அந்த நாள் ஞாபகம் வந்தது

கிழக்கிழங்கையிலே புகழ்பாடும் திருகோணமலையிலே அமைந்துள்ள குக்கிராமம் ஒன்று. அங்கே ஏறத்தாழ 200 வரடங்களுக்கு முன் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்தவர்கள் கண்ணன் என்னும் அந்த வயோதிபரின் உறவினர்கள்.

கண்ணனுக்கு வயது ஏறத்தாழ அறுபத்தைந்திற்கும் எழுபதிற்கும் இடையில் இருக்கும். அவரது மனைவி பொன்னி ஐம்பத்தைந்திற்கும் ஐம்பத்தெட்டிற்கும் இடைப்பட்ட வயதுடையவள். அன்புக்கு ஓர் ஆணும், ஆசைக்கு ஓர் பெண்ணுமாக இருபிள்ளைகள். அவர்களோ தங்களின் பருவம் அடைந்து இல்லற வாழ்வில் புகுந்து இனிதே வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். கண்ணனும் பொன்னியும் இன்னும் தனிக்குடும்பம் நடாத்திக்கொண்டே இருக்கின்றனர்.

கண்ணனின் வரலாற்றை புரட்டினால் அது ஓர் பெரிய கதை. காரணம் அவன் பெயருக்க மட்டுமல்ல அழகிலும், அடுத்தவர்களுடன் பழகுவதிலும் கண்ணனாகவேதான் விளங்கினான். கண்ணனின் அப்பா வேலாயுதர். அவர் இவரை பல வழிகளிலும் செல்லமாகவே வளர்த்தார். பாடசாலைக்கு ஆரம்பப் பாடம் படிக்க பத்த மைலுக்கு அப்பாலுள்ள பாலர் பாடசாலைக்கு அனுப்பினார். பாடசாலையில் கல்வியில் சிறந்து பண்பில் உயர்ந்து விளங்கிய கண்ணனை அவரத ஆசிரியர் அருளப்பர் மிகவும் பாராட்டி உயர்ந்த நிலைக்கு கொண்டு வரவேண்டும் என பேராசைப்பட்டார். கண்ணனின் அப்பா வேலாயுதரிடம் இதைப்பற்றி கூறியபோது வேலாயுதர் என்ன சொன்னார் தெரியுமா? 'ஒரேயொரு மகன் கண்ணுக்குக் கண்ணாகவும், உயிருக்கு உயிராகவும் வைத்திருக்கிறேன். எனது காணி, பூமி, ஆடு, மாடுகளைப் பார்க்க வேறு யாரும் இல்லை. எனவே அவனை வெளி இடத்திற்கு அனுப்பி படிப்பிக்க முடியாது. இந்தப்பாடசாலையில் எதுவரை எதுவரை படிக்க முடியுமோ அதுவரை படிக்கட்டும். அதன் பின்பு வாழையடி வாழையாக இருந்துவரும் என்னுடைய சொத்துப்பத்துக்களை பார்த்துக்கொண்டு ஊரிலேயே இருக்கட்டும்.' என்றார்.

கிராமத்தப் பையன் கண்ணனுக்கு அப்பாவின் வார்த்தை பஞ்சாமிர்தமாகவே இருந்தது. ஆனால் அன்பும் அறிவும் திறமையும் மாணவர்களின் எதிர்காலம் நன்கு அமையவேண்டும் என நல்மணம் படைத்த அந்த அன்பு அருளப்பர் ஆசிரியருக்கு இவனை எப்படியும் தந்தை சொல்லிய அந்த மந்திரத்தை மறப்பிக்க மிகவும் சிரமப்பட்டார். நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்களாகி இப்போது கண்ணன் ஆறாம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கின்றான். இப்போது தந்தையின் கவனம் மகனின் பக்கம் வேகமாகச் சென்றது. ஆசிரியருக்கோ இவனை வெளிப்பாடசாலைக்கு அனுப்பவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி விட்டது.

