சங்க கால சித்தர்களின் கடவுள் நம்பிக்கை

(எனது முதல் கட்டுரை பிழை பொறுத்து மன்னிக்கவும், தங்கள் மேலான கருத்துக்கள் மூலம் என்னை வழி நடத்தவும்)

சித்தம் என்னும் மனதை யோகத்தின் மூலமும் தியானத்தின் மூலமும் அடக்கி ஆட்கொண்டு கடவுளை கண்டவர்கள் சித்தர்கள். கடவுளிடம் சித்தர்கள் கொண்ட அன்பும், அளவில்லா பக்தியும் அசையா நம்பிக்கையும் சொல்லில் அடங்கா. சித்தர்கள் தவத்தின் மகிமையால் சகல சித்தியும் பெற்றதாலும் சித்தர்கள் என்று போற்றப்பெற்றனர்.ஆன்மிகம் தழைக்கவும், மக்களின் ஆரோக்கியம் செழிக்கவும், சித்தர்கள் முக்கியப் பங்காற்றியவர்கள். அவர்கள் தத்துவ நெறியிலும், மருத்துவத் துறையிலும் மிகுதியான பல நூல்களைச் செய்துள்ளனர். இவர்கள் கடவுள் நிலை பெற்றவர்கள். கடவுளுக்குச் சமமாய்ப் போற்றி வணங்கப்பட்டனர்.

பரமாத்மா எங்கும் தனியாக இல்லை. நமது உடம்பு தான் பரமாத்மாவின் இடம் ஆதலால் கடவுளைத்தேடி எங்கும் அலைய வேண்டாம். உடம்பைப் பேணுவதே கடவுட்பணி, உடம்பினுள்ளேயே பரமாத்மாவைக் கண்டு மகிழ்ந்திரு என்பது சித்தர் நம்பிக்கை.

அகத்திய சித்தர் :

உன்னுள்ளும் இருப்பான் என்னுள்ளும் இருப்பான்
உருவம் இல்லா உண்மை அவன்.
இதை உணர்ந்தார் இங்கே உலவுவதில்லை
தானும் அடைவார் அந்நிலை தன்னை.

கடவுளை காண முயல்பவர்கள் பக்தர்கள் கடவுளை கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள்.கடவுளை காண அகந்தை இல்லா பக்தியும் பரிபூரண நம்பிக்கையும் வேண்டும். பக்தியுடன் கலந்த நம்பிக்கை பரிபூரணமானால் பக்தன் சித்தனாகிறான். அகத்தியர் முதல் வள்ளலார் வரை நாம் அறிந்தும் அறியாமலும் நம்முடனே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். கடவுளை மனிதன் அடைய முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டை நம்பிக்கையாய் வழிகாட்டியாய் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் சித்தர்கள்.

கடவுளின் நம்பிக்கை தான் அகத்திய சித்தரை நீரின் மேல் பன்னிரண்டு ஆண்டுகள் தவம் செய்ய செய்தது, அஷ்டமாசித்திகளை அடைய செய்தது கடலை முழுதும் குடிக்க செய்தது, விந்திய மலையை அடக்க செய்தது, முன்னோர் கடன் கழிக்க செய்தது, காவிரி விரிய செய்தது, வாதாபி, வில்வளவன் என்னும் அரக்கர்களை அழிக்க செய்தது தலைமை சித்தனாகவும் செய்தது.

நந்தி தேவர் :

ஆயிரம் ஆண்டுகள் சிவனை தவம் செய்து ஷிலாதர் தாயிடம் பிறக்காத ஒரு புதல்வனைத் தனக்கு அருளுமாறு வேண்ட சிவன் அவ்வாறே வரம் அளித்தார். ஷிலாதர் நிலத்தை உழுது கொண்டிருந்த பொது ஏரியின் மீது ஒரு குழந்தை தோன்றி ஷிலாதரைத் தந்தை என்று அழைத்தது காளை வடிவுடன் தோன்றிய அவர் நந்தி என்று அழைக்க பெற்றார்.

