கனவு நாயகனுக்கு ஒரு கவிதாஞ்சலி
அணுவின் ஆழமும்,
மூலக்கூறுகளின் மூலமும்
அறிந்த முதல்வனே !
தென்கோடியில் உதயமாகி,
தேசத்திற்காய் தேய்ந்து,
வடக்கே அஸ்தமனமான
அறிவுச் சூரியனே !
கனவுகள் நனவாக
கனவு காண சொன்ன
தமிழ்த் தாயின் தலைமகனே !
திறமைகளின் புகலிடமே !
சாதனைகளின் சரணாலயமே
விலை போகாத வீரமே !
உழைப்புக்கும்,நேர்மைக்கும்
பொருளாய் காலம் இனி
உன் பெயர்தான் உச்சரிக்கும் !
உன் தூக்கம் துறந்த
உழைப்பால் வல்லரசுகளின்
தூக்கம் தொலைத்தாய் !
கண்டுபிடிப்புகளால்
எதிரிகளை கலவரப்படுத்தினாய் !
ஏவுகணைகள் ஏவி
வானத்தை வசப்படுதினாய் !
இல்லறத்தில் நீ
ஈடுபட்டிருந்தால்
ஈன்றிருப்பாய்
ஓன்றிரண்டு பிள்ளைகள் !
நீயோ துறவறத்தில்
தோய்ந்து தேசத்திற்காய்
தேய்ந்ததால் இன்று
இந்தியத் தாயின்
இளைய தலைமுறையே
தங்களை உன் வாரிசாக
வரிந்து கொண்டுள்ளது !
நீ பிறந்த இன்னாளில்
உனக்கொரு வேண்டுகோள் !
தமிழ் மண்ணின்
ஏதோ ஒரு மூலையில்
ஏதோ ஒரு தமிழச்சியின்
வயிற்றில் கருவாகி
கருவிலே திருவாகி
தடைகள் தகர்த்திட,
தாய்மண் தழைத்திட,
மீண்டுமொரு முறை
பிறந்து வா ! எம்
விஞ்ஞான வித்தகனே !