கருப்பு பணம்-சிறுகதை

” என் பொண்டாட்டி அம்மா வீட்டுக்கு போய்ட்டா, ஜாலிதான்” சந்தோஷத்தில் ஒரு படத்தில் ஜனகராஜ் குதிப்பது போலவே குதித்தான் கருமுத்து.
மனைவி…அவள் அம்மா வீட்டிற்கு போனவுடன் நண்பர்களை வீட்டிற்கு கூட்டிவந்து எவ்வளவு அரட்டையடிக்க முடியுமோ…அவ்வளவு அரட்டையும் அடித்தான். கையிலிருந்த இருப்பு பணம் கரைந்து விட்டிருந்த்து. மூன்றாம் நாள்…. செலவுக்கு காசில்லாமல் வீட்டிற்குள்ளே படுத்துக் கொண்டான்.
படுக்கையில் தூக்கம் வராமல் புரண்டு..புரண்டு படுத்து….திடிரென்று எழுந்து சமையலறையில் நுழைந்து(இதுவரை சமையலறையின் எல்லை அவன் கால்கள் தொட்டதில்லை) அங்கிருந்த ஒவ்வொரு டப்பாக்களையும் திறந்து பார்த்தான்.
ஒன்றிலும் பணமில்லாமல்.மளிகைப்பொருட்கள் இருந்தன. இருந்தாலும் விடாமல் தேடினான். ஒரு டப்பா கண்களில் பட்டது… அது கடுகு டப்பா…. கடுகு டப்பாவில் என்ன இருந்திட போகுது என்ற அலட்சியத்தில் திரும்பிய போது. அவன் கைப்பட்டு கடுகுடப்பா கீழே விழுந்த்து.
அதிலிருந்து…. ”பாண்டியன் சபையில் கண்ணகி உடைத்த காற்சிலம்பிலிருந்து பரல்கள் சிதறுவதுபோல…… நாணயங்களும்…..ஐநூறும்…ஆயிரமாக ரூபாய்த்தாட்கள் கீழே விழுந்தன.
அவனுக்கு மூக்கின்மேல் கோபம் ”பிள்ளையாரைப்போல” சம்மணமிட்டு உட்கார்ந்து கொண்டது.
”வரட்டும்…வரட்டும் பார்த்து கொள்ளலாம்” எத்தனை நாள் அவளிடம் ” ஒரு நூறு ரூபாய் கேட்டிருப்பேன்” கொடுக்காமல் என்னை எப்படி அலைக்கழித்தாள். இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டுமென முடிவெடுத்தான்.
ஒரு வாரம் கழிந்தபின் ..அம்மா வீட்டிலிருந்து மனைவி வீட்டுக்கு வர… கருமுத்து ஒன்றும் தெரியாத து போல“““ கீது செல்லம் ஒரு நூறு ரூபாய் இருந்தா கொடேன்” என்றான்.
”ஆங், எங்கிட்ட அவ்வளவு பணமிருக்கிறது…நீங்க அளந்தபடிதானே அளக்கிறீங்க” எப்படி இருக்கும்” முகத்தை திருப்பிக் கொண்டு போனாள்.
”ஒன்கிட்ட பணமில்லையா? ”இதெல்லாம் என்ன ? பணமா இல்லையா? எல்லாமே நான் சம்பாதித்து கொடுத்த்துதானே. எனக்கில்லாதா பணமா.
இனிமேல்… ”ஒன் கையில பணம் வைச்சிருக்க வேணாம்… நானே குடும்ப பொறுப்பை பார்த்துக்கறேன். இது நாளையிலிருந்து அமுலுக்கு வருகிறது” என அரசாணையைப் போல அதிரடி உத்தரவிட்டான்.
”அதெல்லாம் சரிவராதுங்க….” பொம்பளைங்க கையிலே எப்பவுமே பணமிருக்கணுங்கோ… அப்படி இருந்தா ஒரு ஆத்திர அவசரத்திற்க அந்த பணம்தான் உதவுங்கோ…புரிஞ்சுக்கோங்க” என்றாள் கீது என்ற கீதா.
”ஒண்ணும் வேணாம்….அந்த பணம் மொத்தம் அப்படியே ”என் பாங்க் அக்கௌன்ட்ல போட்டுடுறேன். வேணுமின்னா…தேவைப்படும்போது எடுத்துக்கிடலாம்” என்றான்.
வேண்டாங்க…இது சரிப்படாது…. பொம்பளைங்க எது செய்தாலும் காரணமில்லாம செய்ய மாட்டேங்க, என்று விடாப்பிடியாக கெஞ்சியும். அவளிடமிருந்த மொத்த பணத்தையும் பிடுங்கி அவனுடைய வங்கி கணக்கில் செலுத்தி விட்டு அன்று நிம்மதியாக தூங்க போனான்.
