எனக்கே எனக்கா

அன்று எங்கள் உறவினர் வீட்டில் ஒரு குடும்ப விழா. நெருங்கிய உறவுகள் எல்லோரும் கூடியிருந்தோம். நான் என் வயதையொத்தவர்களுடன் கலகலப்பாக பல விடயங்களை கதைத்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது என் அருகில் காலியாக இருந்த இருக்கையில் என் உறவுக்காரர் ஒருவரின் மகன் வந்தமர்ந்தார். என்னை விட இரண்டு வயது மூத்தவர். நான் அவரைப் பார்த்து ஒரு புன்சிரிப்பை உதிர்த்து விட்டு மற்றவர்களுடன் கதைக்க ஆரம்பித்தேன். அவரும் எங்கள் உரையாடலில் கலந்து கொண்டார். எவ்வளவு நேரம் தான் அரட்டை அடிக்க முடியும். ஒரு நேரத்தில் சலிப்படைந்த எல்லோரும் வேறு வேலைகளைப் பார்க்கச் சென்று விட்டனர். நானும் அந்த என் உறவுக்காரரும் தான் தனித்து இருந்தோம். திடீரென்று அவர் "காதலித்திருக்கிறாயா?" என்று என்னைப் பார்த்துக் கேட்டார். எனக்கு ஒரே வியப்பாகிப் போய் விட்டது. ஏனென்றால் இதற்கு முன்பாக அவரை வெறும் நான்கு தடவைகள் தான் பார்த்திருக்கிறேன். அதிலும் ஒரு தடவை தான் அவருடன் கதைத்திருக்கிறேன். அத்தோடு நான் கேள்விப்பட்ட வரையில் அவர் பெண்கள் விடயத்தில் மிகவும் கண்ணியமானவர். அப்படியிருக்க அவர் இப்படி கேட்டது எனக்கு ஆச்சரியமளித்ததில் வியப்பேதும் இல்லை தானே.
நான் அவர் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல், "ஏன் அப்படிக் கேட்கிறீர்கள்?" என்று பதில் கேள்வி கேட்டேன். அவர் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே, "தெரிந்து கொள்வதற்காகத் தான்" என்று கூறினார்.
"தெரிந்து கொண்டு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?" என்ற கேள்வி என் வாய் வரை வந்தது. ஆனாலும் நான் கேட்கவில்லை. எங்கள் உறவுகளுக்கிடையே அவருக்கு நல்ல மதிப்பு இருந்தது. சிறு வயதிலேயே தொழிலை கச்சிதமாக மேற்கொள்பவர் என்ற பெயரையும் பெற்றிருந்தார். அதோடு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிக்க அன்புடனும் மதிப்புடனும் தான் பழகுவார். அப்படிப்பட்டவரிடம் குதர்க்கமாக பேச என் மனம் ஒப்பவில்லை. அத்தோடு பொய் கூறவும் விரும்பவில்லை.
எனவே நான், "ஆமாம். ஒருதலைப்பட்சமாக நிறையப் பேர் மீது எனக்கு காதல் வந்துள்ளது. ஆனால் அவை காதல் தானா என்று எனக்கே தெளிவாகத் தெரியவில்லை." என்று சொன்னேன். அவர் என் பதிலைக் கேட்டு வியப்படையவில்லை. மாறாக அதே சிரிப்போடு, " சரி, எதனாலெல்லாம் உனக்கு அவர்கள் மீது காதல் வந்தது?" எனக் கேட்டார். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் எனக்கு அவர் அப்படிக் கேட்டதும் கோபம் தான் வந்தது. இவருக்கு நான் எதற்காகப் பதில் சொல்ல வேண்டும் என்றும் தோன்றியது. ஆனால் அவர் மீது நான் கொண்டிருந்த உயர்ந்த எண்ணம் கோபத்தைக் காட்டாமல் அவர் கேட்ட அந்தக் கேள்விக்கும் பதிலைச் சொல்ல வைத்தது.
"சில பேர் மீது அவர்களது அழகினால் வந்தது. பல பேர் மீது அவர்களது அன்பானதும் பண்பானதுமான பேச்சினால் வந்தது."
மறுபடியும் அதே சிரிப்பு. சில கணங்களே கழிந்திருந்தது. " நான் அழகாகத் தெரிகிறேனா?" என்று கேட்டார். எனக்கு ஏதோ புரிந்தது போல் தோன்றியது. ஆனாலும் அதை அவரிடம் கேட்க விரும்பவில்லை. ஒரு வேளை நான் கேட்டு அவர் அப்படி ஏதும் இல்லை என்றால் அவமானம் ஆகிவிடுமல்லவா. அதனால் அவர் கேட்ட கேள்விக்கு மட்டும் "ஆமாம்" எனப் பதிலளித்தேன்.
தொடர்ந்து, "நான் அன்பாகப் பேசுகிறேனா?" என்று கேட்டார். நான் அதற்கும் ஆமாம் என்பது போல் தலையாட்டினேன்.
