அம்மா
ஒரு ஊரில் ஒரு தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு பல காலமாக குழந்தைகள் இல்லை, அவர்கள் வீட்டில் நாய் ஒன்று செல்லமாக வளர்க்கப் பட்டது, அந்த கணவனுக்கு அதன் மேல் மிகுந்த விருப்பம், ஆனால் மனைவிக்கு அதை கண்டாலே பிடிக்காது. அவன் வேலைக்கு போனதும் அதற்கு சாப்பாடு கொடுக்காமல் அடித்து கொடுமைபடுத்துவாள். இந்த நாய்க்கும் மிகுந்த வருத்தம். இப்படியே பல நாள் கழிந்தது.
ஒரு நாள் கணவன் வேலைக்கு போனதும் இந்த நாய் வீட்டை விட்டு சென்றுவிட்டது, வேலை விட்டு கணவன் வந்து கேட்டதும் எதோ காரணம் சொல்லி மழுப்பி விட்டாள். அவனும் சில நாள்களில் அதை மறந்தும் விட்டான். வீட்டை விட்டு சென்ற நாய் காட்டில் சென்று கிடைத்ததை உண்டு வாழ ஆரம்பித்தது, அவ்வப்போது வீட்டையும் நினைத்துக்கொள்ளும்.
நாய் வீட்டை விட்டு சென்ற கொஞ்ச நாளில் இங்கு அவள் கருவுற்றிருந்தாள், அதே சமயம் அந்த நாயும் அங்கு கருவுற்றிருந்தது. இருவருக்கும் ஒரே நேரத்தில் பிள்ளைப்பேறும் வந்தது. இதில் என்ன அதிசயம் என்றால் இங்கு இவளுக்கு இரண்டு நாய் குட்டிகள் பிறந்தன, காட்டிலோ அந்த நாய்க்கு இரண்டு அழகான பெண் குழந்தைகள் பிறந்தன.
கணவன் மனைவி இருவருக்கும் மிகுந்த வேதனை. நாய்க்கு தன குழந்தைகளை எப்படி வளர்க்க போகிறோம் என்ற அச்சம்.
இப்படியே ஆண்டுகள் பல கடந்தன நாயின் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகினர், இருபது வயதில் அழகிய தேவதைகளை போல காட்டினை வலம் வந்தனர். அவர்களுக்கு தேவையானவற்றை நாய் ஊருக்குள் சென்று எடுத்து வந்து கொடுக்கும், இப்படியாக அந்த காட்டில் மூவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.
நாய் இருவருக்கும் உணவு தேட சென்றிருந்த நேரம் ஒரு நாள் அந்த நாட்டின் ராஜாவும், மந்திரியும் வேட்டையாடுவதற்காக காட்டிற்குள் வந்தனர் வந்த சமயத்தில் இவர்கள் இருவரும் அவர்கள் கண்ணில் பட இருவரும் அவர்களின் அழகில் மயங்கி காதல் வயப்பட்டனர். இருவரும் அவர்களை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டனர். இவர்களிடம் தங்கள் விருப்பத்தையும் தெரிவித்தனர். இருவரில் ஒருத்தி அக்கா ஒருத்தி தங்கை, அதில் அக்கா "கொஞ்ச நேரம் காத்திருங்கள் எங்களது அம்மா வந்து விடுவார் அவரிடம் சொல்லிவிட்டு புறப்படலாம்" என்று கூறினாள். அதற்க்கு தங்கையானவள் அக்காவின் காதருகில் வந்து "அக்கா நீ பேசாமல் இரு நமது அம்மா ஒரு நாய் என்று தெரிந்தால் அவர்கள் நம்மை ஏளனமாக நினைத்து விடுவார்கள், அது இவர்களுக்கு தெரிந்தால் நமக்கு தான் அசிங்கம், இதை விட ஒரு நல்ல வாய்ப்பு நமக்கு கிடைக்காது, இனியும் இந்த காட்டில் இருந்து கஷ்ட்டப்பட எனக்கு விருப்பம் இல்லை, நான் அவர்களுடன் செல்லத்தான் போகிறேன்" என்று கூறிவிட்டாள். அக்காவுக்கு தங்கையை தனியாக அனுப்பவும் மனமில்லை, இத்தனை காலம் கஷ்ட்டப்பட்டு வளர்த்த தாயை விட்டு செல்லவும் மனதில்லை, செய்வதறியாது விழித்தாள், பின்பு திடீரென ஒரு யோசனை வந்து, போவதற்கு சம்மதமும் தெரிவித்தாள். இருவரும் புறப்பட்டனர்.
