ஒரு போராளியின் காதலும் கண்ணீரும் கலந்த சரித்திரம் பாகம் -16

குட்டியா அமைதியாக சென்று தனது இருக்கையில் அமர்ந்து படிக்கத் தொடங்கினாள். குட்டியா வேறு யாருமல்ல அவ்இல்லத்தில் கற்கும் மாணவி.
சிறு வயதிலேயே தாய் தந்தை மற்றும் தனது அக்காவை இழந்து தன்னந்தனியாக அநாதையாய் தவித்தவளுக்கு அன்பைக் கொடுத்து இவ்வில்லத்தில் ஆதரவு கொடுத்தது வேறுயாரும் இல்லை தலைவர் அவர்கள் தான்.
அவள் சிறு வயதில் இருந்து இங்கு தான் தங்கி கல்வி கற்றுக் வருகிறாள். அவளுக்கு முழு ஆதரவும் கொடுப்பது இங்குள்ள ஒவ்வொரு போராளிகளும் பொறுப்பாளரும் தான்.
குட்டியா பொய் கூறமாட்டாள் எப்போதும் உண்மையை மட்டுமே பேசுவாள்; ஒழுக்கத்தை எப்பொழுதும் கடைப்பிடிப்பாள்.
அவளின் நற்பழக்கங்களில் ஒன்று. செய்தது பிழை தான் என்றாலும் அதை மறைக்காமல் கூறி தண்டனையும் வாங்குவாள். விளையாட்டு பிள்ளை என்று தான் அனைவரும் அவளை கூறுவார்கள்.
இரவு பத்து மணிக்கு மணி அடித்தது.
அனைவரும் எழுந்து தூங்குவதற்கு சென்றனர். அமைதியான இரவு வேளை. தென்றல் மென்மையாக வீசியது. அவ்அமைதியான சூழலில் ஆந்தையின் அலறல் மட்டும் அகோர சத்தமாக இருந்தது.
பொறுப்பாளர் பெண்ணோ தவித்துக்கொண்டு இருந்தாள் தூக்கமின்மையால். அவளுக்கு வினோவை தவறு செய்யாமல் தண்டித்து விட்டோமே என்ற கலக்கம் மனதைக் குடைந்து கொண்டே இருந்தது.பொறுப்பாளர் பெண்ணைத் தவிர மற்ற அனைவரும் நல்ல தூக்கம்.
அதிகாலை ஐந்து மணி.
அனைவரையும் எழுந்து சென்று முகம் கழுவி படியுங்கள் எனக் கூறிவிட்டு தனது அறைக்குள் சென்றார் பொறுப்பாளர்.
அனைவரும் எழுந்து தத்தமது கடமைகளைச் செய்து முடித்து தமது கற்றல் செயல்பாட்டை ஆரம்பித்தனர்.
இருள் எனும் திரையை விலக்கிக்கொண்டு மெதுவாக வருகிறான் ஆதவன்.காலை ஆறு அரையை தாண்டியது.
படிக்கும் அறையை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தார். பொறுப்பாளர் பெண்.