நீயே என் காதலடி

"சனியன்.. சிடுமூஞ்சி.. எப்பபாரு மூஞ்சிய உம்முண்ணே வச்சிருக்கா..." தேனிலவிற்கு வந்திருக்கும் எந்தக் கணவனாவது தன்னோட மனைவிய இப்பிடித் திட்டுவானா. ஆனா நம்ம ஹீரோ ஹரிவர்த்தன் இப்படித்தான் திட்டிக்கிட்டிருந்தான். ஆனா மனசுக்குள்ள தான். சத்தம் போட்டுத் திட்டுனா அப்புறம் கீர்த்தனா கிட்ட இருந்து அவனக் காப்பாத்த அந்தக் கடவுளாலேயே முடியாதே. கீர்த்தனா யாருன்னு கேக்குறீங்களா? சார் கொஞ்சம் முன்னாடி அன்பா சனியன்னு மனசுக்குள்ள கொஞ்சிட்டிருந்தாரே அந்த மிஸ்.சிடுமூஞ்சி சாறி சாறி மிஸ்ஸஸ்.சிடுமூஞ்சி ஹரிவர்த்தன் தாங்க கீர்த்தனா. சரி அவங்களுக்குள்ள என்ன சண்டை அப்டின்னு தானே யோசிக்குறீங்க? வாங்க பாக்கலாம்.
சோபாவில் வாகாக தலையை சாய்த்துக் கொண்டு போனிலேயே புதைந்து விடுபவள் போல பார்த்துக் கொண்டிருந்தவளை கட்டிலில் அமர்ந்து ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தான் ஹரிவர்த்தன். அவன் பார்ப்பது தெரிந்தும் தெரியாதது போல் கால் மேல் கால் போட்டவாறு போனில் சாட் பண்ணிக் கொண்டிருந்தாள் கீர்த்தனா.
"பாக்குறாளா பாரு முண்டம்."
"என்னடா சொன்னா நான் முண்டமா?" காளி போல் கண்களை உருட்டியபடி கீர்த்தனா கேட்ட பொழுது தான் புரிந்தது, மனதுக்குள் பேசுவதாக எண்ணிக் கொண்டு சத்தமாகப் பேசி விட்டோம் என்று. என்ன சொல்லிச் சமாளிப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே நல்லவேளையாக அவனது போன் பாடியது. "எக்ஸ்கியூஸ் மீ" என்று சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகி பல்கனியில் வந்து நின்று கொண்டான்.
"நல்ல வேளைடா மச்சி. சரியான நேரத்துல கால் பண்ணி என்னக் காப்பாத்திட்டாடா. என் தெய்வம்டா நீ."
"............................................."
"அதையேண்டா கேட்டு வயித்தெரிச்சல கிளப்புறா."
".............................................."
"சரியான பொம்பள ரௌடிடா இவ."
"ஆஆஆஆஆ.........."
பின்னிருந்து கீர்த்தனா எறிந்த லட்டு சரியாக அவன் மண்டையில் பட்டு சிதறி விழுந்தது. லட்டு பட்டதற்கே என்னமோ பீரங்கிக் குண்டு தலையில் விழுந்த மாதிரி கத்தியவனது வாயை அவசர அவசரமாக ஓடி வந்து பொத்தினாள் கீர்த்தனா. இதுதான் சாக்கென்று அவள் கையைக் கடித்தவனது வயிற்றில் ணங்கென்று ஒரு குத்து விட்டாள்.
அவங்க சண்ட போட்டு முடிக்குறதுக்குள்ளாற வாங்க நாம அவங்க பிளாஷ்பக்க பாத்துட்டு வந்துரலாம்.