நந்தி தேவர் சமுத்திர தீர்த்தத்தில் ஓரிடத்தில் கோடி சிவ நாமம் ஜபித்துத் தவம் செய்தார். மனம் கனிந்த சிவன் அவர் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் என கேட்க மீண்டும் சிவ நாமம் ஜபித்துத் தவம் செய்ய ஆயுள் கேட்டார் நந்தி தேவர் அருளினார் சிவன். மீண்டும் கோடி நாமம் செபிக்க சிவன் மீண்டும் தோன்றி என்ன வரம் வேண்டும் என கேட்க மீண்டும் சிவ நாமம் ஜபித்துத் தவம் செய்ய ஆயுள் கேட்டார் நந்தி தேவர் அருளினார் சிவன்

இம்மாதிரி மும்முறை நிகழ கடைசியில் சிவபெருமான் தோன்றி சிவநாம ஜபம் போதும். மேலும் தவம் வேண்டாம். உனக்கு மரணம் ஏற்படாது. நீ ஒரு கணநாதன் ஆகி கணங்களுக்கெல்லாம் நாயகனாக விளங்குவாய், என்னை விட்டுப் பிரியாத தோழனாவாய் என்று வரமளித்தார். நந்தி எப்போதும் சிவ சந்நிதியில் பரமனைப் பிரியாமல் இருந்தார்.

சித்தர்கள் கடவுளின் தோழனாய் வாழ கடவுளின் மேல் அவர்கள் கொண்ட பக்தியும் நம்பிக்கையும் காரணி

திருமூலர் :

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே

என திருமூலர் அன்பும் சிவனும் ஒன்று என்ற தன் நம்பிக்கையை திருப்பாடல் மூலம் உலகிற்கு உணர்த்தினார்

முருகரும் போகரும்:

போகர் கனவில் கண்ட முருகப்பெருமானின் கட்டளைபடி நம்பிக்கையுடன் நவபாஷாண சிலை செய்து பழனியில் பிரதிஷ்டை செய்து பஞ்சாமிர்தம் கொண்டு அபிஷேகம் செய்து தானும் உட்கொண்டார். அதுவே போகருக்கு உள்ளொளியை பெருக்கியது

மனிதப் பிறப்பானது கோள்களால் நிர்வகிக்கப்படுவதை உணர்ந்து அந்தக் கோள்களின் குணங்களைக் கொண்ட ஒன்பது பாஷாணத்தை தேர்வுசெய்து அதிலிருந்து தண்டாயுத பாணியை செய்து, கோள்களை ஓர் உருவுக்குள் அடக்கிப் பூட்டியவர் போகர் என்றும் கூறுவர்.

தண்டாயுத பாணியை எவர் வந்து தரிசித்து வணங்கினாலும் நவ கோள்களையும் ஒருசேர வணங்கிய ஒரு வாய்ப்பும் அவர்களுக்கு உண்டாவது, இதனுள் அடங்கிக் கிடக்கும் இன்னொரு நுட்பம்.

கொங்கண சித்தர் :

அம்பிகையை வணங்கும் முறையையும் மந்திரங்களையும் போகரிடம் பெற்று சாமானியர்க்கு அருளியவர் மற்றும் மூலத்தில் சோதியை கண்டவரே கொங்கண சித்தர்.

மச்சமுனி :
ஒரு சமயம் சிவபெருமான் கடற்கரையில் உமாதேவிக்கு தாரக மந்திரத்தை உபதேசித்த பொழுது தேவி சற்று கண்ணயர்ந்தாள். சிவபெருமான் உரைத்துக் கொண்டிருந்த தாரக மந்திரத்தை மீன் குஞ்சு ஒன்று கேட்டு மனித வடிவமாகியது. சிவபெருமான் அதற்கு மச்சேந்திரன் (மச்சமுனி) என்று பெயரிட்டு சிறந்த சித்தராக்கி ஞானத்தைப் பரப்புமாறு அருள்புரிந்தார்.

மச்சமுனி பிறக்கும் போதே சிவபெருமானின் உபதேசத்தோடு பிறந்தவர் என்பதால் மச்சமுனிக்கு தவயோகம் தானாகவே நேர்ந்தது. சித்தர்களும் சந்நியாசிகளும் கடுவுளின் அவதாரம் என்பதே அவரின் நம்பிக்கை. சித்தன் வாக்கு சிவன் வாக்கு என நிரூபிக்க சாம்பலில் இருந்து பாலகனை (கோரக்கரை) வர செய்தார் மச்ச முனி.

