இழந்தக் காலங்கள்
வாழவுள்ளக் காலங்கள் வசந்தமோ வறட்சியோ
வரவவுள்ளக் காலங்கள் மகிழ்வோ வருத்தமோ
வாழ்ந்திட்டக் காலத்தில் இழந்தக் காலங்களோ
வந்திடுமா மீண்டும்தான் நாமும் காண்போமோ !
நிலவிய அமைதியும் கடந்துசென்ற வாழ்வையும்
உலவிய பொதுநலமும் உன்னத தலைமுறையும்
வீசிய தென்றலாய் மகிழ்ந்த பொழுதுகளையும்
இழந்தக் காலத்தின் மறையாத நினைவுகளே !
இணைந்து வாழ்ந்த குடும்பங்களால் இன்பமும்
சமத்துவ நெஞ்சால் விளையாத சாதிவெறியும்
சுயநலக் கொள்கைகளை சுமந்திடா உள்ளமும்
நிகழ்கால வாழ்வில் காணாத நிலையன்றோ !
எழில்மிகு கிராமம் ஏற்றத்தாழ்விலா எண்ணம்
கவர்ந்திடும் சுற்றுச்சூழல் மாசில்லாக் காற்று
தட்டுப்பாடில்லா குடிநீர் கட்டுப்பாடான சமூகம்
இழந்தக் காலத்தில் இருந்திட்ட சூழ்நிலையே !
சீர்மிகு நிர்வாகமும் சீரழியா கலாச்சாரமும்
மனிதம் நிறைந்த மாறுபட்ட சமுதாயமும்
நினைவில் நிற்கும் நினைவுச் சின்னங்கள்
கனவிலும் வந்திடா இழந்தக் காலங்கள் !
பழனி குமார்