"என்ன ஒரு காந்தக் கண்கள்" கீர்த்தனாவை முதன் முதலில் பார்த்த பொழுது ஹரிவர்த்தனது மனதில் தோன்றியது இந்த எண்ணம் தான். அப்பொழுது விழுந்தவன் தான். பின்பு எழவே இல்லை. தான் ஒரு வக்கீல் என்பதையும் மறந்து தினம் அவள் கணினி வகுப்புக்கு வரும் பொழுதும், போகும் பொழுதும் அவளைப் பார்ப்பதற்கென்றே தனது தங்கையை கொண்டுவிட கர்ம சிரத்தையாக வரத் தொடங்கினான். பத்திரிகை நிறுவனத்தில் ரிப்போட்டராக இருந்த கீர்த்தனாவிடம் விரும்பியே நட்புக் கொண்டாள் ஹரிவர்த்தனது சுட்டித் தங்கை ஹரிணி. ஹரிணி மூலமாக தன் காதலை கீர்த்தனாவுக்கு தெரிவித்தவனுக்கு ஆரம்பத்தில் கிடைத்த பதில் என்னமோ மறுப்பு தான். ஆனாலும் மனம் சோராமல் மீண்டும் மீண்டும் அவன் முயன்ற போதோ வெற்றிக்கனி அவன் மடியில் வீழ்ந்தது. பிறகென்ன ஆனந்தமோ ஆனந்தம் தான். பார்க் , பீச் , தியேட்டர் என சுற்ற ஆரம்பித்தாலும் தங்களுக்கிடையே ஒரு கண்ணியத்தை கடைப்பிடித்தார்கள். அந்தக் கண்ணியத்துக்குப் பரிசாக இவர்கள் காதலை இருவீட்டாரும் எந்தவொரு எதிர்ப்புமின்றி முழுமனதோடு ஏற்றுக் கொண்டார்கள்.
இப்படித் தெளிந்த நீரோடையாகச் சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்வில் குட்டையைக் குழப்புவதற்கேன்றே வந்து சேர்ந்தாள் ஹரிவர்த்தனது கல்லூரித் தோழி சிதாரா. சட்டக் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். படிக்கும் போதே ஹரிவர்த்தன் பால் ஈர்க்கப்பட்டு காதலை சொன்னவள். பார்வைக்கு அழகாக இருக்கும் இளம் பெண் தானே தேடி வந்து காதலைச் சொல்லும் போது முடியாது என்று மறுக்க ஹரிவர்த்தன் என்ன மடையனா? அவனும் ஏற்றுக் கொண்டான்.
ஆனால் ஒரு மாதம் கூட பழகியிருக்க மாட்டார்கள். அதற்குள்ளாக சிதாராவின் பல பழக்கவழக்கங்கள் ஹரிவர்த்தனை முகம் சுளிக்கச் செய்தன. யாருடனும் அன்பாகப் பேசத் தெரியவில்லை. பெரியவர்களிடம் மதிப்பு , மரியாதை என்பது சுத்தமாக இல்லை. இவ்வளவிற்கும் மேலாக அவளது ஆடைக் குறைப்புத் தான் அவனை பெரிதும் பாதித்தது. அவளிடம் எவ்வளவோ சொல்லித் திருத்த முயற்சித்தும் முடியாமல் போன போது தான், "சிதாரா, நமக்குள்ள ஒத்து வராது. ஐ ஆம் சாறி. இப்படியே ரெண்டு பேரும் சண்டை பிடிச்சிட்டே இருந்தா லைப் எப்பிடி மூவ் ஆகும். நாம பிரிஞ்சிடுறது தான் பெட்டர்." அவளும் பெரிதாக வருந்தவில்லை. "நானும் இதத் தான் யோசிச்சன்...வெல்...நாம இனி பிரண்ட்ஸ் ஆவே இருக்கலாம்." இப்படிச் சொல்லி பிரிந்தவள் தான் ஹரிவர்த்தனும் கீர்த்தனாவும் பீச்சில் குழந்தைகள் போல் மணலில் ஓடி விளையாடிக் கொண்டிருந்ததைக் கண்டு மனம் மாறினாள்.
