வந்து… வந்து…

காட்சி ஊடகங்கள் பெருகிவிட்ட இந்நாட்களில் கூடவே எல்லா சேனல்களிலும் 3–4 பேர் கலந்து கொள்ளும் விவாத நிகழ்ச்சிகளும், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளும் விவாத நிகழ்ச்சிகளும், விமர்சன நிகழ்ச்சிகளும், நேரடி கேள்வி–பதில் நிகழ்ச்சிகளும், சம்பவ இடத்தில் இருந்து செய்தியாளர்கள் தரும் நேரடி ஒளிபரப்புகளும் தவிர்க்க முடியாதவைகளாகிவிட்டன. இன்றைய தேதியில் தமிழில் மட்டும் சற்றேறக்குறைய 30 சேட்டிலைட் சானல்கள் இயங்குகின்றன. இவை அனைத்திலும் மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

விவாத நிகழ்ச்சிகளில் ஏதேனும் ஒரு மன நோயாளியையும், சமூக ஆர்வலர் என்ற பெயாரிலோ அல்லது வேறு ஏதேனும் ஒரு பெயாரிலோ வரச் செய்து, TRP ரேட்டிங் ஏற்றத்திற்காக உட்கார வைத்து விடுகிறார்கள்.

ஒரு பொதுமேடையில் எப்படி விவாதம் செய்வது? என்ற பாலபாடம் கூட தெரியாமல் அல்லது தெரிந்து கொள்ள விருப்பம் இல்லாமல்தான் மிகப்பலரும் விவாதங்களில் கலந்து கொள்கிறார்கள். குறிப்பாக வெவ்வேறு பின்புலம் உடைய 3–4 நபர்கள் கலந்து கொள்ளும் விவாத நிகழ்ச்சிகளில் அடுத்தவர் பேசும் போது குறுக்கே புகுந்து பேசுவது, மற்றவர் கருத்தை சொல்ல விடாமல் செய்வது, உரக்க கத்தி குரலை உயர்த்திப் பேசுவது, தேவையில்லாமல் பிறரை மட்டம் தட்ட வேண்டி ஊளை இடுவது போன்று சிரிப்பது (இளிப்பது) போன்ற செயல்களில் ஆண் – பெண் பேதம் இல்லாமல் ஈடுபடுகின்றனர்.

இவற்றையெல்லாம் விட இந்நிகழ்ச்சிகளில் நடைபெறும் மிகப் பெரிய கொடுமை, இவர்கள் பயன்படுத்தும் ஒரு வார்த்தையே. அது தான் ‘வந்து’. இவர்கள் அந்த குறிப்பிட்ட விவாத நிகழ்ச்சியில் மொத்தம் 500 வார்த்தைகள் பேசியிருந்தால் அதில் ‘வந்து’ என்ற வார்த்தையை மட்டும், பொருளே இல்லாமல், தேவையும் இல்லாமல் குறைந்தது, தோராயமாக 100 முறை சொல்லி இருப்பார்கள். ஆக, தமிழ் தொலைக்காட்சிகளில், இன்று மிக அதிகமாக புழங்கப்படும் ஒற்றை வார்த்தையாக ‘வந்து’ மாறிவிட்டது.

எல்லா தொலைக்காட்சிகளிலும் நிகழ்ச்சிகளை நடத்தும் நெறியாளர்கள் மற்றும் பங்கு பெறுவோர் — அரசியல் கட்சி தலைவர்கள், அரசியல் கட்சி பேச்சாளர்கள், அரசியல் விமர்சகர்கள், ஜாதிக்கட்சி தலைவர்கள், மதத் தலைவர்கள், பிரபல பத்திரிக்கையாளர்கள் எனப்படுவோர், வக்கீல்கள், மருத்துவர்கள், பொருளாதார நிபுணர்கள், பங்குச்சந்தை ஆலோசகர்கள், ஆசிரியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், பொதுமக்கள், தொலைப்பேசி நிகழ்ச்சிகளில் பங்குபெற்று பேசும் நேயர்கள், சினிமா–விளையாட்டு ரசிகர்கள் என எந்த ஒரு வேறுபாடும் இல்லாமல் தங்கள் பேச்சில் தேவையற்ற, பொருளற்ற முறையில் ‘வந்து’ போட்டு வெளுத்து வாங்குகிறார்கள். இது தமிழகத்தில் தமிழ் பேச்சில் ஒரு வியாதியாக மாறிவிட்டது என்றால் அது மிகையல்ல.

