மனப்பாடம் பண்ணற கலை---நினைவாற்றல் நிறைந்த திருச்சியைச் சேர்ந்த ஜான்லூயிஸ்

எந்தத் துறைக்கும் நினைவாற்றல் மிக அவசியம். அலுவலகத்தில் அதிகாரி சொன்னதை மறந்துபோய் அவரிடம் டோஸ் வாங்கி, அப்ரைசலை இழப்பவர்களும் உண்டு. மாலையில் மனைவி வாங்கி வரச்சொன்ன மல்லிகைப்பூவை கணவன் மறந்ததால், வீடே ஒரு போர்க்களமாய் மாறிய சரித்திரங்களும் உண்டு. இப்படி அலுவலகம் தொடங்கி, தனிமனிதர் வாழ்வு உட்பட எல்லா நிலைகளிலும் நினைவாற்றல் இன்றியமையாதது.

அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நினைவாற்றலை மேம்படுத்துவதற்காகவே மெமரி ஸ்போர்ட்ஸ் போட்டிகள் நடந்து வருகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?" என்று சஸ்பென்ஸ் வைக்கிறார், திருச்சியைச் சேர்ந்த ஜான்லூயிஸ். 2001 ஆம் ஆண்டிலிருந்து உலகளவிலான மெமரி சாம்பியன் போட்டிகளில் விளையாடி வரும் ஜான்லூயிஸ், கிராண்ட் மாஸ்டர் ஆஃப் மெமரி சாம்பியன் பட்டம் வென்ற ஒரே இந்தியர் என்ற சிறப்புக்குரியவர்.

நான் டால்மியா அரசு உதவி பெறும் பள்ளியில் 14 ஆண்டுகளாக கெமிஸ்ட்ரி ஆசிரியராக பணியாற்றினேன். அந்தக் காலகட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கெமிஸ்ட்ரி பாடத்தில் என்னுடைய மாணவர்கள் ஒருவர் கூட ஃபெயிலானது கிடையாது. அன்றாடப் பாடங்களை மிக எளிமையாகவும், ஞாபகம் வைத்துக்கொள்ளக் கூடிய உத்திகளை பயிற்சியாக கொடுத்ததாலும்தான் மாணவர்கள் அபார நினைவாற்றலுடன் தொடர்ந்து சாதித்தனர்.

சின்ன வயசுல நான் ஸ்கூல் படிக்கும்போது, பாடங்களை மனப்பாடம் செய்யாம மனப்படம் செய்வேன். அதாவது ஆசிரியர் சொல்பவற்றை காதில் உள்வாங்கி, படிக்கக்கூடிய ஒவ்வொன்றையும் மனதில் காட்சிகளாக்கிக் கொண்டு தொடர்புபடுத்திப் பார்ப்பேன். இப்படி காட்சிப்படுத்திப் படித்ததால், எதையும் மறக்காமல் பாடங்கள் எளிதில் நினைவில் இருக்கும். இதற்காகவே, என் ஆசிரியர்களால் பலமுறை பாராட்டப்பட்டுள்ளேன். என் சிறுவயது கற்றல் உத்திகளை என் மாணவர்களுக்கும் நான் கற்பிக்கவே, அவர்கள் தொடர்ந்து தேர்வில் வெற்றிபெற்று வந்தார்கள்.