தன மீது மணலை வாரி எறிந்து விட்டு ஓடிய கீர்த்தனாவை பிடிப்பதற்கு துரத்தியவனை "ஹரி" என்ற அழைப்பு நிறுத்தியது. திரும்பிப் பார்த்தவன் மகிழ்வுடன், "ஹாய் சிதாரா, எப்பிடி இருக்கிறா? பாரின் போனதா கேள்விப்பட்டன். எப்போ வந்தா?" நலம் விசாரித்தான்.
"நான் வந்து நாலு மாசம் ஆகுது. நான் சந்தோசமா இல்ல ஹரி. நீ இல்லாம என் வாழ்க்கைல சந்தோசமே இல்ல. உன்னையே நினைச்சிட்டு வாழ்ந்திட்டு இருக்கேன். உன்ன இங்க பாப்பன்னு நினைச்சுக் கூட பாக்கல தெரியுமா? என்னை ஏத்துப்பியா?" அவன் பதிலை எதிர்பாராமலே அவனைக் கட்டி அணைத்தவளை எப்படி விலக்குவதென முழித்துக் கொண்டிருந்தான் ஹரிவர்த்தன்.
"சிதாரா! பிளீஸ் கொஞ்சம் விலகி நில்லு." அவளை வலுக்கட்டாயமாக தள்ளி நிறுத்தி விட்டு கண்களாலேயே பஸ்பமாக்கி விடுவாள் போல் முறைத்துக் கொண்டு நின்றவளை சுட்டி, "சிதாரா, இது கீர்த்தனா. என்னோட வருங்கால மனைவி. நீயும் நானும் வெறும் பிரண்ட்ஸ் தான் சிதாரா. உன்ன உனக்காகவே விரும்புற ஒருத்தன் கண்டிப்பா உன்னத் தேடி வருவான். இவளை நான் விரும்புற மாதிரி." உணர்வுபூர்வமாக பேசிக் கொண்டிருந்தவனை இடையிட்டு, "என்னையும் ஒரு காலத்துல நீ விரும்பியிருக்கா ஹரி. அந்தக் காதல் ஏன் இப்ப வரக்கூடாது." கேட்டாள்.
"புரியாம பேசாத சிதாரா. ஒரு அழகான பொண்ணு தானா வந்து லவ் சொல்லும் போது எந்தப் பையனும் மயங்கத் தான் செய்வான். அந்த வயசுல நானும் உம் மேல மயங்கினேன். அது வெறும் மயக்கம் மட்டும் தான். இவ மேல எனக்கு வந்தது தான் காதல்." அவன் ஒரு சொற்பொழிவே ஆற்றியும் சிதாரா கேட்பதாகவே தெரியவில்லை. கடைசியில் இது தேறாது என்று புரிந்தவனாக தப்பினேன் பிழைத்தேன் என தலைதெறிக்க ஓடி வந்து கீர்த்தனாவை தேடினால் அவள் எப்பொழுதோ போய்விட்டிருந்தாள்.
அதன் பின்பு அவன் எவ்வளவு முயன்றும் கீர்த்தனா அவனை சந்திக்கவேயில்லை. இப்படியே விட்டால் அவளை இழந்துவிடுவோமோ என்று எண்ணி திருமண ஆயத்தங்களை செய்ய குடும்பத்தாரை ஏவினான். நல்லவேளையாக கீர்த்தனா திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் ஹரிவர்த்தனுடன் பேசவும் இல்லை. திருமணம் நடந்து ஒரு மாதம் கழித்து ஹரிவர்த்தனது சொந்த ஊருக்கு தேனிலவுக்கென இன்று காலை தான் வந்திருந்தார்கள். முதல் முறை இந்த ஊருக்கு வந்திருந்த போது, "நம்ம கல்யாணம் முடிஞ்சப்புறம் நாம முதல்ல இங்க தான் வரணும் ஹரி" என்று கீர்த்தனா சொல்லியிருந்தாள். அவளை குளிர்ச்சிப் படுத்த தான் இங்கு அழைத்து வந்திருந்தான். வந்த இடத்தில் வாயைக் கொடுத்து அவளிடம் அடி வாங்கியது தான் மிச்சம்.
