முத்தங்களின் நீட்சி

முத்தங்களின் நீட்சியில்
மறைந்திருக்கும் பேருலகு
உதட்டு சாசனப்படி
மறைந்தே கிடக்கிறது..

கிடக்கிற மறதியில்
தப்பி தவறி உருண்டோடி
தழலாய் புனலாய்
ஈரச் சத்தமாய்
இசையாய் கேட்கிறது..

கேட்கும் முத்தத்தைவிட
கொடுக்கும் முத்தம்
வன்மமாய்
உயிரை கிழித்து
உருக வைத்துவிடுகிறது..

வைத்திருக்கும்
காதலெல்லாம்
நாவாலே பேசி
உதட்டாலே உறிஞ்சி
அருவியாய் ஆர்ப்பரித்து
அடங்க மறுக்கிறது..

மறுத்துவிடும் மாயங்களை
மயங்காமல் புகுத்தி
மனதில் மழையாக
மொத்தமாய் பொழிகிறது..

பொழியும் முத்தங்கள்
முழுதாய் முடிந்ததும்
சாரல் முத்தங்கள்
சலனத்தை உடைக்கிறது..

உடையும் இதழ்களில்
இழப்பது ஒன்று
பெறுவது ஒன்று
இரவல் மட்டும்
கிடையவே கிடையாது..

யுகங்கள் பல கடந்து
நீளும் சில முத்தங்கள்
முடிந்தும் முடியாத
அடர் ஆசைகள்
மீண்டும் கேட்கும்
இன்னுமொரு முத்தம்
முத்தங்களின் நீட்சியாய்..

எழுதியவர் : கோபி சேகுவேரா (25-Sep-16, 6:22 pm)
பார்வை : 78

மேலே