புதியவர்கள்
அன்று வந்திருந்த ஆங்கிலத் தினப்பத்திரிகையை வாசித்து விட்டு என்னிடம் என் மனைவி தான் வாசித்த செய்தியைக் காட்டினாள். அதை வாங்கி நான் வாசித்தபோது என்னால் அச்செய்தியை நம்பமுடியவில்லை. கனடாவுக்கு புதிதாக சிறீலங்காவில் இருந்து புலம் பெயர்ந்த இரு ஈழத் தமிழ் மாணவர்கள் மீது, கல்லூரியில் நடந்த தாக்குதல் பற்றிய செய்தியது. அவ்விரு மணவர்களைத் தாக்கியவர்கள் கனடாவில் பிறந்து, வளர்ந்து, கனேடியர்களான தமிழ் ஈழத்தை சேர்ந்த மாணவர்கள். அவர்களின் பெற்றோர் சிறீலங்காவில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன்பே கனடாவுக்குப் புலம் பெயர்ந்தவர்கள்.
என்ன பரிதாப நிலை. கனடாவுக்கு கிட்டடியில் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களுக்கு. நாம் பிறந்த தாய் நாட்டில் நாம் புறக்கணிக்கபட்டு, வன்முறை தாக்குதல்களால் பாதிக்கப்பட்டோம். அபயம் தேடி புலம் பெயர்ந்து கனடா வந்தபிறகும் தாக்குதல்கள் தொடர்கிறதே. ஆனால் இப்போது ஈழத்தமிழர்களே கனடாவில் ஈழத்தமிழர்களையே தாக்குகிறார்கள். என் நினைவுகள் நான் கொழும்பு பல்கலைக்கழகத்தில் படித்த முதல் வருடத்தில், நான் புதியவன் என்பதால், சீனியர் மாணவர்களால் சில நாட்களாக ராகிங்கிற்கு உற்பட்டேன். பேராதனை பல்கலைக்கழகத்தில கிராமத்தில் இருந்து படிக்கவந்த மாணவி ஒருத்தி பகிடி வதை என்ற பெயரில் சீனியர்களால் ராகிங்செய்யப்பட்டு, மனநிலை பாதிக்கப்பட்டு, மகாவலி கங்கையில் விழுந்து, தற்கொலை செய்த செய்தி ஒரு அரசியல் புயலையே கிளப்பியது என் நினைவுக்கு வந்தது.
என் எண்ணங்கள் 1983 இனக்கலவரத்தின் போது தம் நாட்டிலேயே அகதிகளாக பல குடும்பங்கள் கொழும்பில் இருந்து யாழ்ப்;பாணம் கப்பலில் போக வேண்டிய நில ஏற்பட்டதைப் பல தமிழர்கள் மறந்திருக்கமாட்டார்கள். அபயம் தேடி வந்த தம் இன மக்களை அங்கு நீண்ட காலமாக வாழ்ந்த மக்கள் நடத்திய விதம் கண்டனதுக்குரியது. பாதுகாப்பு தேடி வந்தவர்களைப் பார்த்து ஏளனமாக, “அடிக்கு முந்தி வந்தவர்களா அல்லது அடிக்குப் பிறகு வந்தவர்களா?” என்று சிலர் கேட்டார்கள். அவ் நக்கல் கேள்வி பல அகதிகளின் மனதை பெரிதும் புண்படுத்தியது. இந்த நக்கல் கலாச்சாரம் யாழ்ப்பாணத்து மக்களிடையே வெகுகாலம் நிலவும் கலாச்சாரம். இக்கலாச்சாரம் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்ததினால் மாறவில்லை போலும்.
