நதிக்கரை ஞாபகங்கள்

ஆற்றோரப் பாதையெல்லாம் அடர்ந்தமரம் பூச்சொரியும்
காற்றோடு நாணலதும் காதலுடன் வீசிவிடும்
சேற்றோடு விராலுடனே சேல்கெண்டை போட்டியிடும்
ஊற்றெடுக்கும் நினைவுகளில் உள்ளமதும் உடன்செல்லும் !

இணைபிரியா அன்னங்கள் இன்பமுடன் நீந்திவரும்
பிணையுடனே கலைமானும் பிரியமுடன் நீர்குடிக்கும்
துணையிருக்கும் வான்நிலவும் துயிலாமல் விழித்திருக்கும்
அணைபோட்டுத் தடுத்தாலும் அடங்கிடுமோ நதியோ(யா)சை ?

ஒற்றைக்கால் கொக்குகளும் உணவுக்காய் தவமிருக்கும்
நிற்காமல் தவழ்கின்ற நீரலையில் நுரைபூக்கும்
பொற்கிரணக் கதிர்விரிய புதுவெள்ளம் புன்னகைக்கும்
சுற்றிவரும் வழியெங்கும் சுகராகம் மீட்டிடுமே !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (21-Oct-16, 10:32 pm)
பார்வை : 255

மேலே