் ஸ்டேஷனுக்கு வரக்கூடாது என்றும் வந்தாலும் கதவு ஜன்னல்களை மூடியவாறு அதிவேகமாக கடக்கவேண்டுமெனவும் அனைத்து நிலையங்களுக்கும் தகவல் சொல்லிக் கொண்டிருந்தவரை மறுநாள் காலை பிணமாகத் தான் மீட்க முடிந்தது.
நாம் இருப்பு பாதை போக்குவரத்தை அதிகம் நாடுவதற்கும் நம்பிகைக்குரிய பாதுகாப்பான பயணங்கள் அமைவதற்கும் துருவே போல எண்ணற்ற இரயில்வே ஊழியர்களின் தியாகங்கள் இன்றி சாத்தியமாகாது. இது போல எண்ணற்ற ஊழியர்களின் அர்ப்பணிப்பான சேவையில் தான் நம் இரயில் பயணம் இனிக்கிறது, இனிமையாகிறது, சுகமாகிறது. இங்கே இந்த கட்டுரையில் இரயில்வே ஊழியர்களின் பங்களிப்பையும் அர்ப்பணிப்பையும் குறிப்பிட்டது மிக குறைவே. பயணங்களின் போது நான் கண்டும் கேட்டும் அதிர்ந்தும் போன செய்திகள் நிறைய இருக்கிறது.
இரயிலையும்.. இரயில் நிலையங்களையும் திரைப்படங்களில் காட்சிப்படுத்தியிருப்பர்கள். கதைகளில் களமாகவும் பயன்படுத்தியிருப்பர்கள். ஆனால் இரயில்வே இயக்கத்திற்குப் பின்னணியில் உள்ள ஏராளமான ஊழியர்களின் அர்ப்பணிப்பையும், தியாகத்தையும் எந்த சினிமாவிலும் எந்த ஒரு நாவலிலும் குறிப்பிட்டு இருப்பார்களா என்பது சந்தேகமே!
டார்ஜ்லிங் இமய மலை இரயில் பாதை, ராமேஸ்வரம் பாம்பன் இரயில் பாதை, கொங்கன் இரயில் பாதை, ஹூப்லி – மட்கா(ன்)வ் – வாஸ்கோடாகாமா இரயில் பாதை, கால்கா – சிம்லா இரயில் பாதை, ஊட்டி மலை இரயில் என பல அழகிய இரயில் பாதைகளோடு பாரம்பரிய சின்னமாகத் திகழும் இந்திய இரயில்வே இந்தியாவின் தேச ஒருமைப்பாட்டுக்கும், கலாச்சார பண்பாட்டுத் தூதுவனாகவும் இயங்கும் இரயில்களின் சத்தங்களுக்கு பின்னணியில் பல லட்சம் ஊழியர்களின் உழைப்பு இருக்கிறது. தியாகங்களும் இருக்கிறது. தேசமெங்கும் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட இரயில் நிலையங்கள் இருக்கிறது. 67, 312 கிலோ மீட்டர் அளவிற்கு இரயில் பாதைகள் இருக்கிறது. இதில் இரும்பு வாசத்தோடு.. தன் வாழ்க்கையில் பாதியளவை இரயில்வே துறைக்கே அர்ப்பணிக்கும் ஊழியர்களின் கதைகளும் இருக்கிறது. அவர்களின் சிரமங்களை அறிந்து சுகாதாரமான பாதுகாப்பான இரயில் பயணத்திற்கு பயணிகளான நாமும் இரயில்வேக்கு முழு ஒத்துழைப்பு தருவோம்.
இரயில்வே துறையிலும் மற்ற துறைகளைப் போல நேர்மையற்ற கண்ணியம் தவறிய அதிகாரிகள் ஊழியர்கள் இருக்கதான் செய்கிறார்கள். என்ன செய்ய.. பச்சை பசேலென வளரும் நெற்பயிர்களுக்கு நடுவே சில விஷச் செடிகளும் வளரத்தானே செய்கிறது.
உண்மையான, நேர்மையான கண்ணியமான இரயில்வே ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு சல்யூட் வைக்கலாம் தானே?
இரயில் தோழர்களுக்கு ராயல் சல்யூட்!
**
-- இரா. சந்தோஷ் குமார் .
---------
நன்றி : அகல் மின்னிதழ்