கோரக்கர்:

கோரக்கர் குருவே தெய்வம் என்ற நம்பிக்கை உடையவர். குருவின் ஆசையை ஆணையாக ஏற்று நடப்பவர். குருவிற்காக கண்ணையும் இழந்தவர். பின் குரு ஆசியுடன் கண்ணை பெற்றவர்.

சட்டமுனி :

திருவரங்கர் கோவில் கலசங்களை கண்டு பேரானந்தம் கொண்டார் சட்டமுனி சித்தர் கோவிலை அடையும் முன்னர் நடை முடி கிடந்ததை எண்ணி மனம் வருந்தி அரங்கா அரங்கா என கதறினார் கதவுகள் தானாக திறந்தது. அரங்கனின் அற்புத தரிசனம் சட்டைமுனிக்குக் கிடைத்தது. அரங்கனின் ஆபரணங்கள் ஒவ்வொன்றாக கழன்று சட்டைமுனியின் மேல் வந்து சேர்ந்தன. சட்டைமுனி “அரங்கா!” என்று கதறிய சப்தம் கேட்டு திரண்டு வந்த ஊர்மக்கள் வியந்து நின்றனர். அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே இறைவனுடன் ஒன்றாய்க் கலந்தார் சட்டைமுனி. சித்தரின் ஜீவ சமாதி இன்றும் திருவரங்கத்தில் இருப்பதாய் கூறப்படுகிறது.

சட்டைமுனி கடவுளின் மீது கொண்ட பக்தி, அன்பு, நம்பிக்கை, கடவுளுடன் அவரை கலக்க செய்தது

வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர் :

அகத்தியர் பூசித்த லிங்கத்தை வாங்கி அதை சதுரகிரியில் பிரதிட்டை செய்து வழிபட்டு சித்துக்கள் பல புரியும் ஆற்றல் பெற்றார். பின் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கல் யானையை உயிர் பெற செய்து கரும்பும் உன்ன செய்து மீண்டும் கல்யானை ஆக்கி விட்டு கோவில் சன்னதிக்குள் மறைந்தார். நம்பிக்கையையுடன் சிவனை வழிபாட்டால் சிவன் சன்னதி அடைய முடியும் என்பதை உணர்த்தினார்


சித்தர் இராமதேவர் / யாக்கோபு :

கடவுள் மதங்களுக்கு அப்பால் பட்டவர்கள் என்பது சித்தர் இராமதேவரின் நம்பிக்கை. அம்பிகையை ஆசி பெற்றவரும், நபிகள் நாயகத்தை கண்டவரும் இவரே.

குதம்பை சித்தர் :

முன்ஜென்மத்தில் கடவுளுடன் கொண்ட நம்பிக்கையின் பந்தம் மறு ஜென்மத்திலும் தொடரும் என்பதற்கான சான்று குதம்பை சித்தரின் வாழ்கை. முன்ஜென்ம தவத்தின் தொடர்ச்சியாய் சிறு வயதிலே சிவனின் முலமாக ஞானம் அடைந்தவர்

கருவூரார் :

வஞ்சகர்கள் துரத்த ஆனிலையப்பா!” என்று கூவிச் சிவலிங்கத்தை இறுக்கித் தழுவி சிவனுடன் ஜோதியாய் கலந்து, சோதனை வாரின் நம்பிகையுடன் கடவுளை அடைந்தால் சிவசித்தர் ஆகலாம் என்பதை உணர்த்தினார்.

வால்மீகியும் :

ராமாயணத்தை வட மொழியில் எழுதி உலகிற்கு முதன்முதலில் கொடுத்த வால்மீகியும் பதினென் சித்தர்களில் ஒருவராகிறார்.

சித்தர்களின் கடவுள் நம்பிக்கை ஆண்ட சராசரம் போன்றது அளவிட முடியாதது அதன் ஆற்றல் எல்லை அற்றது அனைவரும் ஓதும் மந்திரங்களும் பலனளிப்பதில்லை அதே மந்திரங்கள் சித்தர்கள் கூறும் பொது சித்தி ஆவதின் சூட்சமம் அவர்களின் நம்பிக்கையே.

நன்றி

எழுதியவர் : ரா தி ஜெகன் (21-Oct-16, 8:20 am)
சேர்த்தது : ஜெகன் ரா தி
பார்வை : 601

மேலே