முதுமை

முதுமை!
வாழ்க்கைப் புத்தகத்தில்
வாசிக்க விரும்பாத பக்கம்.
தவிர்க்க முடியாத
சந்தித்தே தீர வேண்டிய உறவு.
ஓடிப் போன இளமையை
போலிகளைக் கொண்டு
விரட்டிப் பிடிக்க விரும்பும்
பருவம்.
உறவுகளின் உதாசீனத்தால்
நிலைகுலைந்து மனம்
தடுமாறி பொய் முகங்களோடு
போராட வேண்டிய கட்டாயம்.
அனுபவ தழும்புகளைத்
தடவிப்பார்த்து ஆறுதல்
அடையும் பருவம்.
உறுப்புகள் ஒத்துழைக்க
மறுப்பதால் நோயும்
மறதியும் ஆதிக்கம்
செய்யும் பருவம்.
வாய் பேச வாடிக்கையாளரை
கண் தேடும் பருவம்.
இயலாமல் கணவனும்
முடியாமல் மனைவியும்
முரண்டுப் பிடிக்கும்
காலத்தை முன்னேற்றிச்

செல்ல வேண்டிய பருவம்.

வார்ப்புகளுக்காக
வாழ்க்கையை
தொலைத்து விட்டு
வார்ப்புகளையும்
வாழ்க்கையையும்
தேடி ஏங்கித் தவிக்கும் பருவம்.
முதுமை சாபம் என்றால்
முதுமையில் தனிமை
விமோசனம் இல்லாத சாபம்!
மீனாகோபி.

எழுதியவர் : மீனாகோபி (4-Dec-16, 10:51 am)
சேர்த்தது : Meena gopi
Tanglish : muthumai
பார்வை : 120

மேலே