ஒருநாள் அருளப்பர் கண்ணனை தனியே அழைத்தார். கண்ணனும் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பவற்றைக் கொண்ட பன்னிரெண்டு வயது மாணவன். அறிவில் சிறந்த ஆசிரியர் அவனை மிகவும் அன்புடன் 'தம்பி எதிர்காலம் என்ன? எப்படி அமையும் என்பதை கைரேகை சாஸ்திரியும், ஜாதக சாஸ்திரியும் சொல்லி அமைவதில்லை. தந்தை சொல்மிக்க மந்திரமில்லை. என்பது உண்மை. ஆனால் தந்தை அவரது பொருள் பண்டத்திற்கு பாதுகாப்பு தேடுகிறாரேயொழிய உனது எதிர்காலத்தில் அதை எப்படி பாதுகாத்து பலன் அடைவதற்கு ஏற்ற முறையில் கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணம் சிறிதேனும் இல்லை என்பதை நான் பல வருடங்களுக்கு முன்பே அறிந்துவிட்டேன். அதனால் அவருடன் பேசி எனது பொழுதை கெடுக்க விரும்பவில்லை. எனவேதான் உன்னிடம் எனது உண்மையான அன்பை வெளிப்படுத்தி கூறுகின்றேன். நீ அடுத்த பட்டிணத்திலுள்ள பாடசாலைக்கு சென்று பாடம் படித்தால் பல நூறு நன்மைகள் பெறலாம். தந்தையின் பரம்பரைச் சொத்தையும் பாதுகாக்கலாம். பள்ளிப்பருவம் மீண்டும் வரமாட்டாது. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளைவது கஷ்டம். அப்படி வளைய வைத்தாலும் உடைந்துபோகும். எனவே நான் சொல்வதை நீ ஏற்று இவ்வருட இறுதிப்பரீட்சையின் பிறகு அங்கே போய் படிக்க ஏற்பாடு செய்கிறேன். நீயும் அதற்கேற்ற முறையில் படி' என்றார்.

ஆசிரியர் கூறிய அவ்வார்த்தைகள் அனைத்தும் அவனுக்கு வேப்பம் பழத்தை அப்படியே வாயில் வைப்பது போலவேதான் இருந்தது. எப்போதுடா இந்த ஆசிரியர் என்னை இங்கிருந்து அனுப்புவார், எப்போது வீட்டிற்கு போவேன் என்று எதிர்பார்த்துக் கொண்டேயிருந்தான் கண்ணன். 'சரி கண்ணா! நீ வீட்டிற்கு போய் அப்பா அம்மாவிடம் சொல்லி இந்த நல்ல முடிவிற்கு வழியமைத்தக்கொண்டு நாளை காலை என்னிடம் வந்து சொல்லு' என்றார்.
அன்று கண்ணன் வீடு வந்ததும் என்ன நடந்தது தெரியுமா? கேட்டால் பாவம் அப்பாவி ஆசிரியருக்கு ஏன் இந்த வேலை என்றுதான் கூறவேண்டும். கண்ணனின் அப்பாவும் அம்மாவும் 'என்னடா அந்த ஆசிரியன் எங்கள் பிள்ளையை எங்களிடமிருந்து பிரித்து வேறு எங்கேயோ அனுப்ப முயற்சிக்கிறான். இனிமேல் மகனே நீ அந்த பள்ளிக்கு போகவேண்டாம். படிக்காவிட்டால் பரவாயில்லை. பணமா இல்லாமல் போய்விடும். பைத்தியக்கார ஆசிரியன். அவனிடம் ஒன்றும் இல்லை என்பதற்காக எங்களிடம் உள்ள பொருள் பண்டங்களும் அப்படியே பாதுகாப்பு இல்லாமல் அழியட்டும் என்று நினைக்கிறான்.' என்றனர். மேலும் கண்ணனுக்கு ஆசிரியர் கூறுவது எல்லாம் பகடைக்காய் என்றும் போலி வார்த்தை என்றும் கூறினர். கண்ணனும் ஏமாந்து விட்டான். என்ன செய்ய தாயிற் சிறந்த கோவிலுமில்லை. தந்தை சொல்மிக்க மந்திரமுமில்லை என்பதை மட்டும் சிறுவனாகிய கண்ணன் தெரிந்துகொண்டானே தவிர அதன் முழுப்பொருளையும் தெரிந்தகொள்ள காலம் காணாமல் போய்விட்டது. கண்ணன் பாடசாலைக்கும் இப்போது போவதில்லை. பல மாதங்களாகியும் வராத கண்ணனைப் பார்க்க ஆசிரியர் அவனது வீட்டிற்கு சென்றார். ஆசிரியருக்கு அடியும் உதையும் மட்டும் கொடுக்காமல் கண்ணனின் அப்பாவும் அம்hவும் பல இழிவார்த்தைகளால் அவரை வரவேற்றனர். நிறைகுடம் தளும்பாது என்பது உண்மை. ஆசிரியரும் ஒரு நிறைகுடம். தளும்;பவில்லை. இன்முகம் காட்டினார். இரங்கினார். அப்போதும் அவர்களுக்கு மென்மேலும் கோபந்தான் வந்தது. எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்ட ஆசிரியர், 'கண்ணன் உங்கள் பிள்ளை. ஆனால் என் மாணவன். அவனது எதிர்காலம் நல்ல முறையில் அமைவது எனக்கு விருப்பம். அது கல்வியில் சிறந்து பணத்தில் உயர்ந்த இருப்பது. ஆனால் உங்களுக்கு பணம் மட்டும் உயர்ந்தால் போதும். அவனுக்கு ஏன் படிப்பு என்கின்றீர்கள். எனவே கண்ணனை நீங்கள் எப்படி வளர்த்தாலும் சரி. அப்படியே நானும் வரம்புரிகிறேன்.' என்று சொல்லிக்கொண்டே வீதிக்கு வந்தார் ஆசிரியர் அருளப்பர்.

