உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் விடியும் பொழுதில்- கட்டுரை- கவிஜி

இரண்டு பாடல்கள் என்னை ஒரு வார காலமாக தொடர்கின்றன. மனம் முணுமுணுக்கிறது. உதடு மௌனிக்கிறது. உள்ளுக்குள் உருளுகிறது. உலகம் நிற்கிறது. கணத்தில் பெண்ணாக மாறி விடும் அற்புத சங்கீதத்தை ஆணாகவே உணர்கிறேன். பெண்களின் ஆசை தான் எத்தனை அழகானது. அற்புதமானது. அந்தரங்கமானது. ஆகச் சிறந்த ஞாபகங்களை அவர்களால் காலத்துக்கும் உருவாக்கிக் கொண்டே இருக்க முடிகிறது.


ஆசை நாயகனே சௌக்கியமா......உந்தன் நலம் நாடும் பிரியமானவளின் கடிதம்

உன் மார்பில் விழி மூடித் தூங்குகிறேன்.....தினமும் கனவில் உன் ஆசை முகம்........தேடி ஏங்குகிறேன் விடியும் பொழுதில்....

எந்தன் வளையல் குலுங்கியதே.......கொலுசும் நழுவியதே.......வெக்கத்தில் கன்னங்கள் கூசியதே
மனம் கா...............................லடி(இந்த இடத்தில் சின்னகுயிலின் குரல் ஒரு வித தவிப்போடு நீண்டு ஓர் உயரம் சென்று இறங்குகையில்... கண்கள் விரிய காது குளிர்ந்தேன்.) ஓ.....................................சையை எதிர்பார்த்து துடிக்கின்றதே.................................. அன்பே ..

துடிக்கின்றது என்று மூச்சு வாங்க பாடி முடித்து ஒரு சிறு இளைப்பாறலின் நிரவலில்.. .................."அன்பே" என்று மீண்டு சொல்லும் போது மனதுக்குள் ஊடுருவும் பெண் பற்றிய கைகள் தானாகா பூவாகிறது. காட்சியில் சட்டென வந்து தேவயானியின் கம்மலை காதலோடு தட்டும் விஜய் மறுகணமே காணாமல் போவதில் அதிசயிக்கிறது மீண்டும் மீண்டும் அதே காதல்.

உன் மார்பில் விழி
மூடித் தூங்குகிறேன் தினமும் கனவில்
உன் ஆசை முகம்
தேடி ஏங்குகிறேன் விடியும் பொழுதில்

கல்யாண ஆசை பொதுவானது. பெண்ணுக்கு அது நாணமாகிறது. கவிதையாகிறது. தேவாயானியின் அசட்டுத்தனமான முக பாவனைகள் ரசிக்க வைக்கிறது. அழகி என்று ரகசியிக்க வைக்கிறது.

சின்னக் குயில்கள் உன்னை உன்னை நலம் கேட்குதா
நெஞ்சில் பரவும் அலை அலை உன்னை ஈரம் ஆக்குதா
மெல்ல நகரும் பகல் பகல் யுகம் ஆகுதா
மூச்சே விட்டதால் தலையணை அது தீயில் வேகுதா

நெஞ்சம் எதிலும் ஒட்டாமல்
கண்ணில் கனவும் வற்றாமல்
தினமும் தினமும் உருகும் மனது
ஏன் இந்த நிலைமை தெரியவில்லை
இந்தப் பரவசம் உனக்குள்ளும் இருக்கிறதா
அன்பே

ஏன் இந்த நிலைமை தெரியவில்லை என்று ஓர் ஏகாந்த நிலையை நதி கொண்ட வளைவாய் மதி முழுக்க நனைந்த படி காதலை கேள்வியாக்கி புரிய முயலும் நொடியில்... அதன் நீட்சி இப்படி முடிகிறது. இந்தப் பரவசம் உனக்குள்ளும் இருக்கிறதா என்று கேட்பதில்...அற்புதமான பரவச நிலையை இசையும் இடையே விழும் வெளியும் நமக்குள் கடத்துவதில்... உதடு தானாக முந்திக் கொண்டு ......"அன்பே" என்று ஆழ் மனதுக்குள் இருந்து எழும் அதிர்வை இங்கே இன்னும் சொல்ல வார்த்தை இல்லை. வாக்கியமாகி மிதக்கிறேன்.

கடிதம் மிதக்கும் தோப்பில்... அவளே வரிகளாகி ஓடி ஆடும் மிதந்து தவழும் நிலையை வெறுமனே ரசிக்க முடியாத இந்த மனம் பாடாய் படுகிறது. பரவசத்தில் சுடுகிறது.

ஏராளம் ஆசை நெஞ்சில் உண்டு......அதை எழுதிட நாணங்கள் தடுக்கிறதே.......எனும் போது கேமராவை பார்த்து சிரித்துக் கொண்டே நாணம் கொள்ளும் தேவயானியை காலம் கடந்து சென்று ரசிக்கிறேன். காதல் கொண்ட பெண் மனதின் வெளிப்பாடு.... பூஜிக்கும் மனதுக்குள் நிகழும் ரசாயன மாற்றம்... தேக நடுக்கம்.... மிதப்பு சிந்தனை என்று ஒரு வட்டத்தில் உடைந்து சிதறும் பெரு வெடிப்பின் அடுத்த நகர்வு என்றே நம்புகிறேன்.
மீண்டும் இடைவெளி தாண்டி அன்பே என்கையில்.. தானாக சிரித்துக் கொள்கிறேன். அதே போல அடுத்த பாடல் ஒன்று. இங்கே ரம்பா...