ராகிங் செய்யப்பட்ட இரு மாணவர்களின் தந்தையான சுந்தரலிங்கததை இலங்கையில் முனபே எனக்குத் தெரியும். அவர கனடாவுக்கு புலம் பெயர்வதற்கு பல வருடங்களுக்கு முன்பே நான் கனடாவுக்கு வந்தவன். இலங்கையில் நான் அரசசேவையில் பரிபாலன அதிகாரியாக வேலை செய்த காலத்தில், கொழும்பு கச்சேரியில் பென்சன் பகுதியில் பிரதம லிகிதராக வேலை செய்தவர் சுந்தரலிங்கம். நல்ல பண்புள்ளவர். 1983ஆம் ஆண்டு நடந்த இனக் கலவரத்துக்கு முன்பே நான் ரிட்டையராகி கனடாவுக்கு புலம் பெயர்ந்தவன். இனக்கலவரத்தில் வெள்ளவத்தை விவாகானந்தா ரோட்டில் இருந்த சுந்தரலிங்கத்தின் வீடு எரிக்கப்பட்டு அவரும், மனைவியும், இரு மகன்மாரும் உயிர்தப்பியதே தெய்வ புண்ணியம். யாழ்ப்பாணத்துக்கு மற்றைய அகதிகளோடு அவரால் போக முடியவில்லை, காரணம் அவர் சொந்த ஊரான கோண்டாவிலில் அவருக்கு இருந்த நிலபுலன்களை விற்று அவர் கொழும்பில் வீடு வாங்கியவர். அவருக்கு இருந்தது சொத்து அந்த கொழும்பு வீடு ஒன்றே. அவருடைய இருமகன்களும் படிப்பில் கெட்டிக்காரர்கள். அரசியல்வாதி ஒருவரின் உதவியொடு பிரசித்தம்பெற்ற கொழும்பு ரோயல் கல்லூரியில் ரவீந்திரலிங்கம், மகேன்திரலிங்கம் ஆகிய தன் இரு மகன்களையும் சேர்த்தார். தன் பிள்ளைகள் இருவரும் டாக்டராகவும், என்ஜினியராகவும் படித்து நல்ல வேலை செய்யவேண்டும் என்பதே அவர் நோக்கம். படிப்பில் மட்டுமல்ல கிரிக்கட் விளையாட்டு வீரர்களாகவும் மகன்கள் இருவரும் திகழ்ந்தார்கள். ரோயல் கல்லூரி கிரிக்கட் டீமில் அவர்கள் இருவர் மட்டுமே தமிழர்கள். பலரால் போற்றப்படும் ரோயல் - தோமியன் வருடாந்த கிரிக்கட் போட்டியில் மகேனும், ரவீனும்; அதிக ஒட்டங்கள் எடுத்து பலரின் பாராட்டைப் பெற்றவர்கள்;.
ஸ்காபரோ கல்லூhரி ஒன்றில் புதிதாகச் சேர்ந்த சுந்தரலிங்கத்தின் இருமகன்களும் தாக்குதலுக்கு உற்பட ஒரு மாதத்துக்குமுன்பு நான் சுந்தரலிங்கத்தை ஒரு சூப்பரமார்க்கட்டில் சந்திக்க நேரிட்டது.
“ என்ன சுந்தர் நீர் கனடாவுக்கு அகதியாக வந்துவிட்டதாக கேள்விப்பட்டேன். ஸ்காபரோ வாழ்க்கை பிடித்துக்கொண்டதா? மனைவியும் இரு மகன்மார்களுக்கு கனடா அனுபவம் எப்படி”? நான் கேட்டேன்.
“ அதை ஏன் கேட்கிறீர். போக இடமில்லாமல் இந்த நாட்டுக்கு வந்திட்டம். நல்லகாலம் எனக்கு செக்கியூரிட்டி கார்ட் வேலை கிடைச்சிது. என் மனைவிக்குப் பக்டரி ஒன்றில் வேலை. ஒன்றாரியோ அரசு குறைந்த வாடகையில் தந்த ஒரு இரண்டறை அப்பார்ட்மெண்டில் வாழ்கிறோம். ஊரிலை சண்டை முடிந்ததும் ஊருக்கு திரும்பிப் போக யோசித்திருக்கிறன்.”
“ உம்முடைய இருமகன்களுக்கும் புதுக் கல்லூரி பிடித்திருக்குதா’?
“ அது தான் பிரச்சனை. கல்லூரியில் இருமகன்மாருக்கும்; தங்களை மற்றமாணவர்கள் நடத்தும் விதம் பிடிக்கவில்லை. தாங்கள் பேசும் ஆங்கில உச்சரிப்பை பகிடி செய்கிறார்களாம். தாங்கள் இருவரும் படிப்பில் கெட்டிக்காரர்கள் என்பதை அறிந்த அவர்களுக்கு பொறாமையாக இருக்கிறதாம்” என்றார் சுந்தரலிங்கம்.