அங்கே கண்ணன் தெருவிலே விளையாடிக்கொண்டிருந்தான். ஆசிரியர் அவனைக் கண்டு 'தம்பி கண்ணா!' என்றார். அவ்வளவுதான். கண்ணன் எப்படி எங்கே போனான் என்று ஆசிரியரால் ஊகிக்க முடியவில்லை. அவ்வளவு தூரம் தந்தையின் மந்திரம் மேலாகிவிட்டது. ஆசிரியரும் நடந்த நிகழ்ச்சியை கனவாக நினைந்து அதை மறந்து, நித்திரை விட்டு எழுந்தவர்போல் வீடு வந்து விட்டார். கண்ணனும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்த இல்லற வாழ்வில் புகுந்து இன்பமாக வாழ்ந்து வந்தான். பொருள்பண்டத்தில் திகழ்ந்து கல்வியில் குறைந்து பணம், பொருள் என்பவற்றை பாதுகாக்க முடியாமல் குருடன்போல் இருந்தான். வருமானம் ஐந்து ரூபாவாக இருந்தது. ஆனால் மீதி ஐம்பது சதமாகவே இருந்தது. மிகுதிப் பணம் எங்கே எப்படி என்ன நடந்தது என்று தெரியாது. இந்நிலையில் பலகாலம் வாழ்ந்துகொண்டிருந்தான். இவரது நிலையைக் கண்ட ஊரார்களும் மற்றவர்களும் இவரை ஏமாற்றி வாழத்தொடங்கினர். கண்ணனும் கஷ்டப்படும் நிலைக்கு ஆளாகவேண்டிய நிலைக்கு வந்துவிட்டார். அன்றுதான் அவருக்கு தனது பன்னிரெண்டாம் வயதில் ஆசிரியர் அருளப்பர் கூறிய வார்த்தைகளும் அந்த நாள் ஞாபகமும் வந்தது.

சிவஞானம் சித்திரவேல்

எழுதியவர் : சிவஞானம் சித்திரவேல் (27-Dec-16, 4:13 pm)
பார்வை : 524

மேலே