அத்தான்

இந்த உலகத்திலேயே மிகச் சிறந்த
ரொமாண்டிக்கான உறவுன்னா
அது அத்தை பசங்களோட தான்..
………………………..
எனக்கு ஐந்து வருடம் முன்பிறந்து
நீ இல்லாமல்,வாழ முடியாது,
என்றுரைத்த பொய்க்காரன்தானே – நீ
………………………..
பேசப்பழகாத குழந்தை தொலைந்த அம்மாவை
கண்ணால் தேடுவதைப் போல,
நிதமும் உன் வருகைக்கு வருவாயெனக் காத்திருக்கிறேன்
………………………..
உங்க பொண்ணு யார் கூடவோ பைக்ல போனாளே..
..ஆமா என் தங்கச்சி மவன் கூடத்தான்..
ஓ அப்ப சரி

அப்பாடா…
அத்தான்டா.
………………………..
ஏய் அத்தான்னு கூப்டுடி
..அய்யே போ உன் மூஞ்சிக்கு பேர் சொல்றதே பெருசு
பச்சக்
..ஏம்மா இவன் முத்தம் கொடுத்துட்டான்
சரி அத்தான் தான் விடு
………………………..
டேய் கல்யாணம் பண்ணிக்கலாமா ?
..எதுக்கு
சேர்ந்து வாழத்தான்
மறுபடியும் உன் கூடவா..? ஓடியே போயிடு
..பாருங்கத்தே இவன.
ஏல சும்மா கிடக்க மாட்டியா
………………………..
அம்மா அடித்த போது வந்த கண்ணீர் வலியினால் அல்ல
அங்கு நீ இருந்தாய் என்பதானால் தான்.
………………………..
அத்தே நான் எங்க படுத்துக்கிறது
..அத்தான் ரூம்ல படுத்துக்க
அப்ப அத்தான். ?
அவன் திண்ணைல படுப்பான் என்ற பின் அத்தையின் சிரிப்பு அழகு.
………………………..
சிதறிக்கிடக்கும் உன் ஆடைகளுக்கு மத்தியில்
உறங்குவதென்பது ஆகப்பெரும் இம்சை.
முழுக்கை சட்டையை போர்த்தி உறங்கி
மாட்டிக்கொண்டபின் முதல் வெட்கம்
………………………..
அடிபம்பு குடச்சண்டைகளில் நீ தெருவை கடக்கும் போது வெட்கப்பட்டுக்கொண்டே சண்டையிடுதல் ஒரு அவஸ்தை.
………………………..
போன் செய்து அத்தை எடுத்த உடன் எதுவும் பேசாமல் இருந்தால்..
என்னல அத்தான்ட்ட பேசணுமா என்பாள்,
அத்தானை விட அத்தைதான் என்னை நன்றாக புரிந்தவள்
………………………..
அன்பே, டார்லிங் என்னும்போதெல்லாம் அமைதியாய் இருக்கிறேன்.. ”அடியே இவளே”! என்ற பின் தான் திரும்புகிறேன்,
எனக்கு நீதான் வேண்டும் இதுதான் நீ
………………………..
சாப்பிட்டு முடித்ததும் என் முந்தானையில் கை துடைப்பானென பாதி பந்தியில் எழுந்து அவனோடு சென்ற போது முடிவுக்கு வந்தது நீண்ட நாள் சண்டையொன்று.
………………………..
அடியே இந்த பயலுக கிட்ட உன்னையதான் லவ் பண்றதா சொல்லிருக்கேன், கவுத்துடாத
..ஏன் லூசு அப்படி சொன்ன?
சும்மா கெத்து.
..சரி வா ஜாலியா இருக்கும்
………………………..
கோவிலில் அவன் தென்பட்டால் பிரகார சுற்றுகளின் எண்ணிக்கை அவன் கும்பிடும் நேரம் பொறுத்து மாறுபடும்.,
ஏய் வீட்டுக்கு தான் போறேன் வர்றியா
…இதோ
………………………..
மணிக்கணக்காக அலங்காரம் செய்து வந்து நின்றால்
‘ரொம்ப கேவலமா இருக்க’ என்பான்
அதிகாலையில் பல் தேய்க்கையில் ‘கொள்ளை அழகென’ திருஷ்டி கழிப்பான்.
………………………..
போக மாட்டேன் என அடம்பிடிக்கையில் கொடுக்கப்படுவதுதான்
”செல்ல” முத்தம்
………………………..
கன்னம் கொண்டு இதழில் முத்தமிட்டுவிட்டான்!
………………………..
அவன் மடியில் விழுந்து தூங்கப் போகும் இரவுகளுக்காகவே வருகின்றன பங்குனி உத்திரத் திருவிழாக்காலங்கள்.
………………………..
என் ஆடைகளின் தேர்வெல்லாம்.. உன் கண்களுக்கு எப்படி தெரிய வேண்டுமென்றே தொடங்குகிறது, ஆம் நான் உன் ரசனைகளினால் ஆனவள்.
