முதுமையில் நெஞ்சம்
முதுமையில் நடுங்குகிறதெனது கரங்கள்
இளமையில் நடுங்கவைத்ததென் கரங்கள் !
வளர்ந்திட்ட அகவையினால் இந்நிலையோ
தளர்ந்திட்ட மேனியினால் வந்தவிளைவோ !
உழைத்துக் கழித்தேன் காலத்தை நானும்
பிழைத்து வாழ்ந்திட ஞாலத்தில் நாளும்
நுழைத்த நுண்ணறிவு உதவியது என்றும்
தழைத்தக் குடும்பமும் வளர்ந்தது நன்றே !
ஏக்கமும் பலவுண்டு என்னின் வாழ்க்கையில்
தூக்கமும் தொலைத்த துயர்களும் நிறைந்தது !
நோக்கம் எதுவுமின்றி வாழ்ந்த வாழ்க்கையும்
ஆக்கம் ஏதுமில்லா வழிப்போக்கன் நிலைதான் !
பிள்ளைகளும் பிறந்து கிளைகளாக பிரிந்ததும்
பெற்றவரைக் கைவிடுவர் பெரியவர் ஆனதும் !
வாடிக்கை ஆனது வேடிக்கையாய் நிகழ்கிறது
வாழ்க்கையும் மாறுது வயோதிக நிலையிலே !
நினைத்துப் பார்த்தால் உள்ளமும் உடைகிறது
நீண்ட பெருமூச்சே வடிகாலாய் வெளியேறுது !
நிலையிலா வாழ்வில் நித்தமொரு வருத்தமே
நிலையான நிம்மதி வேண்டும் கல்லறையில் !
பழனி குமார்