சில சேனல்களில் செய்தி வாசிப்பாளர்களே விவாத-விமர்சன நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போதும், அவர்களால் இந்த தேவையற்ற, பொருளற்ற வீண் வார்த்தை ‘வந்து’ ‘வந்து’ என்ற சொல்லாமல் பேச முடிவதில்லை. அதன் அர்த்தம் அவர்களுக்கு காகிதத்தில் எழுதி கொடுக்கப்பட்டதை அல்லது எதிரே திரையில் ஓடும் எழுத்துக்களை அப்படியே படிக்க முடியும். சுயமாக ஒரு 10 வார்த்தைகளை நேர்த்தியாக-கோர்வையாக பேசமுடியாதவர்கள் என்பதே.

அத்துடன் நீண்ட நெடுங்காலமாகவே ‘இது’ என்ற பொருளற்ற வார்த்தையும் தமிழ் பேச்சு வழக்கில் வீண்பட்டு (X பயன்பட்டு) வருகிறது. ‘இது’, ‘இதாயிடிச்சு’, ‘இதாயிடும்’ ‘அது இப்போ இதாயிடும்’ போன்று பொருளற்று வழங்கப்பட்டு வருகிறது. இதனுடன் இந்த ‘வந்து’ சுனாமி கூடி நம்மைப் பாடாய்படுத்துகிறது.

இத்தகைய தேவையற்ற-பொருளற்ற வார்த்தைகளை பேச்சில் அடிக்கடி கூறி வீண்படுத்துவது சிந்தனை வறட்சியின் ஓர் அடையாளமாகும். ஒரு சிலர் பேசும் போது ‘ஆ…’ ‘ஏ…’ ‘ஊ…’ என்ற சப்தங்களால் நேரத்தை கடத்துவார்கள். இவற்றையெல்லாம் ஆங்கிலத்தில் ‘ஃபில்லர்ஸ்’ (Fillers) என்று கூறுவார்கள்.

மிகப்பெரும்பாலானோர் இத்தகைய மொழிக்குற்றத்தில் ஈடுபடுவதால் நாம் நாகரிகம் கருதி யாரையும் குறிப்பிட்டு சொல்ல வேண்டியதில்லை. இது வாசகர்களுக்கும், நேயர்களுக்குமே உள்ளங்கை நெல்லிக்கனி. ஆனால், அதேசமயம் ஒரு சிலர் பேசும்போது, தெளிந்த நீரோடை போல, கோர்வையாக, நேர்த்தியாக தங்கள் கருத்துகளை பதிவு செய்கிறார்கள். அவர்களில் ஒரு சிலரின்ன் கருத்துகளில் உடன்பாடு இல்லாவிட்டாலும், அவர்களின் நேர்த்தியான தமிழுக்காக அவர்கள் பேசுவதை நாம் சேனலை மாற்றாமல் பார்க்கத்தான் செய்கிறோம்.

ஒரு விவாத நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கையில், இந்த ‘வந்து…வந்து’-வை கேட்கச் சகிக்காமல் மற்றொரு சேனலுக்கு மாறினால், அதிலும் அதே கூத்து தான் அரங்கேறிக் கொண்டிருக்கும். ஏழாம் வகுப்பில் படிக்கும் என் மகளுக்கு, குறிப்பிட்ட நேரத்தில் ‘வந்து’ என்ற வார்த்தை எத்தனை முறை சொல்லப்பட்டது என்று கணக்கிட்டு என்னிடம் எண்ணிக்கையைக் கூறுவது ஒரு பொழுதுபோக்கு. அது எந்த தொலைக்காட்சி சேனலில் உள்ள எந்த விவாத — கலந்துரையாடல் — விமர்சன நிகழ்ச்சியாகவும் இருக்கலாம், அதனைப் பற்றிய அறிமுக உரையை நெறியாளர்கள் ஆரம்பிக்கும்போதே குறைந்தது 10 முறையாவது ‘வந்து’ சொல்லி விடுகிறார்கள்.

