ஒளித்துளியின் கண்ணீர்த்துளி
மௌனித்தது
திசை தவறி
ஆழ ஓடிய இருள் .
எழுகிறது
அதன் நிழல் ஒவ்வொன்றிலும்
வெறும் பதிலற்ற ஏன்?
உழன்று ... உருகி
தன்னைத் தானே விழுங்கி
கருமை படர்கிறது அதன் முகம் .
சுருங்கி
சுவடு பிறழ்ந்து
இறுகி உதிர்கிறது
அதன் உதடுகளிலிருந்து
மறையும் புன்னகை .
பதுங்கி
மொக்கு விரிக்கும்
மலரின் சிலிர்ப்பில்
முதிர்கிறது உள்ளீடாய்
அறியாத பீதியின் பயங்கரம் .
தளர்ந்த உதயத்தில்
தசை மினுக்கும் பூக்களில்
தெரியக்கூடும் ...
நேற்று தொலைந்த
மௌனத்தின்
திசை தவறிய
ஒரு ஒளித்துளியின்
கண்ணீர்த்துளி .