கண்ணன் ஏமாந்தான்

#கண்ணன் ஏமாந்தான்..!

ஆன்றோர் நிறைந்த அரசவை
தர்மம் வேரூன்றிய தேசம்
அதர்மம் அறியா பாண்டவர்கள்..
வீரம் செறிந்தவர்கள் என்றெல்லாமும்தான்
வீணாய்ப் போனது
ஐவரின் மனைவி திரௌபதி
துசிச்சாதனனால் இழுத்து வரப்பட்டபோதும்
துரியோதனனால் துகில் உரியப்பட்டபோதும்
மௌனம் சாதித்தது தர்மம்
கைகளை
கட்டிப் போட்டுக் கொண்டது வீரம்..!

ஆடை விலக விலக
எவரும் அவளின் மானம் காக்கவில்லை
கண்மூடி நின்றனர்
மனைவியை
பந்தயத்தில் பணயம் வைத்த
கையாலாகாதவர்கள்..!

கெக்கெலிப்பில் அக்கிரமம் நடத்தினர்
கௌரவம் இல்லாத கௌரவர்கள்..!

அனைவரும் கைவிட்டனர்..
ஆடை களைவோரின் கரம் வெட்டாமல்..!

"கண்ணா... கண்ணா..
இடரிலிருந்து காப்பாற்று"
கதறியழுத்தவளுக்கு
வற்றாத உடையளித்தான்
அபயமளித்து
திரௌபதியின் மானம் காத்தான்
மறைந்திருந்து மாயக் கண்ணன்...

இதயத்தில் வைத்து போற்றுவோருக்கு
இன்னல் நீக்கியதெல்லாம்
மகாபாரதத் தோடுநின்றுவிட்டதா..?

கற்பழிப்பென்றும் கொலையென்றும்
வன்கொடுமையென்றும்
வலிகளில் துடித்தபோது
துடித்தவர்கள்
கடவுளை அழைக்கவில்லையா..?
இல்லை
கடவுளின் செவிகள் அடைபட்டுப்போனதா..?

கண்ணனாலும் இயலவில்லையாம்
கலியுக அக்கிரமங்களை அடக்குதற்கு
கண்ணன் உண்மையிலேயே
ஏமாந்துதான் போனான்..!

வேறு உருவில் வர ஆயத்தமாம்
வருவான் கலியுகத்தில் கல்கியாய்...
அடக்குவதற்கும் அழிப்பதற்கும்
அதுவரை
அநியாயங்களாய்..அக்கிரமங்களாய்........!

எழுதியவர் : சொ.சாந்தி (28-Nov-16, 9:49 pm)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 708

மேலே