எடுத்துக்கோர்த்த_முத்துக்களில்_ஒன்று

எடுத்துக்​ கோர்த்த முத்துக்களில் ஒன்று
ஏங்கித் தவிக்குது துடித்திடும் இதயமுடன் !
தாக்கிய காதலும் மோகத்தைக் கூட்டியது
தாங்கிடா நிலையும் நெஞ்சை வாட்டியது !

நினைத்த ஒருவனை அடைய விரும்பியது
அடையும் எண்ணமும் ஆழமாய் ஊன்றியது
அடங்கிடா ஆசைகள் உள்ளத்தில் பெருகியது
அணையிலா நதியாய் கரையைக் கடந்தது !

கூறிடவே நினைத்தாள் காரிகை அவளும்
ஏறிட்டும் பார்க்காத காளையவன் கண்கள்
அருகில் வந்திட்ட அழகியவளை நோக்காது
வேகமாய் கடந்தான் விவேகமுள்ள அவனும் !

கவலையும் பற்றியது வருத்தமும் வழிந்தது
விரும்பிய விழிகளும் கண்ணீரில் மிதந்தது !
தேங்கிய குழப்பமுடன் தேடினாள் வழியை
நல்லதொரு முடிவுக்கு நாடினாள் தோழியை !

தோழியும் மொழிந்தாள் தோன்றியதை உடனே
யாசிப்பதில் தவறில்லை யோசிக்காதே நீயுமென
​கட்டவிழ்த்திடு காதலை கட்டிளங் காளையவன் ​
கனியும்வரை மொட்டவிழ்த்து விடு இதழ்களை !

​ பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (15-Nov-16, 4:13 pm)
பார்வை : 77

மேலே