சிறிது நேரம் கழித்து உணவு தேடிவிட்டு நாயும் இடத்திற்கு வந்து இருவரையும் காணாது திகைத்தது, அக்கம் பக்கம் சென்று தேடியது இருவரையும் காணவில்லை, பிறகு ஒரு இடத்தில் தனது மூத்த மகளின் கழுத்தில் கிடந்த முத்து மாலை சிதறி கிடப்பதை கண்டு பயந்து விட்டது, பின்பு பொறுமையாக ஒவ்வொன்றாக பொருக்கி கொண்டே சென்றது, அந்த பாதை நேராக ஊருக்குள் சென்று ராஜா வீட்டு அரண்மனையில் முடிந்தது, தாயின் வருகையை எதிர் பார்த்து காத்திருந்த மூத்த மகள் தாயை கட்டியணைத்து அழுதாள், அங்குள்ள அனைவராலும் நல்ல வரவேற்பு உபசரிப்பு, பின்பு தனது தங்கையின் வீட்டிற்கு வழி காட்டி விட்டாள், நாயும் அவளை சென்று பார்த்து வருவதாக கூறி விட்டு சென்றது.
அங்கு மந்திரி வீட்டில் தங்கைக்காரி தாலியும் கழுத்துமாக நின்றிருந்தாள் தனது தாய் ஒரு நாய் என்று தெரிந்தால் கெளரவக்குறைவாகிவிடும் என்று நினைத்து உலக்கையை எடுத்து தலையிலே ஒரு போடு போட்டாள், நாயும் தலையில் ரத்தம் சொட்ட சொட்ட கத்திக்கொண்டே மூத்த மகளின் வீடு வந்து சேர்ந்தது. தாயின் நிலையை கண்டு கதறி அழுதாள், பின்பு நாய் தனது மூத்த மகளின் காலடியில் விழுந்து உயிரை விட்டது. தனது தாயை விட மனமில்லாமல் உடலை எடுத்து ஒரு பெட்டியில் வைத்து பூட்டி வைத்தாள், தினமும் அதற்க்கு சாம்பிராணி காட்டுவதும் பூஜை செய்வதுமாகவே இருப்பாள்.
ஒரு நாள் திடீரென அரண்மனை முழுவதும் ஒரே நறுமணம் வீசத்தொடங்கியது, இதுவரை யாரும் கண்டிராத அப்படியொரு வாசனை, எங்கிருந்து வருகிறதென்று அனைவரும் தேட தொடங்கினர் இறுதியில் ராணியாரின் அறையில் இருந்து வருகிறதென்று கண்டு பிடித்தனர், ராஜாவும் உள்ளே சென்று பார்த்தார், அது ஒரு பெட்டியில் இருந்து வந்து கொண்டிருந்தது, அருகே சென்று திறந்து பார்த்தார், ராஜாவுக்கு ஒரே ஆச்சர்யம் உள்ளே தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம், முத்து என அறையே ஜொலித்தது. பின்பு தன் கணவரிடம் நடந்ததை கூறினாள்.
இந்த செய்தி இப்படியே ஊர் முழுவதும் பரவியது தங்கையின் காதுக்கும் எட்டியது, அவளுக்கு ஒரே ஆச்சர்யம் நடந்தது என்ன என்று தெரிந்து கொள்ள நினைத்தாள். மெதுவாக அக்காவின் வீட்டிற்கு வந்தாள் நடந்ததை ஒன்று விடாமல் விசாரித்துவிட்டு வீட்டிற்கு வந்தாள்.
சில நாள்கள் கழித்து மந்திரியின் வீட்டில் குடலை புரட்டும் ஒரு நாற்றம், அனைவரும் வீடு முழுக்க தேட ஆரம்பித்தனர், பார்த்தால் அது இவளது அறையில் இருந்துதான் வந்து, அதுவும் ஒரு பெட்டியில் இருந்து வந்தது, மந்திரி திறந்து பார்த்தார் அதில் ஒரு நாயின் உடல் அழுகி போய் இருந்தது, மந்திரி கோபத்துடன் இதை செய்தது யார் என்று விசாரித்தார். உடனே இவள் நான்தான் என்று நடந்ததை கூறினாள். அக்காவுக்கு நடந்தது போல் தனக்கும் நடக்கும், நிறைய தங்கம், வெள்ளி, வைரம், வைடுரியம் எல்லாம் கிடைக்கும் என்று ஆசைப்பட்டு தெரு நாயை அடித்து இவ்வாறு வைத்தது முதல்கொண்டு அனைத்தையும் கூறினாள்.
மந்திரி இவளுக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்று கூறி வீட்டை விட்டே விரட்டி அடித்தார்.
முடிவு..... உங்களுக்கே புரிந்திருக்கும்