"என் பேச்சில் பண்பு இருக்கிறதா?" என்றார். மீண்டும் அதே போல் ஒரு தலையாட்டல்.
என் நெஞ்சு பட பட என்று அடித்துக் கொண்டது. இதற்கு மேல் அவர் எதையும் கேட்டு விடக் கூடாது என்று இறைவனைப் பிரார்த்திக்க ஆரம்பித்தேன். ஆனால் என் பிரார்த்தனை வீணாகிப் போனது. அவர் கேட்டே விட்டார்.
"நீ சொன்ன அழகு, அன்பு, பண்பு மூன்றும் என்னிடம் இருப்பதாக நீயே ஒப்புக் கொண்டு விட்டாய். அப்படி என்றால் சொல் என் மீதும் உனக்கு காதல் வந்திருக்கிறதா?" அவரது கேள்வியில் விக்கித்துப் போய் நின்றேன். "காதலித்திருக்கிறாயா?" என்று அவர் கேட்ட போது தைரியமாக பதில் சொல்ல தெரிந்த எனக்கு இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று சத்தியமாகத் தெரியவில்லை. அமைதியாக இருந்த என்னைப் பார்த்து சிரித்தவாறே கேட்டார். "என்ன திடீரென்று பேசாமடந்தையாகி விட்டாய்?" நான் அப்பொழுதும் பதில் பேசவில்லை.
"நீ பதில் சொல்லப் போவதில்லை என்று உன்னைப் பார்த்தாலே புரிகிறது. சரி, நான் சொல்ல வந்ததை சொல்லி விடுகிறேன்." என்று ஆரம்பித்தார். நான் மடியில் கோர்த்திருந்த என் கைகளைப் பார்த்த வண்ணம் அவர் சொல்வதை செவிமடுத்துக் கொண்டிருந்தேன். அவர் தொடர்ந்து பேசலானார்.
"நானும் உன்னைப் போல் தான். பல பெண்கள் மேல் எனக்கு ஈர்ப்பு ஏற்ப்பட்டிருக்கிறது. ஆனால் அவற்றை நான் காதல் என்று குழப்பிக் கொண்டதில்லை. ஏனென்றால் காதல் என்பது தோன்றினால் இவர்கள் தான் இறுதிவரை நமக்குத் துணையாக வர வேண்டும் என்று நம் உள்ளுணர்வு சொல்லும். அந்த உள்ளுணர்வு எனக்கு உன்னிடம் தான் தோன்றியது." அவரது பேச்சு எனக்கு அதிர்ச்சியளிக்கவே நான் சரேலென நிமிர்ந்து அவரைப் பார்த்தேன். ஆனால் அவர் என் அதிர்ச்சியைக் கண்டும் காணாதவர் போல் மேலும் பேசினார்.
"ஏன் அப்படித் தோன்றியது என்று எனக்குச் சரியாகத் தெரியவில்லை. நீ அழகு தான். ஆனால் உன்னை விடப் பல அழகிகளை எனக்குத் தெரியும். ஆக, உன் அழகால் அந்த எண்ணம் தோன்றவில்லை என்பது நிச்சயம். நீ அன்பான பெண் தானா? என்று நான் உன்னுடன் நெருங்கிப் பழகினால் தான் தெரிந்து கொள்ள முடியும். ஆக, அதுவும் இல்லை. பண்பு உன்னிடம் இருக்கிறது. ஆனால் நம் உறவிலேயே இங்கேயே கூட பல பெண்கள் உன்னை விடப் பண்பானவர்கள். ஆக, இதுவும் இல்லை. மொத்தத்தில் உன்னை எனக்குப் பிடித்ததற்கு காரணமே இல்லை. இப்படிக் காரணமே இல்லாமல் வருகின்ற பிடித்தம் தான் காதல் என்பது என் கருத்து. இந்தக் காதல் திருமணத்தில் முடிய வேண்டும் என்பது என் ஆசை. உனக்கும் என்னைப் பிடித்திருந்தால் சொல். நான் என் அம்மாவுடன் பேசி உன் வீட்டாருடன் பேசச் சொல்கிறேன். நாம் திருமணத்தில் நம் காதல் வாழ்க்கையை ஆரம்பிக்கலாம்."
எந்தவொரு சலனமுமின்றி தன் மனதிலுள்ளவற்றை வெளிப்படையாகச் சொன்ன அவரது தைரியம் என்னை ரசிக்க வைத்தது. இதற்கு முன் அவர் மேல் எனக்கு காதல் இருந்ததா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவர் தனது காதலை வெளிப்படுத்திய அந்தக் கணம் எனக்கே எனக்கானவராய் அவரை நான் உணர்ந்தேன். அவர் கண்களை நேராக நோக்கினேன். அதில் ஒரு ஆவலுடன் கூடிய எதிர்பார்ப்பு தெரிந்தது. மெல்ல அவர் கரங்களை பற்றி கண்களாலேயே சம்மதம் சொன்னேன். அவர் முகமெங்கும் புன்னகை. என் முகத்திலும் அதன் எதிரொலி........

எழுதியவர் : துளசி (5-Oct-16, 12:06 am)
Tanglish : enake enakaa
பார்வை : 774

மேலே