துன்ப மகற்றும் துணை

கருமேகம் சூழ்ந்துவரக் கண்டுமயி லாடத்
தருக்களெலாம் காற்றிலசைந் தாடத் - திரும்பும்
குருகுகளும் கூடடையக் கோலமுடன் சொட்டி
வருமேயிம் மண்ணில் மழை .

மின்னல் பளிச்சிட வேட்டா யிடியிடிக்க
சின்னத் துளிகளாய்ச் சேர்ந்துவிழ - முன்னதாய்
மண்மணத்தில் மெய்சிலிர்க்க வானவில்லும் பூத்திடக்
கண்குளிரும் விண்மழை கண்டு.

பூரிப்பாய் வந்திடும் பூமியை முத்தமிட
ஏரிகுளம் நீர்மட்டம் ஏற்றிடும் - மாரிபோல்
இன்பந் தரவல்ல(து) ஏதுமுண்டோ? இவ்வுலகின்
துன்ப மகற்றும் துணை .

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (9-Nov-16, 12:09 am)
பார்வை : 121

மேலே