அதே காதல். அத கல்யாணம். ஆசை மட்டும் மாறுபடுகிறது. அத்தனைக்கும் ஆசைப் படுதலே வாழ்வின் சூட்சுமம். அது அழகு நிறைந்த ஆனந்த சிறக்கும் கூட.

காஷ் மீர் ரோஜா தோட்டம் அது தேடுது காதலைத்தான்...அழகனைத் தேடி அணைத்திட வேண்டி தூண்டுது ஆவலைத்தான். கல்யாண சேலை கட்டி கழுத்தினில் வேர்வை வழிந்திட வருவாளோ என்று குரூப் பாட வெட்கம் சுமந்து வியர்வை பூக்க வைக்கும் ரம்பா வின் மனம் காட்சியில்... மாயாஜாலம் நிகழ்த்துகிறது. அடர்த்தியான நீளம் கொண்ட ஆசைகளின் அசைவை பாடல் வரிகளும் காட்சி படுத்திய நெறிகளும்.... நம்மை ஒருவித உற்சாக துள்ளலுக்கு கொண்டு செல்வதை கண்டிப்பாக மறுக்க இயலாது. மெய்ம் மறக்க இயலும் சதுர பொக்கிஷத்தில்... காற்றினில்... படக்கென்று எட்டிக் குதித்து ஒரு கட்டத்தில் நாயகன் விஜய் வருகையில்... ஹே...... என்று சொல்லாத சொல் ஒன்று பாடல் நீட்டுகிறது.

"காலை மாலை தேவியின் கோவிலில் பூஜைகள் செய்வானோ...." என்று கேட்டு நாணம் பூசி நகர்கையில்... எங்கிருந்தோ வந்து ஒட்டிக் கொள்கிறது பூத்து விட்ட மஞ்சள் நிறம் ஒன்று.

"வெள்ளிக் கொலுசின் சங்கீதம் என் காதில் கேட்கிறதே... என் கைகளின் மருதாணியில் உன் வாசல் வீசுதே..."ஒரு திருமணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் எத்தனை பெரிய திருப்பத்தை கொண்டிருக்கிறது. அது ஆசைகளாலும்... கனவுகளாலும்.. அற்புதங்களாலும் கட்டப் பட்ட ஆகாயம். அதற்கு இரவு பகல் இல்லை. உணர்வும் உணர்ச்சியும் மட்டும் தான். அங்கே காதலும் காமமும் கூடு விட்டு கூடு பாய்ந்து கொண்டே இருக்கிறது.

இந்த பாடல் ஆரம்பிக்கும் போதே ரகுவரனைக் காட்டுவார்கள். இந்த ஆள் சிரித்தாலும் அழகு. சிந்தனை செய்யும் நேரத்திலும் அப்படியே.

இந்த பாடல் ரம்பாவுக்கு விஜய்க்கும் என்றாலுமே அதனூடாக ரகுவரனுக்கும் பானுபிரியாவுக்கும் இடையே ஒரு மெல்லிய கதை நகர்ந்து கொண்டிருக்கும். ஏதோ ஊடல். சந்தித்துக் கொள்ளும் நேர் எதிர் திசையில் இருவரும் கணம் ஒன்றில் பார்த்துக் கொள்வதும் ஏதோ நினைவுக்குள் தங்களை மீட்டெடுத்துக் கொள்வதும்....அத்தனை அழுத்தமாக பதிவு செய்யப் பட்டிருக்கிறது. அத்தனை கூட்டத்திலும் ஒரு தனிமையை சுமக்க இந்த மனிதனின் நடிப்புக்கு தெரிந்திருக்கிறது. குளோஸ் வைக்காத காட்சியில் கூட பிரேமில் தனித்து தெரிந்து ஆகச்சிறந்த கலைஞன் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார்.

மலர்ந்த முகம். சடுதியில் தனித்து விடப்படும் அகம் என பானுபிரியாவும் சலைக்கவில்லை. எனக்கு தெரிந்து விஜய்யின் நடிப்பில் ரகுவரனின் பாதிப்பு எப்போதுமே இருந்திருக்கிறது. அவரை தன் படங்களில் தொடர்ந்து பயன் படுத்திக்க கொண்டார் என்பது கூடுதல் அழகு.

ஓர் இடத்தில், ரகு அமர்ந்திருப்பார். பானு ரம்பாவை அழைத்து கொண்டு வந்து அனுப்பி விட்டு இயல்பாக அங்கும் இங்கும் பார்த்து விட்டு இடப்பக்கம் அமர்ந்திருக்கும் ரகுவை பார்ப்பார். பானு வந்தது முதலே அவரை ஒப்புக்கொடுத்தலின் பாவத்தோடு பார்த்துக் கொண்டிருப்பார் ரகு. இருவரும் ஒரு கணத்தில் நேருக்கு நேர் பார்த்து விட்டு பின் அவர் குனிந்து கொள்வதும் பானு நகர்ந்து விடுவதும்.... புதுக்கவிதைக்குள் மரபின் முடிச்சு இன்னும் தீர்க்கமாகவே போடப்படுகிறது. ஏதோ தடுக்கும் ஊடலின் தேடலோடு இருவரும் கடந்து போவதில்... ஆழம் இந்த காதல் என்று நம்பிய தருணத்தில் மீண்டும் மீண்டும் இதே காட்சியை காண்கிறேன்.

காலத்தின் மீது கல் எறிகிறேன். திருப்பித் தா எங்கள் கலைஞனை.....!

கவிஜி

எழுதியவர் : கவிஜி (20-Dec-16, 8:21 pm)
பார்வை : 513

மேலே