அவள் ஓர் இலக்கியம்
மருதாணி மைப்பூசிய மென்மைப் பாதங்கள்
ஒருமுறையேனும் தீண்டாதோ?... ஏங்கிடும் புல்வெளிகள்...
விருட்சத்தின் தளிராய்த் துளிர்த்திடும் கைகள்
கருணையோடு கொஞ்சாதோ?... கசிந்திடும் பலவிழிகள்......
கன்னத்தில் விழுந்திடும் பனித்துளியின் தழும்புகள்
முகத்தில் பருக்களாய் உருவம் கொண்டதே...
காற்றில் பறந்திடும் இலவம் பஞ்சுகள்
மஞ்சத்தில் உன்னாலே மயக்கம் கொண்டதே......
இறப்பின் காலமறிந்து நீள்குழலில் இடங்கேட்கிறது
தேன்துளிகள் சேகரிக்கும் செண்பகப் பூக்கள்...
பிறப்பின் வாசமறிந்து கால்களில் வரங்கேட்கிறது
கொஞ்சிப் பேசிடும் வெள்ளிக் கொலுசுகள்......
உச்சந் தலையில் உறங்கும் பூவில்
அன்ன நடையில் சின்ன இடையும்
எடைத் தாங்காது உடைந்துப் போகுமே...
மழையின் துளிகள் கதறி அழுதிடுமே......
பொன்னில் நனைத்து மின்னலைக் குழைத்து
கன்னல் அமுதில் நீராடும் பூஞ்சிலையே...
உன்னழகை எழுதாது எழுதுகோலும் உறங்காது...
என்றன் விரல்களும் சரித்திரம் படைக்காது......