………………………..
ஏன் சிரித்துக்கொண்டிருக்கிறாய்? எனக் கேட்கிறார்கள்.
உன்னை நினைக்கத்தானே செய்தேன் – சிரித்தேனா என்ன?
உன்னோடு பெருந்தொல்லையடா.
………………………..
முத்தம் கொடுக்க வந்தால் வெட்கப்படுகிறேனென புகார் வாசிக்கிறாய், வெட்கப்பட்டால்தான் முத்தம் தருவாயென முடிவில் இருக்கிறது வெட்கம்கெட்ட வெட்கம்.
………………………..
கோவிலுக்கு போகிறோமென எந்தையின் தகவல் கேட்டு ஆச்சர்யமாய் புதிதுபோலக் கேட்கிறாய் அவருக்குத்தெரியும் நம் பழக்கமும் நீ வரவேண்டுமென்ற என் ஆசையும்..!
………………….
உன் அக்காவுக்கு கல்யாணமாகி குழந்தை பிறந்ததுதான் எவ்வளவு வசதியாய் போயிற்று நமக்கு.., முத்தங்களை குழந்தையின் கன்னம் வழி பரிமாறிக்கொள்ள..!
………………….
உணவுப்பொருட்கள் ஒவ்வொன்றிற்கும் புனைப்பெயரை காதில் கிசுகிசுத்து ஓடிவிட்டாய்.., உனக்கென்ன? நீ இருக்கும் பொதுவில் அவை பெயர் சொல்ல எனக்குதான் கூசுகிறது.
………………….
அதென்னமோ நம் ரகசிய சந்திப்புகளின் திட்டமிடல் எல்லாமே தோல்வியிலேயே முடிந்ததன் காரணம்.. எதிர்பாராத்தருணத் தீண்டல்களின் உறைநிலை சிலிர்ப்புக்காக இருக்கலாம்.
………………….
வீட்டிலுன் பேச்சை எடுத்தால் வெகு அலட்சியமாக கடக்கிறேன், பாதக்குருகுறுப்பில் துவங்கும் வெட்கம் உன்னை உணர்த்திவிடும் அபாயத்திலிருந்து வேறெப்படித்தான் தப்பிக்க?!
………………….
எனக்கு உன்னை விட அத்தையை தான் அதிகம் பிடிக்கிறது.. அவள்தான் உன் பெயரை ஒற்றாய் வைத்து பொண்டாட்டியென விளித்தாள்
………………….
ஏட்டி சனியனே மூதேவி எரும நாயே சாவு // வார்த்தைகளின் அர்த்தம் மறந்து திட்டும்கலை வாய்க்கப்பெற்றது உன் சாபமென அறியாமல்.. சிரித்துக்கொண்டிருக்கும் என்னை ”உன்ன திருத்த முடியாது போ” வெனக் கோபிக்கிறாய்..!
………………….
சாவகாசமான பொடிநடையில் உன்கை எடுத்து வம்படியாக தோள் சுற்றிக்கொண்டேன்
…என்னடி?
எதிர்ல வர்றவன் ”உன் மூஞ்சுக்கு யார் கிடைப்பான்னு சொன்னான்” என்றதும் / தோள் சேர்த்தணைத்து கூட்டிச்சென்றாயே../ நான் வாழ்ந்த கணங்களெனக் கருதுவதில் அதிமுக்கியமானது அது.
………………….
வேடிக்கையாக உறவை சிதைக்க எண்ணிய தோழி சொன்னாள்
”எப்பவுமே உங்களை லூசுன்னு சொல்றா” உங்க அத்தைப்பொண்ணு,
…என்னையன்றி வேறாறை அப்படியழைப்பாள்..?!
தனை தோற்று எனை வெல்ல வைக்கும் அன்புனது.
………………….
எல்லா மனக்கஷ்டங்களையும் எழுதி அவனுக்கு மடல் செய்துவிடுவேன், அவனைத்தவிர வேறு யாரும் படிக்காமல் எங்கள் ரகசியங்களை எங்கள் குடும்பமே பாதுகாத்தது
………………….
நமக்கான தனித்த இரவு, காமத்தின் கற்பிதங்கள் கற்ற வயது., ஆச்சர்யமாக இருந்ததை இப்போது கேட்கிறேன்.. ஏன் என்னை புணராமல் விட்டாய்?
கன்னம் கையில் ஏந்தி புன்னகைக்கிறாய்../ என் ஐந்து வயதில் இந்த கண்களை பார்த்திருக்கிறேன்.. மரணம் உன் ஏந்தலில் வாய்க்கவேண்டும் ஐந்து வயது சிறுமியாய் சாகவேண்டும்.

முடிவிலி முத்தங்கள்.

எழுதியவர் : மீனம்மா. பகிர்வு: செல்வமணி (16-Oct-16, 9:02 pm)
Tanglish : athathaan
பார்வை : 446

மேலே