“ யார் இவர்களுக்கு பிரச்சனை கொடுக்கும் அந்த மாணவர்கள்”? நான் கேட்டேன்.
“ அதைக் கேட்டால் நீர் நம்பமாட்டீர். என் மகன்களுக்கு பிரச்சனை கொடுப்பது இங்கை பிறந்த நம் தமிழ் மாணவர்கள்தான் அவர்களோடு இரு கறுப்பு இன மாணவர்களும் சேர்ந்துவிட்டார்கள்.”
“ என்ன சுந்தர் சொல்லுகிறீர. நீர் சொல்வதை என்னால் நம்பமுடியவில்லையே”?
“ நான் சொல்வது உண்மை. அந்த தமிழ்மாணவர்களின் பெற்றோர் பல பவருடங்களுக்கு முன்பே இலங்கையில் இருந்து கனடாவுக்கு வந்தவர்கள். அவர்களது பிள்ளைகள் கனடாவிலை பிறந்து வளர்ந்தவர்களாம். அந்த மாணவர்களுக்கு எங்கடை ஈழத்துப் பிரச்சனை பற்றி ஒன்றுமே தெரியாது”
நான் சுந்தரை சுப்பர்மார்கட்டில் சந்தித்தப்பின் அவரின் இருமகன்மாரும், தாக்கப்பட்டு இருக்கிறார்கள். நான் சுந்தருக்கு போன் செய்து நடந்ததைக் கேட்டேன். அவர் விரக்தியொடு பேசினார்
.
“எனக்கு கனடா வாழ்க்கை வேண்டாம் வேண்டாம் என்றாகிவிட்டது. என் மகன்கள் இருவரும் தொடர்ந்து அக்கல்லூரியில் படித்தால் மன நோயாளிகளாகி விடுவார்கள்”, சுந்தர் குறைப்பட்டார்.
“ சுந்தர் நடந்த சம்பவத்தைப் பற்றி கல்லூரி பிரின்சிபலிடம் பேசினீரா”?
“ அவர் நடந்த சம்பவத்தைப் பெரிதாக கருதவில்லை போல எனக்குத் தெரிகிறது. காலப்போக்கில் ரவீந்திரனும் , மகேன்திரனும் மற்ற மாணவர்களோடு; ஒத்துப் போய்விடுவார்கள் என்றார் பிரின்சிபல். இது போல புதிதாக கனடாவுக்கு புலம் பெயர்ந்த மாணவர்கள் கேலிக்கும், தாக்குதலுக்கும் உற்பட்டு இருக்கிறார்கள். என் மகன்கள் இருவரையும் தாக்கிய மாணவர்களை அழைத்து, தான் எச்சரிக்கை செய்வதாக கல்லூரி பிரின்சிபல் சொன்னார்”.;
“சுந்தர் உமக்கு அவரின் பதிலில் திருப்தியில்லாவிட்டால் பொலீசுக்குப் போய் முறையிடலாமே”, நான் ஆலோசனை சொன்னேன்.
“ நான் இதைப்பற்றி எனது மனைவியோடு பேசினேன். அவளுக்குப் பிரச்சனையைப் பெரிதாக்க விருப்பமில்லை. கொஞ்ச காலம் பொறுத்துப் பார்ப்போம் என்றாள்”, என்றார் சுந்தர்;.
“ தாக்கிய மாணவர்களின் பெற்றோரோடு நீர் பேசினீரா”?
“ நான் அவர்களோடு பேச வேண்டிய அவசியமிருக்கவில்லை. எனது மகன்மாரை தாக்கிய தமிழ்மாணவர்களின் பெற்றோர் என்னை வந்து சந்தித்து நடந்த சம்பவத்துக்கு என்னிடம் மன்னிப்புக் கேட்டனர். அவர்கள் கனடாவுக்கு சுமார் 25 வருடங்களுக்கு முன்பே வந்தவர்கள். இப்போ நல்ல பண வசதிகளோடும், அந்தஸ்தோடும் வாழ்பவர்கள். என்னை நடந்ததை மறந்து விடும்படியும், அதற்கான பணம் ஏதும் தேவையானால் தாங்கள் தர சம்மதம் என்றார்கள். அவர்களோடு பேசும் போது என் மகன்மாரைத் தாக்கிய ஒரு மாணவனின் பெற்றோர் என் மனைவிக்கு தூரத்து உறவினர் என்று தெரியவந்தது.” என்றார் சுந்தர்.