” தூக்கம் கண்ணைக் கட்டுகையில்…..” தொலைக்காட்சியில்…… இன்று இரவு முதல் ரூபாய் ஆயிரமும்…ஐநூறும் செல்லாது” என்று அறிவிப்பு வெளியானது. ” கீது… நான் ஒனக்கு நல்லதுதான் செய்திருக்கேன். ஒன்கிட்ட இருந்த ஆயிரமும்…ஐநூறும் செல்லாது-ன்னு அறிவிச்சிருக்காங்க. சந்தோஷப்படு என மனைவிக்கு ஆறுதல் சொன்ன அதே நொடியில்…… வங்கியில் எவ்வளவு வேணுமின்னாலும் டொபசிட் செய்யலாம். ஆனால் நீங்கள் இவ்வளவு பணம்தான் எடுக்க வேண்டும் என்று வரையறை செய்த அறிவிப்பும் வெளியானது.
முதல் அறிவிப்பில் சந்தோஷமும்..அடுத்த அறிவிப்பில் துக்கமும் கலந்து அவர்களின் தூக்கத்தை கெடுத்தன.
மறுநாள்……..அந்த கவலையிலேயே…. அலுவலகம் கிளம்ப ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்து நெருக்கடியான சாலை ஒன்றில் சென்ற போது… குறுக்கே வந்த தண்ணீ லாரி…இவன் ஓட்டிவந்த ஸ்கூட்டரை மோதி...அவனை அந்தரத்தில் தூக்கியடித்த்து
”ஐயோ…என அலறல் சத்த்த்தோடு மயங்கி விழுந்தான்.
மயக்கம் தெளிந்து கண்விழித்து பார்த்தால்…. ஆஸ்பித்திரி படுக்கையில் அங்காங்கே காயத்துடன் இருந்த்தை உணர்ந்தான். அருகில் கண்ணிரும் கம்பலையுமாக மனைவி கீது இருந்தாள்.
”என்னங்க….. ஆஸ்பித்திரி பில் கட்டணுமாம்… என்கிட்ட இருந்த்தையும் பிடுங்கி பேங்க்ல போட்டுட்டிங்க” இப்ப என்ன பன்றது?
புலம்பினாள்.
அவள் புலம்பல் சத்தம் கேட்டு…”அடியே புலம்பாதே….” இந்தா ஆஸ்பித்திரி பில் கட்ட பணம்…கட்டிட்டு வா” என்று கீதுவின் அம்மா கொடுக்க… ”ஏம்மா இவ்வளவு பணம் ஏதும்மா… நாட்டுல பணமில்லாம ஒரே களேபரமா இருக்கு… ஒன்கிட்ட கட்டுக்கட்டா இவ்வளவு பணமிருக்கே” என்றதற்கு….” எல்லாம் ஒன்னோட அப்பாவுக்கு தெரியாம சேர்த்து வைச்சிருந்த சிறுவாடுதான் இது. நீ சேர்த்து வைச்சிருந்த்து ஆயிரமும்.ஐநூறுமா இருக்கலாம். நான் சேர்த்து வைச்சது… நூறு ரூபாய் தாட்கள்தாண்டி. ” எப்போ … பெண்களுக்கு துன்பம் வர்ற மாதிரி திட்டத்தை அரசாங்கம் அமுல்படுத்துதோ…அப்பவே அந்த அரசாங்கம் மக்கள் மத்தியிலே மவுசு குறைஞ்சிடுச்சும்-ன்னு அர்த்தம்டி என்று விளக்கினாள் பள்ளிக்கூடமே எட்டிப்பார்க்காத கருத்தம்மா.

”மாமியாரின் விளக்கத்தை கேட்ட கருமுத்துவின் காதில்….பழைய படப்பாடலான ” சேர்த்த பணத்தை செலவு செய்ய பக்குவமா அம்மா கையிலே கொடுத்து போடு செல்ல கண்ணு.அதை ஆறு நூறு ஆக்குவாங்க செல்லக்கண்ணு” ஒலித்ததில்….”பணத்தை கையாள்வதில்… பெண்களுக்கு நிகர் பெண்கள்தான் என்று உணர்ந்தான் கருமுத்து.

எழுதியவர் : கே. அசோகன் (30-Nov-16, 10:45 pm)
சேர்த்தது : கேஅசோகன்
பார்வை : 337

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே