​மணப்பெண் ​

​மணமேடைக்கு வந்தாலே
--நாணமதும் பிறந்திடுமோ
​மயக்குகின்ற அழகென்பது
--அழையாமல் வந்திடுமோ !

கவர்ந்திழுக்கும் காஞ்சிப்பட்டு
--கன்னியவள் மேனிப்பட்டு
புதுமலரின் புன்னகையுடன்
--புதுவாழ்வும் துவங்குகிறது !

அழகூட்டிய அழகுடனே
--அலங்கரித்த பொற்சிலை
மணந்திடும் மல்லிகையால்
--மனங்களை ஈர்க்கின்றாள் !

மெய்ப்படும் கனவுகளால்
--சிலிர்த்தட்ட சிந்தையுடன்
கலையாத ஓவியமவள்
--கண்மூடி சிரிக்கின்றாள் !

குறையிலாக் குமரியவள்
--நிறைந்திட்ட நெஞ்சமுடன்
நினைக்கின்றாள் எழிலரசி
--நிகழ்வுகளை நாணமுடன் !

மங்கையவள் மணக்கோலம்
--மணமுடிக்கும் வேளையிது
எண்ணங்கள் நிறைவேறி
--வண்ணமிகு வாழ்வாகட்டும் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (25-Sep-16, 7:56 am)
பார்வை : 1355

மேலே