“ அவர்கள் பணம் தருவதற்கு முன்வந்ததுக்கு நீர் என்ன சொன்னீர்”?
சுந்தரம் சிரித்தார். நான் அவர்களுக்குச் சொன்னேன் “ இங்கைபாருங்கோ பணம் தான் முக்கியம் என்பதில்லை. பிள்ளைகளை நல்ல ஒழுக்கமாய் வளர்க்க வேண்டியது முக்கியம்” என்று.
“சுந்தர், இளம்வயது துடிப்புள்ளவயது. எதையும் யோசிக்காமல் செய்துவிட்டு பின் வருந்துவார்கள். கனடா பல இன மக்கள் வாழும் தேசம்.
******
சுந்தரின் இருமகன்களும்; கல்லூரியில் தாக்குதலுக்கு உள்ளாகி பல மாதங்கள் உருண்டோடிவிட்டது. ஒரு நாள் நான் டிம் ஹோர்டன்ஸ் கோப்பிக் கடைக்குள் மகேனும், ரவீனையும் இன்னும் மூன்று மாணவர்களோடு சிரித்துப் பேசியபடி கோப்பி குடிப்பதைக் கண்டேன். மற்ற மூன்று மாணவர்களும் எனக்குத் தெரியாத முகங்கள். என்னைக் கண்ட மகேன்
“ என்ன அங்கிள், தனியாகவா டிம் ஹேர்டன்சுக்கு வந்தனீங்கள்?”
“ இல்லை ஆன்டி காருக்குள் இருக்கிறா. அவவுக்கும் இரண்டு டபில் டபில் கோப்பி வாங்க வந்தனான். அது சரி இப்ப எப்படி கல்லூரிப் படிப்பு போகுது? பிரச்சனை ஒன்றுமில்லையே”?, நான் கேட்டேன்.
“ இப்ப பிரச்சனை ஒன்றும் இல்லை அங்கிள். அதெல்லாம் கல்லூரியில் நானும் தம்பியும் சேர்ந்த ஆரம்ப காலத்தில் மட்டும் தான் இருந்தது. இப்ப பிரச்சனை ஒன்றுமில்லை. இப்போ கல்லூரியில் புதிதாக சேர்பவர்களை வரவேற்று, வேண்டிய உதவிகள் செய்ய ஒரு மாணவ குழுவை அமைத்திருக்கிறோம். இதோ எங்களோடு இருப்பவர்கள் கஜன், ரமேஷ், ரவி. இவர்கள் தான சில மாதங்களுக்கு முன் எங்களைத் தாக்கிய குழுவில் இருந்தவர்கள். இப்ப எங்கள் நண்பர்கள்”.
“ என்ன மகேன் சொல்லுகிறீர். உம்மையும் உம்; தம்பி ரவீனையும் தாக்கியவர்கள் இப்போ உங்கள் நண்பர்களா”? நான் கேட்டேன்.
“ ஓம் அங்கிள் அதோ சமாதனம் சின்னங்கள்; போட்ட டி செர்ட்டுகள்; அணிந்திருக்கிறார்களே அந்த மூவரும்; கணக்கும் விஞ்ஞானப் பாடங்களில் சரியான வீக். அப்பாடங்களில் அவர்களின் சந்தேகங்களை தீரத்துவைப்பது நானும் என் தம்பியும். அதுவுமல்லாமல் கிரிக்கட் விளையாட்டைப் பற்றித் தெரியாத அவர்களுக்கு அதை விளையாடுவது எப்படி என்று சொல்லிக கொடுது இப்போ எங்கடை கிரிக்கட் டீமிலை விளையாடுகிறார்கள். பேஸ் போல் பற்றி தெரியாத எங்களுக்கு அவர்கள்; அதை விளையாடுவது எப்படி என்று சொல்லித் தந்திருக்கிறார்கள்.” என்றான் ரவீன்.
“ நீர் சொல்வதைக் கேட்க எனக்கு அதிசயமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது. தொடரட்டும் உங்கள் நட்பு. மறப்போம், மன்னிப்போம் என்று வாழப்பழகிக் கொள்ளுங்கள். புதியவர்கள் காலம் போகப் போக பழையவர்களாக வேண்டியது தான்,” என்றேன் நான் சிரித்தபடி.
*******