தொலைக்காட்சி சேனல் பேதம் இல்லாமல் இந்த கொடுமை அண்மை வருடங்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது யாருமே இதை கவனிக்கவில்லையா? அல்லது சிந்திக்கவில்லையா? என்ற எண்ணம் நமக்கு வருகிறது. இந்தப் பேச்சாளர்களே தாங்கள் கலந்து கொண்ட, பேசிய நிகழ்ச்சியை ஒரு முறை கவனித்து பார்த்தாலே அவர்கள் செய்யும் இந்த அசிங்கம் நிச்சயம் அவர்களுக்கு தொpந்துவிடும். அவர்கள் அதற்கான வசதிகளும், வாய்ப்புகளும் இல்லாதவர்கள் அல்லவே? குறைந்தபட்சம் அவர்களது நண்பர்களாவது, குடும்ப உறுப்பினர்களாவது இந்த அசிங்கத்தை சொல்லாமல் இருப்பார்களா? மேலும் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள், நிகழ்ச்சி பொறுப்பாளர்கள், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் போன்ற யாருமே அந்த பொருளற்ற, தேவையற்ற, எரிச்சலூட்டும் வார்த்தையை கவனித்து சுட்டிக்காட்டி, மாற்ற முயற்சிக்காமல் இருப்பார்களா என எண்ணத் தோன்றுகிறது.

நான் மாணவர்களுக்கு ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி கொடுக்கும்போது பல காலங்களாகவே தவறாமல் சொல்லும் ஒரு குறிப்பு (Hint) இது: ஆங்கில தொலைக்காட்சி சேனல்களில் காட்டப்படும் செய்திகளையும், விவாதங்களையும் பார்த்து உற்று கவனியுங்கள். ஆங்கில செய்திகளை பார்த்துவிட்டு அன்றே தமிழ் செய்திகளையும் பாருங்கள். முக்கியமான செய்திகள் இரண்டிலும் இடம்பெறும். எனவே ஆங்கில செய்தியில் புரியாதது கூட தமிழ் செய்தியில் புரியும். கூடவே தொடர்ந்து இப்படி செய்வதால், ஆங்கிலத்தின் சொல் அமைப்பு (Syntax) மற்றும் இலக்கணம் (Grammar) உள்மனதில் தானாகவே பதிந்துவிடும் என்பது. அது ஒரு பயனுள்ள முறைதான் என்பதும் இந்த ‘வந்து’ மூலம் நிறுவப்பட்டுள்ளது என்று கூறலாம்.

அது எப்படியென்றால், ‘வந்து’ நிகழ்ச்சிகளை பார்க்கும் நேயர்களின் உள்மனதிலும் இந்த ‘வந்து’ சாத்தானாகப் போய் குடிகொண்டுள்ளது. அவர்கள் சாதாரணமாக பேசும் போதும் இந்த ‘வந்து’ தேவையற்று, மிகச் சரளமாக கூறப்பட்டு வீண்படுகிறது.

மேலும் பிரபல கல்லூரிகளில் முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் பேசும் போதும் கூட இந்த ‘வந்து’ அவர்கள் அறியாமலே வீண்படுத்தப்படுவதை கண்ணுறும் போது தாய்த் தமிழுக்காக வருந்த வேண்டிய கையறு நிலையில்தான் உள்ளோம். பள்ளியிலும், கல்லூரியிலும், பல்கலைக்கழகத்திலும் என்னத் தான் தமிழ் படித்தோம் என்ற வியப்பு மேலோங்குகிறது.

‘வந்து’ என்ற வார்த்தையை சரியாக, தேவையாக பயன்படுத்தப்படவேண்டிய இடத்தில் கூட அதனைப் பயன்படுத்த அச்சப்படவும், யோசிக்கவும் வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறோம்.

தொல்காப்பியரும், இளங்கோவும், பரிமேலழகரும், பெஸ்கி அடிகளும், பாரதியும், பாரதிதாசனும் பேசிய, வளர்த்த, உலகத்தின் மூத்தகுடியாகிய தமிழ் மொழியை தற்காலத்தில் சீர்படுத்த தமிழ் ஆர்வலர்களும், தமிழ் ஆசிரியர்களும், தமிழ்ப்பேராசிரியர்களும் ஆவன செய்யவேண்டும் என்பதே நம் அவா.

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (30-Nov-16, 6:16 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 218

மேலே