பனிவிழும் இரவு

(பனிமழை பெய்கிறது , இரவுகளில்
ஜன்னலோரம் அமர்ந்து
அவன் கவிதை எழுதுகிறான்!)


வந்ததென்ன இரவுகளின் இன்பமழை - இந்த
விழிகளுக்குள் தந்ததென்ன ஓய்வுகளை!
இரவுகளை அழகுகூட்ட வந்தகலை - யார்
பார்க்காமல் உறங்கினாரோ? செய்தபிழை!

பூக்களுக்கு நலன்கேட்டே பனித்துளியே - ஆக
மட்டும் செல்வாயா சொல்மழையே?
புவிமேலே மெதுவாக அமர்ந்தாயே-ஆவியிலே
மெல்ல மெல்ல கலந்தாயே!

தனிமைக்கு துணையாக வந்தவிடு - இனி
இரவுகளின் சொந்தமாக தங்கிவிடு!
புரியாத வாழ்க்கையினை சொல்லிவிடு - யார்
போனாலும் நீமட்டும் இருந்துவிடு!

உனைபார்த்து காயத்தை ஆற்றுகிறேன்-என்
உள்ளூறும் நினைவுகளை பூட்டுகிறேன்!
உனையிங்கு காவலுக்கு அழைக்கின்றேன்-இனி
இரவுகளில் நீவரவே வேண்டுகிறேன்!

பனிமழையே! இரவுக்கு குளிரூட்டு - என்
கண்ணீரின் வெப்பத்தை நீஆற்று!
மனிதஇனம் இதமாக உறங்கிடவே - உன்
குளிராலே கனவுக்கு வழிகாட்டு!

இஃதென்ன வழிகிறதே அறிவுமழை - ஓ
மனிதஇனம் சிந்திக்க வந்தமழை?
ரகசியத்தை காதோரம் சொல்லும்மழை - மக்கள்
உறங்குவதால் மனதோரம் அழுதமழை!

துளித்துளியாய் குறைவதுவே தெரிகிறதே - ஓ!
இரவுகளின் தாலாட்டு முடிகிறதா?
வழிவழியாய் என்கண்ணீர் வருகிறதே - என்
பனிமழையே புரிந்துகொண்டு நாளைவா!

புவிதனிலே மேல்விழும் இறுதித்துளியில் - என்
விழிகளும் நிம்மதியாய் உறங்கட்டும்!
இரவுகளை அழிக்கவந்த கதிரவனுக்கு-இதன்
ரகசியம் தெரியாமல் இருக்கட்டும்!

எழுதியவர் : (10-Nov-16, 11:04 pm)
பார்வை : 96

மேலே