அந்த நேரத்தில்தான் 2001 ஆம் ஆண்டு ஆசிய அளவிலான மெமரி ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடக்கிறது என்று தெரிந்து, ஆர்வத்துடன் நானும் பங்கேற்றேன். முதல் போட்டியிலேயே சாம்பியன் பட்டத்தை வென்றேன். மெமரி சாம்பியன் போட்டி, செஸ் போட்டியைப்போல முழுக்க முழுக்க மூளைக்கு வேலை கொடுக்கக் கூடிய விளையாட்டாகும். 12 வயதுக்குட்பட்டோர், 13 வயதிலிருந்து 17 வயதுக்குட்பட்டோர், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று 3 விதமான பிரிவில் இப்போட்டிகளை தனியார் அமைப்புகள் நடத்துகின்றன. வேர்ல்டு மெமரி ஸ்போர்ட்ஸ் கவுன்சில் கமிட்டியினர்தான் 1991 ஆம் ஆண்டிலிருந்து மெமரி சேம்பியன் போட்டிகளை உலகளவில் நடத்தி வருகிறார்கள். இதில் ஞாபகத் திறன் அதிகமுள்ள யார் வேண்டுமென்றாலும் பங்கேற்கலாம். என்னுடைய முதல் போட்டியிலேயே சாம்பியன் பட்டத்தை வென்றதால், நான் வேலை பார்த்த டால்மியா அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாகத்தினரே 2002 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலக அளவிலான மெமரி போட்டியில் கலந்துகொள்ள ஃப்ளைட் டிக்கெட் எடுத்துக்கொடுத்து, ஊக்கப்படுத்தி அனுப்பிவைத்தனர். அந்தப் போட்டியில், வெற்றி பெறவில்லை என்றாலும் அந்தப் போட்டியின் மூலம் பல நுணுக்கங்களையும் அனுபவங்களையும் கற்றுக்கொண்டேன்.

மெமரி சாம்பியன் போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு வீரரும் விதிமுறைகளுடன் கூடிய 10 சுற்றுப் போட்டிகளில் விளையாடவேண்டும். ஒவ்வொரு சுற்றுக்கும் 100 மதிப்பெண்கள் என்று 1,000 பாயிண்ட்டை வெற்றி இலக்காக நிர்ணயிப்பார்கள். முதலாவதாக, ஆங்கிலத்தில் கொடுக்கும் 200 வார்த்தைகளை 15 நிமிடங்களில் மனப்பாடம் செய்து ஒப்புவித்தல், இரண்டாவதாக 5 நிமிடங்களில் ஏறுவரிசை, இறங்குவரிசை இல்லாமல் கலந்து கிடக்கும் 400 எண்களை மனப்பாடம் செய்து, அதே வரிசையில் சொல்லுதல், ஒரு மணிநேரத்தில் 1,000 எண்களைச் சொல்லுதல், இரும இலக்க (01 பைனரி) எண்கள் படித்து ஒரு மணிநேரத்தில் உள்வாங்கி, அதைப் பார்க்காமல் எழுதுதல், கலைத்துக் கொடுக்கும் ஒரு சீட்டுக்கட்டை 5 நிமிடத்தில் எண்கள், எழுத்துக்களை அதே ஆர்டரில் அடுக்குதல், போட்டோக்களை பார்த்து பெயர் கூறுதல், ஸ்போக்கன் நம்பர்களை திரும்பக் கூறுதல் உள்ளிட்ட 10 சுற்றுகளிலும் அதிக பாயிண்ட் எடுப்பவர்கள்தான் மெமரி சாம்பியனாக தேர்ந்தெடுக்கப் படுவார்கள். இதில், ஒரு சுற்றில் ஒரு விஷயத்தை மறந்தால் கூட ஒரு தவறுக்கு 20 மதிப்பெண்கள் குறைத்துவிடுவார்கள். முதல் மெமரி சாம்பியன் போட்டியில் கலந்துகொண்டபோது, எனக்கு வயது 41. அந்தப் போட்டி பிடித்துப் போனதால் இந்த விளையாட்டிலேயே முழுகவனம் செலுத்துவதற்காக, நான் பார்த்த ஆசிரியர் வேலையிலிருந்து 43வது வயதில் விலகிவிட்டேன். மெமரி சாம்பியன் விளையாட்டுக்கு எவ்வித உடற்பயிற்சிகளும் செய்யத் தேவையில்லை. மனப்பயிற்சி மற்றும் தியானம் செய்தாலே போதுமானது.