வயிற்றைப் பிடித்துக் கொண்டு ஒரு மாதிரியாக அமர்ந்திருந்தவனிடம், "வெளிய போகணும். நீ வாறதுன்னா வா." முகம் பாராமல் சொல்லி விட்டு நடக்க ஆரம்பித்தவளை, "பிசாசு பிசாசு...இவ்ளோ நாளா சேர்த்து வச்சிருந்த கோபத்தை ஒரே குத்துல காட்டிட்டா ராட்சசி." வயிற்றைத் தடவியபடி அவளைத் திட்டிக் கொண்டே பின்தொடர்ந்தான். வீட்டைச் சுற்றிலும் பல வண்ணப் பூக்கள் நிறைந்த தோட்டம் மனசைக் கொள்ளை கொண்டது. சுற்றியிருந்த அழகை ரசித்துக் கொண்டே நடந்தவள் கீழே இருந்த குழியினுள் தவறி விழுந்து விட்டாள். பதறிப் போய் ஓடி வந்த ஹரிவர்த்தனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.'என்ன அடிச்சால்ல....உனக்கு இது தேவை தாண்டி' என்று மனதுக்குள் எண்ணியவாறே சிரித்தான். கண்ணில் நீர் வழிய விழுந்து விழுந்து சிரிப்பவனை ஆத்திரத்துடன் முறைத்தவள், "தூக்கி விடுடா...வலிக்குது" என்று கூறிய பின் தான் அவளை தூக்க வேண்டும் என்ற எண்ணமே வந்தது. மழை பெய்து சேறாகி விட்டிருந்த குழியில் விழுந்ததால் அவள் உடம்பெல்லாம் சேறு. அதைப் பார்த்து தான் ஹரிவர்த்தன் அப்படிச் சிரித்தான்.
பட்டும் படாமலும் அவளைத் தூக்கி நிறுத்தியவன் "தள்ளியே நில்லு. என் மேல சேறு பட்டிரப் போகுது" வேண்டுமென்றே அவளை சீண்டினான். அவனது பேச்சில் கடுப்பாகிப் போனவள் அவனை இறுக அணைத்து தன் மேல் இருந்த சேற்றை எல்லாம் அவன் மேல் பூசும் வேலையில் ஈடுபட்டாள். இந்த அவளது செயலையே எதிர்பார்த்திருந்தவன் அவளை தன் அணைப்புக்குள் கொண்டு வந்தான்.
"ஹேய் டியர் இப்போ நீயா தான் என்ன கட்டிக்கிட்டா..அதனால இனி நீயே ஆசைப்பட்டாலும் உன்ன நான் விடமாட்டன். " அவனது பேச்சில் ரோசம் கொண்டு விலகப் போனவளை மேலும் இறுக அணைத்தான்.
"இப்ப விடப் போறியா இல்லையா தடியா? எனக்கு முன்னாடி இன்னொரு பொண்ண லவ் பண்ணா விசயத்தை ஏன்டா என்கிட்ட இருந்து மறைச்சா?" கோபத்தில் தொடக்கி அழுகையில் முடித்தாள்.
அவளது கண்ணீரில் கரைந்தவன், "ஏய் செல்லம், உன்ன மட்டும் தாண்டி நான் லவ் பண்ணேன். சிதாரா மேல ஏற்ப்பட்டது ஒரு மயக்கம் தான்."
"நிஜமா?"
"உன் மேல சத்தியமா!"
"அப்ப சரி." காதலோடு அவன் நெஞ்சில் முகம் சாய்த்துக் கொண்டாள் கீர்த்தனா. அவளை அப்படியே கைகளில் ஏந்திக் கொண்டான் ஹரிவர்த்தன்.

எழுதியவர் : துளசி (5-Oct-16, 12:04 am)
Tanglish : neeye en kathaladi
பார்வை : 898

மேலே