இதற்காக, நான் தினமும் படங்கள், எண்கள், வார்த்தைகளைப் படித்து திரும்பவும் ஒப்புவித்து பயிற்சி செய்கிறேன்" என்று கூறும் ஜான்லூயிஸ், இதுவரை தேசிய அளவிலான மெமரி போட்டிகளில் 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் இருமுறை சாம்பியன் பட்டத்தை வென்று, 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசையும் பெற்றுள்ளார். மேலும், 2003 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலக மெமரி சாம்பியன் போட்டியில் 6 வது இடத்தையும் 2007ல் துருக்கியில் நடந்த போட்டியில் 4வது இடத்தையும் பெற்றுள்ளார். இந்தியாவிலேயே முதல் கிராண்ட் மாஸ்டர் ஆஃப் மெமரி சாம்பியன் பட்டம் வென்ற ஒரே வீரர் ஜான்லூயிஸ்தான் என்பது மட்டுமல்லாமல், உலக அளவிலான கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றவர் பட்டியலில் 9வது இடத்தில் இருக்கிறார் என்பது பெருமைக்குரிய விஷயம். மேலும் போட்டிகளில் கலந்துகொண்டே பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் தொழிற்சாலை, ஐ.டி., நிறுவனங்களைச் சேர்ந்த பலருக்கும் ஞாபக சக்தி உத்திக்கான பயிற்சிகளைக் கொடுத்து வருகிறார் ஜான்லூயிஸ்.



செஸ் விளையாட்டைப் போலவே மெமரி சாம்பியன் போட்டிகளும் காமன்வெல்த், ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் இடம்பெறவில்லை என்பது வருத்தமளிக்கிறது. வருடந்தோறும் இந்திய அளவிலும் உலகளவிலும் நடக்கும் மெமரி சாம்பியன் போட்டிகளை தனியார் அமைப்புகள்தான் நடத்துகின்றன. இதுவரை அரசு சார்பிலிருந்து எந்தவித உதவிகளும் ஊக்கத் தொகைகளும் எனக்குக் கிடைக்கவில்லை. ஒவ்வொரு போட்டிக்கும் சொந்தச் செலவிலும் நண்பர்களின் உதவிகளின் மூலமாகவும்தான் சென்று வந்துள்ளேன். தற்போது ஃப்ளைட் டிக்கெட் எடுக்க முடியாத காரணத்தால், வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளில் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை. இந்த விளையாட்டில் கிராண்ட் மாஸ்டர் ஆஃப் மெமரி சாம்பியன் பட்டம் வெல்வது சவாலான விஷயம். கிராண்ட் மாஸ்டர் பட்டத்திற்கென்றே 3 சுற்று தனிப்போட்டிகள் நடத்துவார்கள். ஒரு சீட்டுக்கட்டிலுள்ள நம்பர்களையும் எழுத்துக்களையும் 2 நிமிடங்களில் பார்க்காமல் சொன்னால், ஒரு கிராண்ட் மாஸ்டர். ஒரு மணிநேரத்தில் குறைந்தபட்சம் 10 சீட்டுக்கட்டுகளை சரியாகச் சொன்னால், இரண்டாவது கிராண்ட் மாஸ்டர். ஒருமணி நேரத்தில் கலந்துகட்டிய 713 எண்களைப் படித்து மனப்பாடம் செய்து அதே வரிசையில் தவறில்லாமல் கூறினால், மூன்றாவது கிராண்ட் மாஸ்டர். மூன்று கிராண்ட் மாஸ்டர் போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே கிராண்ட் மாஸ்டர் ஆஃப் மெமரி சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியும். நான் 2003 ஆம் ஆண்டு மான்செஸ்டரில் நடந்த உலக அளவிலான போட்டியில் இப்பட்டத்தை வென்றேன்.

தற்போது தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, மஹாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் மாணவர்களுக்கு நினைவாற்றல் பயிற்சிகளைக் கொடுத்து வருகிறேன். இதுவரை 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும் ஊழியர்களும் நான் கொடுத்த நினைவாற்றல் பயிற்சியில் பயன்பெற்றுள்ளார்கள். மெமரி சாம்பியன் போட்டிகளில் நான் விளையாட அரசு உதவி செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன், நினைவாற்றலை வளர்ப்பதற்காகவே சொந்தமாக இன்ஸ்டிட்யூட் ஆரம்பித்து, நினைவாற்றலை ஒரு படிப்பாகவே சொல்லித் தரலாம் என்றிருக்கிறேன்..." என்று தன் எதிர்கால லட்சியக் கனவுகளை விவரிக்கிறார் ஜான்லூயிஸ்.

ஜான்லூயிஸ் செல்பேசி நம்பர்: 97153 33175

Posted by Sathish Venkatasan

எழுதியவர் : (21-Nov-16, 3:47 pm)
பார்வை : 145

மேலே